மைத்திரி நியாயமான ஜனாதிபதி: ஒரு பிரஜையின் மாற்றுப் பார்வை

🕔 December 30, 2018

– எப்.எச்.ஏ. அம்ஜாட் –

“பலம் வாய்ந்தவர்களாக நாம் இருக்க வேண்டுமாயின் தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போல் நாமும் ஒரு பதவியும் எடுக்காமல் இருக்க வேண்டும்”, இது அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கூறிய கருத்தாகும்.

இன்றைய அரசியல் அரங்கு படு சுவாரசியமாக மாறியிருக்கிறது. ஒரு திகில் நாவலைப் போல் அடுத்து என்ன நிகழும் என்பதை இறைவன் மட்டுமே அறிந்திருக்கிறான். ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவின் சதுரங்க நகர்வுகள் நீதித் துறையால் கடிவாளமிடப்பட்டிருக்கின்றன.

பசீர் சேகுதாவூத் அண்மையில் ஆற்றிய உரையில்; “அண்மையில் நடந்தேறிய அரசியல் நெருக்கடியின் போது, முஸ்லிம் கட்சிகள் எடுத்த நிலைப்பாடு சமூக நலன் சார்ந்தது அல்ல; மாறாக தலைவர்களின் நலன் சார்ந்ததாகும்” என்ற கருத்துப்பட கூறி இருந்தார்.

இலங்கை – அடிப்படையில் ஜனநாயக நாடாகும். ஜனநாயக நாடொன்றில் மக்களின் கையில் ஆட்சி இருக்க வேண்டும். மக்கள் சேவகர்களாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும்.

ஆனால், எமது நாட்டில் பெரும்பாலான தலைவர்கள் மன்னர்களாக இருக்க, மக்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஒரு அமைச்சரை இலகுவில் சந்திக்க முடியாது. ஓர் இலக்கை பேச முடியாது. மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அவர்களை மக்கள் நெருங்க முடியாதுள்ளது. இதற்கு விதிவிலக்கானவர்களும் இல்லாமலில்லை. தகவல் அறியும் சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படின் மக்கள் மீண்டும் மன்னர்களாக முடியும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அண்மைக் காலங்களில் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறார். உண்மையில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முரணாக இருப்பினும் மக்களை சட்டம் அறிந்து கொள்ளும் நிலைக்கு எய்தியது. அரசியலமைப்பு நூல் அதிகம் விற்பனையானது. இது ஒரு ஆரோக்கியமான நிலையாகும். உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மதித்து ஜனநாயகத்தை நிலைநாட்டிய ஒரு நியாயமான ஜனாதிபதியை நாம் மோசமாக விமர்சிப்பது முறையல்ல.

இனி வரும் காலங்களில் ஒரு ஜனாதிபதி எந்தளவு நியாயமான ஒருவராக இருக்க முடியும் என்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன முன்னுதாரணமாக இருக்கிறார். கருத்துச் சுதந்திரம் தாராளமாக இருக்கிறது. வெளிப்படுத்தல் சுதந்திரம் எமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்ட ஒன்றாகும்.

மறுபுறம், ஜனாதிபதி இந்த நிலைக்கு தள்ளப்படும் அளவிற்கு அவருக்கு அழுத்தம் கொடுத்தவர்களைப் பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. நாம் தெரிவு செய்த ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து அவரை தொந்தரவு செய்தவர்கள் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகும். அதுவே இயற்கை நீதியுமாகும்.

எது எப்படி இருப்பினும், அடுத்த தேர்தலொன்றில் ஜனாதிபதியின் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது, சிறீலங்கா பொது ஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடும் என்பதனை ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இது பிரதமர் ரணிலின் அரசியல் பயணத்தை சவாலுக்குட்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை.

ஆக, எதிர்வரும் காலங்களில் அரசியல் விறுவிறுப்பாக அமையும் என்பது திண்ணம்.

எது எவ்வாறிருப்பினும், ஜனநாயக நாடொன்றில் தனி நபரினதோ, கட்சியினதோ நலனை விட பகிரங்க அக்கறை மேலோங்க வேண்டும். அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்களாக மாற வேண்டும். சிங்கப்பூர், மலேசியா போன்ற வாழ்க்கைத் தரத்தை மக்கள் பெற வேண்டும் என்பதே ஒரு நேர்மையான பிரஜையின் அடிப்படை எதிர்பார்ப்பாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்