ஒலிபெருக்கியில் தொழுவிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்: மடத்தனங்களை இனியும் அனுமதிக்க முடியாது

🕔 May 10, 2019

– அஹமட் –

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையினை அடுத்து பள்ளிவாசல்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

பள்ளிவாசல் ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பு) சொல்வதைக் கூட, குறைந்த சத்தத்தில் சொல்லுமாறு ஜம்இய்யத்துல் உலமா கூறியுள்ளதாக அறிய முடிகிறது.

இந்தநிலையில், பல இடங்களில் பள்ளிவாசல்களில் நடத்தும் தொழுகையை வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் சத்தமாக ஒலிக்க விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் இந்த நிலைமை அளவுக்கதிகமாக உள்ளது.

முஸ்லிம் பிரதேசங்களில் எட்டிய தூரத்தில் பள்ளிவாசல்கள் உள்ளன. எனவே, சத்தமாக ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ சொல்லித்தான் தொழுகைக்கு அழைக்க வேண்டும் என்கிற எந்தவித தேவையும் இல்லை.

இது ஒருபுறமிருக்க, பள்ளிவாசலுக்கு உள்ளே இருப்பவர்களுக்கு தொழுகை நடத்துவதை, வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் ஒலிக்க விட வேண்டிய எந்தவிதத் தேவையும் கிடையாது. தர்க்க ரீதியாகவும் இது மடத்தனமான செயலாகும்.

இந்த மடத்தனத்தைத் தவிர்க்குமாறு அந்தந்த ஊரிலுள்ள முற்போக்கானவர்கள் கூறினாலும், நாட்டு நடப்பு விளங்காத முட்டாள்கள் கேட்பதாக இல்லை.

மறுபுறம், அந்தந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனமும், இந்த விடயத்தில், இறுக்கமான நடைமுறையை கடைப்பிடிக்குமாறு பள்ளிவாசல்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதாகவும் தெரியவில்லை.

முஸ்லிம் சமூகத்தினுள் இருக்கின்ற – விடயம் தெரிந்தவர்களும், நாட்டு நடப்பை சரிவரப் புரிந்தவர்களும் கூறுகின்ற விடயங்களை உதாசீனம் செய்தமையினால்தான், இன்று பயங்கரவாதக் கும்பலொன்று முஸ்லிம் சமூகத்திலிருந்து உருவாகி, தற்கொலைத் தாக்குதல் நடத்திவிட்டு, ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் தலைகுனிய வைத்துவிட்டுத் தொலைந்து போயிருக்கிறது.

எனவே, இனியும் – இவ்வாறான முட்டாள்தனங்களுக்கு இடமளிக்க முடியாது.

பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கிகளில் தொழுகை நடத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

முஸ்லிம்கள் முழுமையாக வாழும் ஊர்களில், ஒலிபெருக்கியில் தொழுகை நடத்தினால் என்ன? பிரச்சினை இல்லைதானே? என்று, ஒரு லூசுக் கூட்டம் கேள்வி கேட்டுக் கொண்டு வரும். முதலில் அவர்களை பிடித்து ‘அடைக்க’ வேண்டும்.

இவ்வாறான அரை லூசுகள் கருத்துக் கூறிவிட்டு, தங்கள் – தங்கள் வேலைகளைப் பார்க்கக் கிளம்பி விடும். கடையிசியில் இந்த மடத்தனங்களை எதிர்த்தவர்களும் சேர்ந்து, இதற்கான ‘வினை’யை ‘அறுக்க’ வேண்டி வரும் என்பதுதான் யதார்த்தமாகும்.

ஆகவே, ஒலிபெருக்கிகளில் தொழுகை நடத்துவதை அனைத்துப் பள்ளிவாசல்களும் நிறுத்த வேண்டும். அதனையும் மீறி, நடத்தும் பள்ளிவாசல்கள் குறித்து, ஜம்இய்யத்துல் உலமா சபையிடம் தெரியப்படுத்தலாம்.

ஜம்இய்யத்துல் உலமா சபையும் இது விடயத்தில் அலட்சியமாக இருந்தால், சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றவர்களின் கவனத்துக்கு, இதனைக் கொண்டு செல்வதே இறுதித் தீர்வாக அமையும்.

இனியும் முஸ்லிம் சமூகத்துக்குள் சமயத்தின் பெயரால் நடந்து கொண்டிருக்கும் மடத்தனங்களை அனுமதிக்க முடியாது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்