அட்டாளைச்சேனையில் ‘பாம்பு’ வீதி: பிரதேச செயலகம் என்ன செய்கிறது?

🕔 January 14, 2019

ட்டாளைச்சேனை 08ஆம் பிரிவிலுள்ள ஆர்.டி.எஸ். வீதி, ‘கம்பெரலிய’ திட்டத்தின் கீழ் கொங்றீட் வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், அது நேர்த்தியற்ற முறையிலும், அலட்சியமான வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதாக அந்தப் பகுதி மக்கள் ‘புதிது’ செய்தித் தளத்துக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

கொந்தராத்துகாரரின் ஊடாக அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் நிர்மாணித்த இந்த வீதிக்காக 8.6 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

77 மீற்றர் நீளமும், 3.6 மீற்றர் அகலமும் 150 மி.மீற்றர் தடிப்பமும் உடையதாக இந்த வீதி நிர்மாணிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வீதி நேர்த்தியின்றி, பாம்பு போல் வளைந்தும் – நெளிந்தும் அமைக்கப்பட்டுள்ளதோடு, அலட்சியமான முறையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

“கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கம் வழங்கும் பெருந்தொகை நிதியை, இவ்வாறு அலட்சியமான முறையில் பயன்படுத்துவதென்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், பிரதேச செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் அபிவிருத்தித் திட்டம், இவ்வாறு அலங்கோலமாக இருப்பது விசனத்துக்குரியதாகும்.

எனவே, இந்த வீதி நிர்மாணத்திலுள்ள குறைபாட்டினை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு, அல்லது வீதியை நிர்மாணித்த கொந்தராத்துக்காரரிடமிருந்து நஷ்டஈட்டைப் பெற்றுக் கொள்வதற்கு, அட்டாளைச்சேனை பிரதேச செயலகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று, இந்த வீதியின் படங்களையும் தகவல்களையும் அனுப்பி வைத்த பொதுமகன் ஒருவர்,  ‘புதிது’ செய்தித்தளத்துக்குத்  தெரிவித்தார்.

Comments