முஸ்லிம் பெண் புலி உறுப்பினர் ஹாஸியா: வெளியே வராத கதை

🕔 December 21, 2018

– பஷீர் சேகுதாவூத் –

ட்டக்களப்பு – சிசிலியா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரைக் கல்வி கற்றவர் ஹாஸியா. இவர் கற்கும் காலத்திலேயே இயக்க வாழ்வு தொடர்பான விருப்பு உள்ளவராகவும், போராட்ட குணாம்சம் கொண்டவராகவும், விடுதலை உணர்வு மேலோங்கியவராகவும் விளங்கினார். அக்காலத்தில் இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஈர்ப்புள்ளவராக இருந்தார் என்றும் இவரது நண்பிகள் கூறுகிறார்கள்.

ஹாஸியா அழகி, பணக்காரி. என்ன குறை அவளுக்கு? ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் என்று தெரியவில்லை என்கின்றனர் அவரது இன்னும் சில நண்பிகள்.

ஹாஸியாவுக்குத் திருமணம் பேசி திகதி குறித்து அழைப்பிதழும் அச்சிட்டாயிற்று, விநியோகமும் தொடங்கிற்று. கல்யாணத்துக்கு இரண்டு நாள் இருக்கையில் ஹாஸியாவைக் காணவில்லை. அவர் புலிகள் அமைப்பில் இணைந்து விட்டமை பின்னர் தெரிந்தது.

இவர் திருமணத்தில் விருப்பின்மை காரணமாக இயக்கத்தில் சேரவில்லை. அவர் நம்பிய போராட்டத்தைக் காதலித்தமையால்தான் திருமணத்தில் இருந்து தப்பினார் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டேன்.

1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இருந்த காலத்தில் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழ்த் தேசிய ராணுவம் (TNA) என்றழைக்கப்பட்ட முன்னாள் தமிழ் இயக்கங்கள் சிலவற்றின் கூட்டுப் படையால், மட்டக்களப்பு நகருக்குள் வைத்து ஹாஸியா தூக்கிச் செல்லப்பட்டார்.

ஹாஸியா – இன்னொரு விடுதலைப் புலிப் பெண் உறுப்பினரான ராசாத்தியோடு சேர்ந்து பெண் புலிகளுக்கு பைசிக்கிள் வாங்குவதற்காக நகருக்கு வந்திருந்தார். இந்நேரத்தில்தான் இவர் தூக்கிச் செல்லப்பட்டார். ஆனால் ராசாத்தியை அவர்கள் ஏதும் செய்யாமல் விட்டுவிட்டனர். ராசாத்தி இன்னும் உயிர்வாழ்கிறார்.

எங்கோ மறைவிடத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ஹாஸியா அநேகரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு பின்னர், துண்டு துண்டாக அரியப்பட்டுக் கொல்லப்பட்டாள். எங்கு புதைக்கப்பட்டாள் என்று தெரியவில்லை. ஹாஸியாவின் பெயர் புலிகள் இயக்கத்தின் மாவீரர் பட்டியலில் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த வரையில் ஈழப் போராட்டத்தில் முதலாவதாக இன்னுயிர் ஈந்த பெண் போராளி டக்ளஸ் தேவானந்தாவுடைய தங்கை சோபா ஆகும். இவர் காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டார். அக்காலத்தில் டக்ளஸ் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தளபதியாக இருந்தார்.

புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவில் முதன்முதலில் உயிர் நீத்தவர் மாலதி என்று நினைக்கிறேன். இம்மரணம் 1987 ஒக்டோபர் பத்தாம் திகதி நிகழ்ந்தது.

ஹாஸியாவின் மரணம் 1988 இல் நிகழ்ந்தது. இவர் உயிரிழந்த எத்தனையாவது பெண் இயக்கப் போராளி என்று தெரியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்