ஒலுவில் துறைமுகத்தினால் காணியிழந்தோருக்கு நஷ்டஈடு; ஓரிரு வாரங்களில் வழங்கப்படும்: பிரதியமைச்சர் மஹ்ரூப்

🕔 March 19, 2019

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

லுவில் துறைமுகத்தினால் காணிகளை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்படவுள்ளதாக துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

 துறை முகங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்கவை இன்று செவ்வாய்கிழமை அமைச்சில் வைத்து  சந்தித்த பின்னர்,  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்படி தகவலை பிரதியமைச்சர் கூறினார்.

“அமைச்சர் சாகல ரத்நாயக்க, துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவர் காவன் ரத்நாயக்க, முகாமைத்துவப் பணிப்பாளர் அதுல ஹேவ விதாரன  உள்ளிட்டோர்களுடனான் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன் பின்பு, ஒலுவில் கரையோரத்தில் பாதிக்கப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்டவர்களில்  முதற்கட்டமாக  29 நபர்களுக்கே நஷ்ட ஈட்டுத் தொகை எதிர் வரும் ஓரிரு வாரங்களிற்குள் வழங்கப்படவுள்ளது.

துறைமுகத்தில் படகு போக்குவரத்துக்குத் தடையாக உள்ள மணவலை அகற்றுவதற்கு விசேடமான நிதி ஒதுக்கீட்டின் கீழ் சகல விதமான நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்கப்பட்டு உரியவர்களுக்கான நஷ்ட ஈட்டுத் தொகையும் வழங்கப்படும்.

கடலரிப்பு மூலமாக ஏற்படும் பாதிப்புக்களுக்கான நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய உயரதிகாரிகளை அமைச்சர் பணித்தார்.

24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் அப்பகுதியில்  வாழ்ந்து வருகின்றார்கள் நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, மருதமுனை,கல்முனைக்குடி, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, பொத்துவில் போன்ற மீனவக் குடும்பங்களின் நலன் கருதி மீனவர்களுக்கான மீன்பிடி தொழிலை செய்யக்கூடிய வழிவகைகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ன.

அமைச்சர் சாகவவுடனான பேச்சுவார்த்தையின் பின்பே, துரிதமான தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களுடைய பிரச்சினைகள், கடலரிப்பினால் காணிகளை இழந்தோர்களுக்கான நிரந்தரத் தீர்வு கிட்டியுள்ளது” எனவும் அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்