வைத்திய அத்தியட்சகரைத் தாக்குவதற்கு முயற்சித்த வைத்தியர்: கண்டனம் தெரிவித்து பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்

🕔 March 22, 2019

– கலீபா –

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரொருவருக்கு எதிராக அந்த வைத்தியசாலையில் கடமைபுரியும் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களும் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

குறித்த வைத்தியரின் நடவடிக்கைகள் வைத்தியசாலை நிர்வாகத்துக்கும் நோயாளிகளுக்கும் அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இது விடயமாக வைத்தியசாலை நிர்வாகம் – அவ்வைத்தியரிடம் பலமுறை தெரியப்படுத்தியதாகவும், உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வழமைபோன்று கடமைக்கு தாமதித்து வந்த மேற்படி வைத்தியர், வைத்திய அத்தியட்சகருடன் முரண்பட்டுக்கொண்டு கைகலப்பிற்கும் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இவர் தொடர்ச்சியாக பொறுப்பற்றமுறையில் நடந்துகொள்வதாகவும், இவ்வைத்தியருக்கெதிராக சுகாதார அமைச்சு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் உயரதிகாரிகள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டுமென்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.

ஆர்பாட்டம் இடம்பெற்றபோதும் வைத்தியடிசேவைகள் வழமைபோன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments