முகத்தை மறைக்க வேண்டாம்; முஸ்லிம் பெண்களுக்கு, ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

🕔 April 26, 2019

“இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் முகத்தை மூடுவதன் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம்” என்று, அங்குள்ள முஸ்லிம் பெண்களுக்கு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கடிதத் தலைப்பில், அந்த அமைப்பின் ‘பத்வா’ குழு செயலாளர் எம்.எல்.எம். இஸ்யாஸின் கையொப்பத்துடன், மேற்படி கோரிக்கை எழுத்து மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நடந்து கொள்ளுமாறும், ஆள் அடையாளத்தை பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தும் பொழுது, அவர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்களைக் கவனத்தில் கொள்ளுமாறும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மேலும் கூறியுள்ளது.

இந்த நிலையில், “முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா ஆடை தொடர்பில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சிலினுடைய நிலைப்பாடு என்ன” என்பது குறித்து, அந்த அமைப்பின் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீனிடம் பிபிசி தமிழ் வினவியது.

“அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இந்த விடயத்தில் எடுக்கும் தீர்மானத்தை நாங்கள் அங்கிகரிப்போம். எங்கள் சமய விவகாரத்தில் அவர்கள்தான் அதிகாரமுள்ள பிரதான சபையாக உள்ளனர். எனவே, ஜம்இய்யத்துல் உலமாவின் தீர்மானத்தை இலங்கை முஸ்லிம் சமூகம் பின்பற்ற வேண்டும்” என்றார் என்.எம். அமீன்.

இதேவேளை, நெருக்கடியான தற்போதை சூழ்நிலையில், முகத்தை மூடி, ஆடை அணிகின்றமை தொடர்பில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், ஜம்இய்யத்துல் உலமாவின் ஆலோசயைப் பின்பற்றுவதே, பொருத்தமாகும் என்றும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் வலியுறுத்தினார்.

ஏற்கனவே, முஸ்லிம் பெண்கள் முகத்தை முழுமையாக மறைத்து அணியும் ‘புர்கா’ ஆடையினை இலங்கையில் தடைசெய்யக் கோரும் தனிநபர் பிரேரணை ஒன்றினைக் கொண்டு வரவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க இந்த விடயத்தை உறுதிப்படுத்தினார்.

புர்காவை தடைசெய்யக் கோரும் பிரேரணையைக் கொண்டு வர வேண்டுமென்று, செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திலும் – தான் கேட்டுக் கொண்டதாகவும் அந்த ஊடக சந்திப்பில் ஆஷு மாரசிங்க கூறினார்.

நாட்டின் பாதுகாப்புக் கருதி ‘புர்கா’வை தடை செய்ய வேண்டுமெனத் தெரிவித்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மாரசிங்க; முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் இது தொடர்பில் – தான் வினவியபோது; ‘புர்கா’ என்பது சம்பிரதாய பூர்வமான இஸ்லாமிய ஆடையல்ல எனக் கூறினார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், சில பயங்கரவாத குழுக்களின் அனுசரணையுடன் புர்கா ஆடை புழக்கத்துக்கு வந்ததா? என்கிற கேள்வி எழுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க அந்த ஊடக சந்திப்பில் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments