நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானம்

🕔 April 4, 2019

– அஹமட் –

நிந்தவூரில் இயங்கி வரும் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை நிருவாகத்துக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு, அந்தப் பாடசாலை மாணவியின் தந்தையொருவர் தீர்மானித்துள்ளார்.

குறித்த பாடசாலைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்திருந்த மேற்படி தந்தை, தனது பிள்ளைக்கும் தனக்கும் ஏற்பட்ட அசௌகரியம் மற்றும் மன உளைச்சலுக்காக, பாடசாடலை நிருவாகத்தினர் உரிய முறையில் மன்னிப்புக் கோரத் தவறியமை காரணமாகவே, வழக்குத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளார்.

சி.ஓ. லெஸதகிர் எனும் மேற்படி தனியார் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழாவுக்காக, அங்கு கற்கும் தன்னுடைய பிள்ளைக்காக பாடசாலை நிருவாகத்தினர் – தன்னிடம் பணம் அறிவிட்ட போதிலும், தனது பிள்ளையை எந்தவொரு போட்டியிலும் இணைத்துக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தும், இது குறித்து பாடசாலை நிருவாகத்தினரிடம் கேட்ட போது, தனது பிள்ளை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதலாமிடம் பெற்றுக் கொண்டதாகக் குறிப்பிடும் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவற்றினைக் கொடுத்து, விடயத்தை மூடி மறைக்க முயற்சித்ததாகவும் கூறி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 31ஆம் திகதி பாதிக்கப்பட்ட தந்தை முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை அதிபரை அழைத்து சம்மாந்துறை பொலிஸார் விசாரணை நடத்திய போது; இந்த விடயத்தில் பாடசாலை சார்பாக  மன்னிப்புக் கோரி, மேற்படி பிணக்கை சமாதானமாகத் தீர்த்துக் கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாக, அதிபர் கூறியிருந்தார்.

இதற்கிணங்க, பாடசாலை அதிபரிடமிருந்து எழுத்து மூலமான மன்னிப்புக் கடிதம் ஒன்று கிடைக்கப் பெறுமாயின், பிணக்கைத் தீர்த்துக் கொள்வதற்கு, முறைப்பாட்டாளரும் தயார் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்துக்குச் சமூகமளித்திருந்த சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலையின் அதிபர், தமது தரப்பில் தவறில்லை என்றும், அவர்கள் நடத்திய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு, , முறைப்பாட்டாளரின் மகளான குறித்த மாணவி சமூமளிக்கவில்லை எனவும் குறிப்பிட்டு, ஒரு கடிதத்தை வழங்குவதற்கு முயற்சித்தார்.

இதனால் ஏமாற்றமடைந்த முறைப்பாட்டாளர், மேற்படி பாடசாலையுடன் எவ்வித இணக்கத்துக்கும் தயாரில்லை எனத் தெரிவித்ததோடு, சி.ஓ. லெஸ்தகிர்  பாடசாலைக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் கூறினார்.

இது இவ்வாறிருக்க, சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலையில் கல்வி கற்று வந்த தனது பிள்ளையை, முறைப்பாட்டாளரான தந்தை, கடந்த திங்கட்கிழமையன்று விலக்கிக் கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொர்பான செய்திகள்:

01) பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு

02) புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’

03) நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்