செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களை, ஆளுநர்களாக நியமிப்பது ஒருதலைப் பட்சமானது: ஹிஸ்புல்லா, ஆசாத்சாலி குறித்து, சுவிஸ் தூதுவரிடம் ஹக்கீம் தெரிவிப்பு

🕔 March 14, 2019
வெறுப்பு பேச்சை தடை செய்யக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய வகையிலான விடயங்கள் சமூக வலைத்தளங்களினூடாக பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சுவிற்சர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக்கிடம் தெரிவித்தார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்குமான சுவிற்சர்லாந்து தூதுவர் ஹன்ஸ்பீட்டர் மொக் இன்று வியாழக்கிழமை, அமைச்சர் ரவூப் ஹக்கீமை உயர் கல்வி அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறத்தக்கதாக, அந்நாட்டு தூதுவருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஹக்கீமுக்கும் இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

தற்போதைய அரசியல் சூழ்நிலை, அரசியரலமைப்பு தொடர்பிலான இன்றைய நிலைமை, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சட்டமும் ஒழுங்கும் பேணப்படுவதன் அவசியம் போன்றவற்றை மையப்படுத்தி அமைச்சரிடமிருந்து விளக்கங்களை அறிந்துகொள்வதில் தூதுவர்  அதிக ஆர்வம் செலுத்தினார்.

அமைச்சர் ஹக்கீம் சுவிற்சர்லாந்து தூதுவரிடம் மேலும் கூறுகையில்;
“அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனும் பிரமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் தனித்தனியே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். இதில் அவர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கொந்தளிப்பான, சர்ச்சைக்குரிய அம்சங்களை தவிர்த்து, அவசியமான குறைந்தபட்ச அணுகுமுறையை கையாள்வது பயனளிக்கும் என பொதுவாக கருதப்படுகின்றது.
அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை பொறுத்தவரை வழிநடத்தல் குழுவானது, நிபுணத்துவ குழுவின் அறிக்கையை பரிசீலித்துள்ளது. அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தம் விரைவில் சாத்தியப்படக் கூடியதாகத் தெரியவில்லை.
இன்றுள்ள சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையே இல்லாதொழித்தல், நடைமுறையிலுள்ள தேர்தல் முறையில் மாற்றங்களை எற்படுத்தல் என்பன சர்ச்சைக்குரியன. தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையையே அதிகமானோர் ஆதரிக்கின்றனர்.

அர்த்தமுள்ள அதிகாரப் பரவலாக்கம் காலத்தின் தேவையாகும். அதனடிப்படையில் வட, கிழக்கு மாகாணங்களை விட அவற்றுக்கு வெளியே தெற்கிலுள்ள ஏனைய ஏழு மாகாணங்களிலும் இதன் அவசியம் வெகுவாக வலியுறுத்தப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணி அரசியலமைப்பு சட்டத்தின் 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதில் கூடிய கவனம் செலுத்துகின்றது. ஏற்கனவே அந்தக் கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இவ்விடயம் தொடர்பில் கருத்து பறிமாற்றங்களில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் என்னை சந்தித்தபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய சிறுபான்மை கட்சிகளின் முக்கியஸ்தர்களையும் ஒன்றாக சந்தித்து கலந்துரையாட விரும்புவதாக கூறினார்.
மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் எதிர் நோக்கப்படுகின்றன. மாகாண சபை தேர்தலுக்கான எல்லைகள் மீள் நிர்ணயம் தொடர்பான குழுவின் அறிக்கையை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்படி தேர்தலை நடத்துவதற்கு புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட வேண்டியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை முன்னதாக நடத்த வேண்டுமென்பதில் நல்லாட்சி அரசாங்கம் முனைப்பாக இருக்கின்றது. இதனிடையே 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஜனாதிபதிக்குரிய நிறைவேற்று அதிகாரங்களில் சிலவற்றை ஏற்கனவே குறைத்துள்ளது.

கலைக்கப்பட்ட மாகாண சபைகளில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உரிய அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பினும், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் தலைமையில் அம்மாகாணங்களிலுள்ள பணிக்குழுவாட்சி அதிகாரிகளின் கீழ் முழுமையாக கொண்டுவரப்பட்டுள்ளது.

