தேசிய அரசாங்கம் உருவாக்கும் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: டலஸ்

🕔 February 4, 2019

தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக, அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு எதிராக, சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் கூடவுள்ள எதிர்க்கட்சி குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படுமென்றும் அவர் கூறியுள்ளார்.

வெலிகம பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு பேசிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியானது, முஸ்லிம் காங்கிரஸை இணைத்துக் கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இதன்பொருட்டு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதன் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரும் சனிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.

மேலும், தேசிய அரசாங்கத்தை உருவாக்குவது தொடர்பான பிரேரணை ஒன்றினையும், ஐக்கிய தேசியக் கட்சி சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments