முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை, மு.கா.வில் இணைய முயற்சிக்கிறார்: நாடாளுமன்ற உறுப்பினர் நசீர்

🕔 March 4, 2019

– முன்ஸிப் அஹமட் –

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸிலிருந்து அண்மையில் விலகிய அந்தக் கட்சியின் பிரதித் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, மீண்டும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொள்வதற்கு முயற்சித்து வருவதாக, மு.காங்கிரசின் தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனையில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற மு.காங்கிரஸ் கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது, அவர் இதனைக் கூறினார்.

முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையும், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீரும் அட்டாளைச்சேனையைச் சொந்த இடமாகக் கொண்டவர்களாவர்.

நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், இதன்போது மேலும் தெரிவிக்கையில்;

“எங்களுக்கு பெரும் சவாலாக அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சி இருந்தது. ஆனால், தற்போது அது ஒரு கட்சியாகவே இல்லை, கழகம் போல் மாறிவிட்டது. 13 வருடங்கள் அதாஉல்லா அமைச்ராக இருந்தார்; இப்போது இல்லை. இப்போது, தனது ஊரான அக்கரைப்பற்றின் வாக்குகளை அவர் வைத்துக் கொண்டு, தேசியப்பட்டியல் நாடாளுன்ற உறுப்பினராக வருவதற்கு முயற்சிக்கிறார்.

இந்த நிலையில், உதுமாலெப்பை 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்குரிய வியூகங்கள் நடக்கின்றன.

மு.காங்கிரசின் கதவுகள் திறந்திருக்கின்றன. எல்லோரும் வர வேண்டும். முஸ்லிம் காங்கிரசுக்குள் எத்தனையோ பேர் வந்தார்கள், எத்தனையோ பேர் இங்கிருந்து போனார்கள்.

முஸ்லிம் காங்கிரசின் தற்போதைய ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் கூட, முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேறி, அதாஉல்லாவின் கட்சியில் இணைந்து, பிறகு முஸ்லிம் காங்கிரஸில் இணைந்தவர்தான்” என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நசீர், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேச அமைப்பாளராகவும் பதவி வகின்றார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்