முப்படைகளின் பிரதானிக்கு விளக்க மறியல்; ஊடகவியலாளரைத் தாக்கிய அவரின் அலுவலர் கைது

🕔 November 28, 2018

முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை எதிர்வரும் 05ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் ரங்க தசநாய உத்தரவிட்டுள்ளார்.

2008-2009 காலப்பகுதிக்குள் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், முக்கிய சந்தேகநபருக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் ரவீந்திர விஜேகுணரட்னவை, வாக்குமூலம் அளிக்க வருமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று அழைப்பு விடுத்திருந்தனர்.

ஏற்கனவே, மேற்படி குற்றச்சாட்டுத் தொடர்பில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்துமிருந்தது.

ஆயினும், அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று சமூகமளிக்காமல், இன்று நீதிமன்றில் சரணடைந்தார்.

இந்த நிலையிலேயே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இது இவ்வாறிருக்க, முப்படைகளின் பிரதானியை நீதிமன்றத்தின் முன்னால் படம் எடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரை, முப்படைகளின் பிரதானியினுடைய அலுவலர் ஒருவர் தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், அவரை பொலிஸார் அந்த இடத்திலேயே கைது செய்தனர்.

தாக்கியதாகக் கூறப்பட்ட நபர் சிவில் உடையில் காணப்பட்டார். அவரின் ‘ரீ ஷேர்டை’ பிடித்து பொலிஸ் அதிகாரியொருவர் இழுத்துச் சென்றமையினை காண முடிந்தது.

வீடியோ

Comments