நியூசிலாந்தின் வெள்ளை நிறவெறி: பாசிசத்தின் ஒரு வடிவம்

🕔 March 15, 2019

– பசீர் சேகுதாவூத் –

தவெறி, இனவெறி, நிறவெறி, போர்வெறி, ஆதிக்கவெறி ஆகியன நிரம்பிய பாசிச உலகில் வாழ்கிறோம். இத்தகைய வெறிகளுக்கு அனைத்து மதங்களையும், இனங்களையும், நிறங்களையும் சேர்ந்த மனிதர்கள் ‘எனப்படுவோர்’ ஆட்பட்டு ஆடுகிறோம்.

இன்று நியூசிலாந்தின் இரண்டு பள்ளிவாயில்களில் நடந்த கொடூரத் தாக்குதல், ஒரு தனி நபரின் வேலையல்ல. அது மனித வரலாற்றின் நூற்றாண்டு காலப் பகைமை மற்றும் வேறுபாடுகள் நிறுவனமயப்பட்டதன் விளைவாகும்.

மஸ்ஜித்களில் சரமாரியாகச் சுட்டவனின் துப்பாக்கியில் ‘Refugees- Go to hell’ (அகதிகளே, நரகிற்குச் செல்லுங்கள்) என்று எழுதப்பட்டுள்ளது. இது அவனது வெறி. வெள்ளையரின் நாடுகளில் அகதியாகக் குடியேறிய வெள்ளையரல்லாத மனிதர்களுக்கு எதிரானது என்பதை குறிக்கிறது.

அப்பாவி பழங்குடி ஆதி மனிதரைக் கொன்று குவித்து, நிலம் கவர்ந்த வெள்ளையரே உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது கறுப்பரை “அகதி” என மொழிய?

அன்ட்ரூ ஜெக்சன் என்ற அமெரிக்க வெள்ளை வணிகர்களின் பிரதிநிதி, அமெரிக்க மண்ணின் பெரும் பகுதிக்குச் சொந்தக்காரராய் இருந்த ‘டகோடா’ என்ற செவ்விந்திய பழங்குடியினரின் மண் மீட்புப் போராட்டத்தில் கோபமுற்றும் அவர்களது அவல நிலையைப் பார்த்தும் “அவர்கள் புல்லையோ அல்லது மலத்தையோ உண்ணட்டும் எமக்குக் கவலையில்லை” என்று சொன்ன வெறுப்பூட்டும் வார்த்தைகள் நியூசிலாந்து மஸ்ஜித் கொலைகளுக்கு முன்னோடியானவை என்றால் வரலாறு தெரிந்த எவர் மறுப்பர்?

1862 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தொடங்கிய Dakota War இல் பழங்குடியினரின் முதல் தாக்குதலில் பலியான வெள்ளையர்களில் அன்ட்ரூ ஜெக்சனும் ஒருவனாகும்.

நியூசிலாந்து மஸ்ஜித்களில் கொலைக் கோரத்தை நிகழ்த்தியவன் நீண்டகாலம் உயிர்வாழ முடியாது. ஆனால் அவனைத் தூண்டிய வெறுப்புப் பிரச்சாரமும், கொள்கைகளும் நீண்டகாலம் உயிர்வாழக் கூடியவையாகும். ஏனெனில் இவை அரசாங்கங்களின் அனுசரணையில் உருவாக்கப்பட்டு வளருவனவாகும்.

தனி மனித மற்றும் குழு நிலைவாதக் கோபமும் வன்முறையும், உலகில் அடக்கப்படக் கூடியவைதான். அவற்றுக்கு அரச அனுசரணை இல்லை எனில்.

Comments