துறைமுக அதிகார சபை வசமுள்ள குடியிருப்பு காணிகளை விடுவிப்பது தொடர்பில், திருகோணமலையில் பேச்சு

🕔 April 7, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

துறைமுக அதிகார சபையின் தலைவர் தலைமையிலான உயரதிகாரிகள் திருகோணமலை அஷ்ரப்  துறைமுகத்துக்கு, இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தனர்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்  விடுத்த அழைப்பின் பேரிலேயே, இவர்கள் வருகை தந்தனர்.

இதன்போது திருகோணமலை துறைமுக அதிகார சபை நிருவாக கட்டிடத்தில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

துறைமுக அதிகார சபை வசமுள்ள மக்களின் குடியிருப்பு காணிகள் விடுவிப்பு, வேலை வாய்ப்பு, துறைமுக விஸ்தரிப்பு, கைத்தொழில் ஊக்குவிப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து மேற்படி கலந்துரையாடலின் போது பிரதி அமைச்சர் விரிவாக எடுத்துரைத்தார்.

கப்பல் துறை கிராமத்தில் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், உடனடியாக நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இச் சந்தர்ப்பத்தில்  உயரதிகாரிகளை பிரதி அமைச்சர் பணித்தார்.

துறைமுக அபிவிருத்தி ஊடான வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் புதிய திட்டங்களை நடை முறைப்படுத்துவது பற்றியும் இங்கு பேசப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் துறைமுக அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க, முகாமைத்துவ பணிப்பாளர் அதுல ஹேவ விதாரண, திருகோணமலை துறைமுக அதிகார சபையின் வதிவிட முகாமையாளர் கே.ஏ.கே.என்.டபிள்யூ வீரசிங்க மற்றும் பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் டொக்டர் ஹில்மி முகைதீன் பாவா, ஒருங்கிணைப்புச் செயலாளர்களான எஸ்.எம். றிபாய், எம்.பி.எம். முஸ்தபா, இணைப்பாளர் ஈ.எல். அனீஸ், கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டார்கள்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்