ஜனாதிபதியின் மனநல அறிக்கை கோரிய மனு தள்ளுபடி: அரசுக்கு 01 லட்சம் ரூபாய் செலுத்துமாறு மனுதாரருக்கு உத்தரவு

🕔 January 7, 2019

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநலம் தொடர்பில் வைத்திய பரிசோதனை அறிக்கை ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, மேன்முறையீ.ட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை தள்ளுபடி செய்துள்ளது.

மேலும், இந்த வழக்கு தொடர்பில் ஏற்பட்ட செலவாக அரசாங்கத்துக்கு 01 லட்சம் ரூபாவினை மனுதாரர் வழங்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – 02 எனும் முகவரியைக் கொண்ட தக்சிலா லக்மாலி ஜயவர்த்தன என்பவர், டிசம்பர் 10ஆம் திகதி, மேன்முறையீட்டு நீதிமன்றில் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், இன்று திங்கட்கிழமை குறித்த மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்தது.

இதன்போது சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான மேலதிக சொலிசிற்றர் ஜெனரல்; “இந்த வழக்கை எடுத்துக் கொள்வதற்கு, மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அதிகாரம் கிடையாது” என தெரிவித்தார்.

மனநோய் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம், நபரொருவர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்தால், முதலில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய வேண்டும். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றினூடாக ஒருவர் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும், மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் நீதிமன்றில் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த வழக்கில் அவ்வாறான பொலிஸ் முறைப்பாடுகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய மேலதிக சொலிசிற்றர் ஜெனரல்; ஜனாதிபதியை இழிவுபடுத்தும் நோக்கிலேயே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்