அப்பியாசக் கொப்பிகளுடன் 6500 பாடசாலைப் பைகள்: மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தார் காதர் மஸ்தான்

🕔 January 10, 2019
– இமாம் றிஜா –

வுனியா மாவட்டத்தில் வாழும் ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினரும் முன்னாள் மீள் குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான காதர் மஸ்தான், அப்பியாசக் கொப்பிகள் அடங்கிய சுமார் 6500க்கும் மேற்பட்ட பாடசாலை பைககளை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.

ஏழை மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரடியாக இந்த பொதிகளை தமது பிரதிநிதிகள் மூலம், அவர் அனுப்பி பகிர்ந்தளித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர், குடும்பத் தலைவர்களை இழந்தவர்கள், பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் குடும்பங்களின் பிள்ளைகள் என, ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டே இந்த அப்பியாசக்கொப்பிகள் அடங்கிய பாடசாலைப் பைகள் வழங்கி வைக்கப்பட்டன.

வன்னி மாவட்ட மக்கள் யுத்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் பல்வேறுபட்ட வாழ்க்கைச் சுமையோடு வாழ்ந்து வருகின்றனர்.
டிசம்பர் மாதம் வந்தால் பிள்ளைகளின் பாடசாலை செலவினால் பெற்றோர்கள் திண்டாடுகின்ற அவலத்தை கண்ணுற்ற நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், இந்த கைங்கரியத்தை செய்துள்ளார்.

வறுமை கல்விக்கு   ஒருபோதும் தடையாகக் கூடாது என்பதில் எப்பொழுதும் உறுதியாக இருக்கும் காதர் மஸ்தானின், நாடாளுமன்ற உறுப்பினருக்கான சம்பளப் பணமானது, இன்றுவரை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காகவே செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments