கலாபூஷணம் அன்புடீனுக்கு இலக்கிய பொன் விழா; ஹக்கீம், அதாஉல்லா ஒரே மேடையில் பங்கேற்பு

🕔 March 10, 2019

– றிசாத் ஏ காதர் –

லாபூஷணம் ஆசுகவி அன்புடீனின் 50 வருட இலக்கியச் செயற்பாட்டினை பாராட்டி கௌரவிக்கும் ‘இலக்கிய பொன் விழா’ இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.

இதன்போது, அன்புடீன் குறித்து தொகுக்கப்பட்ட’சிற்பம் செதுக்கிய சிற்பி’ எனும் தலைப்பிலான நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.

அன்புடீன் பொன் விழா மன்றத்தின் தலைவர் எம். சிறாஜ் அஹமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், தேசிய காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா கௌரவ அதிதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

அரசியலில் எதிராளிகளாவும்,  பல காலங்களாக ஒரே மேடையில் இணைந்து பங்கேற்பதனைத் தவிர்த்து வருகின்றவர்களுமான ரஊப் ஹக்கீமும், அதாஉல்லாவும், இந்த இலக்கியப் பொன்விழா மேடையில் இணைந்து பங்கேற்றிருந்தமை குறித்து, இன்றைய விழாவில் ஆச்சரியத்துடன் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை, கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா உள்ளிட்டோர் இவ்விழாவில் அதிதிகளாகப் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அன்புடீன் குறித்து தொகுக்கப்பட்ட ‘சிற்பம் செதுக்கிய சிற்பி’ நூலின் நயவுரையினை விமர்சகரும் கவிஞருமான சிராஜ் மஷ்ஹூர் நிகழ்த்தினார்.

கவிதைத்துறைக்கு அன்புடீன் ஆற்றிய பணிகள் பற்றி வாழ்நாள் சாதனையாளர் மானா மக்கீன், மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத், கவிஞர் அனார், உதவிக் கல்விப் பணிப்பாளர் அ.ஸ. கியாஸ், பிறை எப்.எம். கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையூம் ஆகியோர் உரையாற்றினர்.

பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா இலக்கிய உரையினை நிகழ்த்தினார்.

இலக்கிய செயற்பாட்டில் பொன்விழாக் கண்ட ஆசுகவி அன்புடீனுக்கு நினைவுப் பரிசுகளும் பொற்கிளியும் வழங்கி இந் நிகழ்வில் பலரும் கௌரவித்தனர்.

அன்னை மகிழ்கிறாள், முகங்கள், ஐந்து தூண்கள், சாமரையில் மொழி கலந்து, நெருப்பு வாசல் மற்றும் தொப்புள் கொடியும் தலைப்பாகையும் ஆகிய நூல்களை அன்புடீன் வெளியிட்டுள்ளார். இவற்றில் மூன்று – கவிதை நூல்கள், ஒன்று –  அன்புடீன் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பாகும்.

பாலமுனையைப் பிறப்பிடமாகக் கொண்ட அன்புடீன், அட்டாளைச்சேனையில் வாழ்ந்து வருகிறார்.

Comments