நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலைக்கு எதிராக, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

🕔 March 31, 2019

– அஹமட் –

நிந்தவூரில் இயங்கி வரும், சி.ஓ. லெஸ்தகிர் (C.O. LESTHAKIR) எனும் தனியார் பாடசாலைக்கு எதிராக, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பாடசாலையில் கல்வி கற்கும் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரின் தந்தையே, இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

பாடசலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியில் தனது பிள்ளை கலந்து கொள்ளவுள்ளதாகக் கூறி – அதற்காக தன்னிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை பாடசாலை நிருவாகம் வசூலித்ததாகவும், ஆனால்  விளையாட்டுப் போட்டியில் பங்கு கொள்வதற்கான சந்தர்ப்பம் தனது பிள்ளைக்கு வழங்கப்படவில்லை என்றும், இதனை பாடசாலை நிருவாகத்திடம் கேட்ட போது, தனது பிள்ளை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு முதலாமிடம் பெற்றதாக, பொய்யான சான்றிதழையும் பதக்கத்தையும் தனக்கு வழங்கி, பிரச்சினையை பாடசாலை நிருவாகத்தினர் மூடி மறைக்க முற்பட்டதாகவும், முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாறு கணிசமான மாணவர்களுக்கு அந்தப் பாடசாலையில் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

“விளையாட்டுப் போட்டியில் எனது பிள்ளை கலந்து கொள்ளவுள்ளது எனக் கூறி, என்னிடம் பாடசாலை நிருவாகத்தினர் பணத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும், விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு எனது பிள்ளைக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இதனால், போட்டியில் கலந்து கொள்ளும் எதிர்பார்ப்புடன் சென்றிருந்த எனது பிள்ளை பெரும் மனச் சஞ்சலத்துக்கு ஆளாகியது.

இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தினரிடம் நான் கேட்ட போது, அதற்கு உரிய பதிலை வழங்காமல், விளையாட்டுப் போட்டியில் எனது பிள்ளை கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டு பொய்யான சான்றிதழை, எனது பிள்ளையிடம் கொடுத்து அனுப்பியிருந்தார்கள்.

எனது பிள்ளைக்கு விளையாட்டுப் போட்டியில் சந்தர்ப்பம் வழங்குவதில்லை என்று ஏற்கனவே தீர்மானித்திருந்தால், ஏன் என்னிடம் விளையாட்டுப் போட்டிக்காக பாடசாலை நிருவாகம் பணம் வசூலித்தது என்று கேட்கிறேன்.

எனது பிள்ளை கலந்து கொள்ளாத போட்டியில் முதலாமிடம் பெற்றதாக சான்றிதழும், பதக்கமும் வழங்கும் இந்தப் பாடசாலை நிருவாகத்தினர், பணத்தைப் பெற்றுக் கொண்டு கல்விச் சான்றிதழ்களையும் இவ்வாறு விற்க மாட்டார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் எதுவுமில்லை” எனவும், ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தப் பாடசாலையில் ஆசிரியர் எனும் பெயரில் கற்பிப்போரில் கணிசமானோர், ஆசியர் பயிற்சி பெறாதவர்கள் என்றும், ஆசிரியர் பதவிக்குத் தகுதிற்றவர்கள் எனும் புகார்களும் உள்ளன.

எனவே, இந்தப் பாடசாலை குறித்து  – கல்வியமைச்சிடமும் புகார் செய்யவுள்ளதாகவும் மேற்படி முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.

அதேவேளை, இவ்வாறான தனியார் பாடசாலைகளில் நடைபெறும் தில்லுமுல்லுகள் தொடர்பில் பொதுமக்களை விழிப்படையச் செய்யும் வகையில், இன்னும் பல செய்திகளை ‘புதிது’ செய்தித்தளம் விரைவில் அம்பலப்படுத்தவுள்ளது.

தொடர்பான செய்திகள்:

01) பண மோசடியில் சி.ஓ. லெஸ்தகிர் தனியார் பாடசாலை; போலிச் சான்றிதழ் கொடுத்து குற்றத்தை மறைக்க முயற்சி: நிந்தவூரில் தில்லுமுல்லு

02) புதிது செய்தித்தளத்துக்கு மிரட்டல்: சி.ஓ. லெஸ்தகிர் பாடசாலை தொடர்பில், செய்தி வெளியிட்டதன் ‘எதிரொலி’

Comments

புதிது பேஸ்புக் பக்கம்