குப்பை விவகாரத்தில் சாதகமான முடிவை வழங்காது விட்டால், புத்தளத்துக்கு வருவதை, ஜனாதிபதி பரிசீலிக்க வேண்டி வரும்

🕔 March 19, 2019
– சப்னி அஹமட் –

புத்தளத்துக்கு இம்மாதம்  22ஆம் திகதி வருவதற்குத் திட்டமிட்டுள்ள ஜனாதிபதி மைதிரிபால சிரிசேன, அதற்கிடையில் அறுவைக்காட்டு குப்பை திட்டத்துக்கு சாதகமான முடிவை வழங்காது விட்டால், தனது வருகை தொடர்பில் அவர் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வரும் என, ‘கீளின் புத்தளம்’ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று செவ்வாய்கிழமை காலை புத்தளத்திலிருந்து சுமார் 25 பஸ்களிலும் வேறு பல வாகனங்களிலும் கொழும்பு வந்து, காலி முகத்திடலுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்த புத்தள மாவட்ட மக்களின் பேரணியின் போது அவர்கள் இதனைக் கூறினர்.

சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் என்ற இன பேதமின்றி மத குருமார்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

புத்தளம் குப்பைக்கு எதிரான சுலோக அட்டைகளை தாங்கிருந்த இவர்கள், கொழும்பு – காலி முகத்திடலில் ஊர்வலமாக கோசமிட்டுச் சென்றனர். பொலிஸாரும், விசேட அதிரடி படையினரும் அந்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு இருந்ததுடன், நீர்த்தாரை பிரயோக வண்டிகளும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பொதுமக்களின் பிரதிநிதிகள் அடங்கிய 07 பேர், ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று மேலதிக செயலாளர் சமந்தி கருணாதாசவிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். புத்தளத்தின் நிலமை தொடர்பில்  அவர்கள் விளக்கியதுடன் இந்த திட்டத்தை ஜனாதிபதி நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பின் பின்னர் கருத்த தெரிவித்த மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெ.எம். பாயிஸ்;

“நாங்கள் வழங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிப்பதாக உறுதியளிக்கப்பட்டது. மேலும் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றுக்கான நேரம் ஒதுக்கி தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.

இந்த சந்திப்பின் போது புத்தளத்தின் செயற்பாட்டாளர் இப்லால் மரைக்கார், ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முக்கியஸ்தர் மெளலவி மிஹ்லார் உட்பட ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பினரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும், இவர்கள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து பேரணியாக அலரி மாளிக்கைக்கு நடந்து சென்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்