முதலமைச்சர்களின் தலைமையிலுள்ள மாகாண அமைச்சர்கள் குழுவில் உரிய முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இருக்கத்தக்கதாக, மாகாணத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களை கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் ஆளுநர்களின் கரங்களில் கொடுக்கப்பட்டது. இதனால் முதலமைச்சர்கள் தங்களின் அதிகாரம் செயலிழந்து போவதாக உணர்ந்தனர்.

ஏற்கனவே கூறியதைப் போன்று வடக்கு, கிழக்கில் இருந்த முதலமைச்சர்களை விடவும் அதற்கு வெளியேயிருந்த முதலமைச்சர்கள் அதிகார பரவலாக்கலை அதிகம் வலியுறுத்தி வந்தனர்.

வழக்கமாக ஆளுநர் நியமனங்களின்போது வட, கிழக்குக்கு வெளியே ஓய்வுபெற்ற சிவில் நிர்வாக சேவை அதிகாரிகளும் மக்கள் விரும்பாத போதிலும் வட, கிழக்கில் பாதுகாப்பு படைத்தரப்பு மேலதிகாரிகளும் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு வந்தனர்.

தற்போது கிழக்கு மாகாணத்துக்கும் மேல் மாகாணத்துக்கும் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுவரும் ஹிஸ்புல்லாஹ்வும், ஆசாத் சாலியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனம் வடக்கு, கிழக்கை பொறுத்தவரையில் கடந்த காலத்தை விட முன்னேற்றகரமாக இருந்தபோதிலும், தமிழ்தரப்பில் ஒரு சாரார் வன்மையாக எதிர்த்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்கதல்ல.
இதேபோல் மேல் மாகாணத்துக்கு ஆசாத் சாலி நியமிக்கப்பட்டமை சிங்கள மக்களிடையே இத்தகைய கொதிப்பை ஏற்படுத்தவில்லை. தர்க்க ரீதியால் பார்த்தால் இது நகைப்புக்குரியது. எனினும், செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுபவர்களை ஆளுநர்களாக நியமித்தல் என்பது அரசியலில் ஒருதலைப்பட்சமானது. ஏனென்றால், அவர்களில் தங்களது கட்சி அரசியலை வளப்படுத்துவதிலும், தங்களது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தி கொள்வதிலும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை பூரணமாக பயன்படுத்தி கொள்வார்கள்.

சட்டத்தின் ஆட்சி மற்றும் சட்டமும் ஒழுங்கும் உறுதிப்படல் என்பனவற்றை பொறுத்தவரை அண்மைக்கால அனுபவங்கள் கசப்பானவை. கடந்த ஆண்டில் நடைபெற்ற வன்செயல்களின்போது சட்டமும் ஒழுங்கும் உரிய முறையில் பேணப்படவில்லை. வன்செயல்களை தடுப்பதற்கு உடனடியான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை. வன்செயலொன்று நடைப்பெறபோவதாக உணரப்படும் போது – புலனாய்வு துறையினரின் கவனயீர்ப்பு அவசியமானது. ஆனால், துர்திஷ்டவசமாக அவ்வாறு முன்னேற்பாடுகள் நடைபெறவில்லை.
வெறுப்பு பேச்சை தடை செய்யக்கூடிய சட்ட ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. அதிலும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய வகையிலான விடயங்கள் சமூக வலைத்தளங்களினூடாக பாரியளவில் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், தற்பொழுது அவற்றை கட்டுப்படுத்துவதற்குரிய சில நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேசத்திற்கான பொறுப்புக்கூறல் விடயத்தை இலகுவாக தட்டிக்கழித்துவிட முடியாது. இங்கு குற்றச்செயல்களை பொறுத்தவரை சட்டத்தில் உரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. குற்றவாளிகளை கைதுசெய்வதிலும் சில நடைமுறைகள் உள்ளன. நீதவானின் உத்தரவின் பேரில் கைதுகள் இடம்பெறுவதே சிறந்தது” என்றார்.
இக்கலந்துரையாடலில் சுவிற்சர்லாந்து தூதரகத்தின் முதன்மை செயலாளர் (அரசியல்) டமியானோ அஞ்ஜெலோ, அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர் மற்றும் மன்சூர் ஏ. காதிர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்