நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, அமைச்சர் ஹக்கீம் பார்வையிட்டார்

🕔 March 10, 2019
கர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் 85 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் நிந்தவூரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கலாசார மண்டபத்தை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில்சென்று பார்வையிட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தபாகத் தலைவர் மர்ஹூம் எச்.எச்.எம். அஷ்ரஃபின் எண்ணக்கருவில் உதித்த இக்கலாசார மண்டபத்தை, அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது அமைச்சின் மூலம் நிர்மாணித்தார். இதன் நிர்மாணிப் பணிகள் அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளராக இருந்த ஜப்பார் அலியின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றன.

ஜப்பார் அலியின் திடீர் மறைவையடுத்து, அவர் முன்னெடுத்து வந்த கலாசார மண்டபத்தின் முதற்கட்ட வேலைகள் தற்போது நிறைவுற்ற நிலையில் உள்ளன. இதன் நிர்மாணப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும்.

அம்பாறை மாவட்டத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் அமைக்கப்படும் நிந்தவூர் கலாசார மண்டபம், 03 மாடிகள் கொண்டது. இதில் ஒரே நேரத்தில் 2,300 பேர் அமரமுடியும்.

அமைச்சருடன் சேர்ந்து கட்டடத்தின் நிர்மாணப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு செயலாளர் எம்.ரி.எம். சப்றாஸ், கட்சி முக்கியஸ்தர்களும் பார்வையிட்டனர்.

(மு.காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்