சித்த சுவாதீனமற்றுப் போயுள்ள மதுஷ்; தப்பியோடியுள்ள மெரில்: இன்றைய திக், திக்

🕔 March 8, 2019

– எழுதுபவர் ஆர். சிவராஜா –

மாக்கந்துர மதுஷின் போதைவஸ்து வியாபாரத்திற்கு தொல்லை கொடுத்து வந்த – மதுஷை தேடிக் கண்டுபிடிக்கும் பணிகளில் இலங்கைக்கு உதவிய அன்னாசி மெரில் எனப்படும் அந்தனி மெரில், மதுஷ் கைதுக்கு பின்னர் – லண்டனுக்கு தப்பியோடிவிட்டதாக சொல்லப்படுகிறது.

டுபாயில் இருந்தால் மதுஷின் ஆட்களால் கொல்லப்படலாம் அல்லது இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படலாம் என்று கருதியே மெரில் லண்டனுக்கு தப்பியோடிவிட்டார்.

லண்டனில் இருந்து அவர் போதைப்பொருள் வியாபாரத்தை இயக்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரையும் கைது செய்ய மறைமுக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது பொலிஸ்.

ஆயுள்தண்டனை பெற்ற மெரில்

இலங்கையில் ஒரு காலத்தில் பேர்பெற்ற போதைப்பொருள் வர்த்தகரான மெரில், இரண்டு கிலோ ஹெரோயினுடன் 2001 ஆம் ஆண்டு பொலிசாரிடம் சிக்கி ஆயுள்தண்டனை பெற்றவராவார். ஆனால் 2006 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விடுதலையான பின்னர் துபாய்க்கு சென்றார் மெரில்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் திகதி பேருவளையில் சிக்கிய 231 கிலோ ஹெரோயினை அனுப்பியவர் மெரில்தானாம். அப்போது ஒரு அதிவேக படகின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்த படகு உரிமையாளர் சிசெல்ஸ் தீவுகளில் ஒரு பெண்ணை மனம் முடித்துள்ளார். அதனால் அங்குள்ள தொடர்புகளை வைத்து பாகிஸ்தானில் இருந்து – இங்கு வரும் போதைப்பொருட்களை, கடல் மார்க்கமாக சிசெல்ஸ் தீவுகளுக்கு அனுப்புவது இவரின் வேலையாக இருந்திருக்கிறது.

கடந்த மூன்று மாத காலத்தில் மாத்திரம் இலங்கைக்கு ஆயிரம் கிலோ ஹெரோயினை மெரில் அனுப்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அண்மையில் கொள்ளுப்பிட்டியில் கைதான பாணந்துறை இளைஞர்களிடம் இருந்து – இது தொடர்பில் பல தகவல்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன.

சித்த சுவாதீனமற்றுப் போயுள்ள மதுஷ்

டுபாயில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மதுஷ் மற்றும் சகாக்களின் நிலைமை இன்னும் அப்படித்தான் உள்ளது. தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் இலங்கைக்கு யாருடனாவது பேசவேண்டுமானால் அந்த தொலைபேசி அழைப்புக்கான கட்டணம் செலுத்தப்பட வேண்டும். ஆரம்பத்தில் அவர்களிடம் இருந்த பணத்தினை பயன்படுத்தி பேசினாலும், இப்போது அதற்கான வாய்ப்பே இல்லையென சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் இந்த கைது குறித்து அதிர்ச்சியடைந்த நிலையில் உள்ள மாக்கந்துர மதுஷ், பல விடயங்களை மறந்த சுவாதீனம் அற்ற ஒரு நிலையில் இருப்பதாக அந்நாட்டு காவல்துறை இலங்கை பாதுகாப்புத்துறைக்கு தெரிவித்துள்ளது. இப்படியான திடீர் கைதை அவர் எதிர்பார்க்காத காரணத்தினால் அவர் இப்படி ஆகியிருக்கக் கூடுமா? அல்லது விசாரணைகளை திசை திருப்ப அவர் இப்படி நடந்துகொள்கிறாரா ? என்பது குறித்து யோசிக்கும் பொலிஸார், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த தயாராகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கெலுமாவின் தகவல்

அதேசமயம் கைது செய்யப்பட்ட கையோடு, அந்த நிமிடம் மதுஷ் உரத்த குரலில் தனது சகாக்களுக்கு என்ன சொன்னார் என்பது பற்றியும் தனி விசாரணைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரிடமும் நடத்தப்படுகின்றன.

பன்னிப்பிட்டியவில் கொள்ளையிடப்பட்ட ரத்தினக்கல்லை வைத்திருந்த கெலுமா, மதுஷின் வலது கையாக இருந்து போதைப்பொருட்களை விநியோகித்தார். அவரிடம் இருந்தும் பல முக்கிய விடயங்கள் வெளிவந்துள்ளன. அதில் குறிப்பாக பல அரசியல்வாதிகளின் பெயர்களும் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கெலுமா வழங்கிய தகவல்களின்படி கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு கைத்துப்பாக்கிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் படத்தை இங்கு காணலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்