தேசிய காங்கிரஸிலிருந்து விலகியமை, பெரு மகிழ்ச்சி தருகிறது: உதுமாலெப்பை

🕔 March 18, 2019

– றிசாத் ஏ காதர் –

தேசிய காங்கிரஸில் தியாகத்துடனும் எதிர்பார்ப்புகளுமின்றி செயற்பட்ட தம்மை, கட்சித் தலைம சந்தேகத்துடன் பார்க்க முற்பட்டதன் காரணமாகவே, அந்தக் கட்சியிலிருந்து தாம் விலகியதாக, தேசிய காங்கிரசின் பிரதித் தலைவராகப் பதவி வகித்த – கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸிலிருந்து அக்கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்கள் ராஜிநாமா செய்யும் நிகழ்வு, நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

”தேசிய காங்கிரஸிலிருந்து நான் விலகிய பிறகு, இப்போது அங்குள்ளவர்கள் சொல்கிறார்கள்; 2020ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும், பிரதியமைச்சர் பதவியும் தேசிய காங்கிரஸ் ஊடாக எனக்கு கிடைக்கவிருந்ததாம், ஆனால் என்னை சிலர் வழிகெடுத்து அதனை இல்லாமல் செய்து விட்டனராம்.

அவ்வாறு கூறுகின்றவர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். ஜனாதிபதி பதவி கிடைத்து மகிழ்ச்சி அடைவதனை விடவும், தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியமை எனக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

புகைச்சலுக்குள் இருந்தாலும் எரிச்சலுக்குள் இருக்கமுடியாது என்பதால்தான், இந்த முடிவுக்கு வந்தோம்.

தேசிய காங்கிரஸில் இருந்த போது, தலைவர் அதாஉல்லா எதைச் சொன்னாலும், அதனை செய்தோம். காரணம் தலைவர் மீதுள்ள நம்பிக்கையாகும். தலைவர் எப்போதும் நல்லதையே செய்வார், நல்லதையே சிந்திப்பார் என்று நம்பினோம். எனவே தலைவர் மீதுள்ள விசுவாசத்தின் காரணமாக அவற்றினைச் செய்தோம்.

எம்மைப்போன்ற விசுவாசம் மிக்கவர்களை இனி அந்தக் கட்சிக்குள் காண்பது அரிது.

தேசிய காங்கிரஸில் இருக்கும் வரை, அக்கட்சிக்கும், தலைவருக்கும் உச்சமான விசுவாசத்தோடு இருந்தோம். எமக்கு வாக்களித்த முழு கிழக்கு மாகாண மக்களுக்கும் பணி புரிந்திருக்கின்றோம். பணம், பதவி பட்டம் மற்றும் சந்தர்ப்பவாதம் என்பவற்றுக்காக, நாம் கட்சி மாறாதவர்கள் என்பதனை நிரூபித்திருக்கின்றோம்.

தேசிய காங்கிரசின் தலைமையானது அதிகாரங்களை பெறுவதற்கும், அமைச்சராவதற்கும்  நாங்கள் பெரும் தியாகங்களை செய்திருக்கின்றோம். அந்த தியாகங்கள் குறைத்து மதிப்பிட முடியாதவை.

இப்போது எல்லோரும் கேட்கின்றார்கள்; ‘தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிவிட்டீர்கள், எந்தக்கட்சியில் சேரப்போகின்றீர்கள்’ என்று. அதற்கு அவசரப்படுவதில்லை. மிகவும் நிதானமாக தீர்மானம் எடுக்கவேண்டிய சூழ்நலையில் இருக்கின்றோம்.

கட்சி என்பது மதமல்ல, காலத்தின் தேவை என்று தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் அடிக்கடி கூறுவார். இப்போது நாங்களும் அந்த நிலைக்கு வந்துள்ளோம்.

இப்போது அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேசுவதுக்கு தயாராகவுள்ளோம். யாருடனும் பேசக்கூடாது என்கிற கட்டப்பாடுகள் இப்போதில்லை. எதிர்காலம் சிறப்பாக அமையும் வகையில் முடிவுகள் எடுக்கப்படும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்