கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’: மட்டக்களப்பில் இன்று ஆரம்பம்

🕔 November 28, 2018
– ஹஸ்பர் ஏ ஹலீம் –

கிழக்கு மாகாண ‘கடற்கரை கரப்பந்து – ஆளுநர் வெற்றிக்கிண்ணம்’  போட்டித் தொடர் இன்று பதன்கிழமை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஆரம்பமானது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் வழிகாட்டுதலின் கீழ், மாகாணத்தில் கடற்கரை கரப்பந்து (Beach Volleyball)  விளையாட்டினைப் பரவலாக்கும் செயற்றிட்டத்துக்கு அமைவாக, இந்தப் போட்டித் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலா பயணிகள் அதிகார சபையின் அனுசரனையுடன், விளையாட்டுத்திணைக்களம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

இன்றைய ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் என்.எம். நௌபீஸ், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் மற்றும் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.கருணாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த போட்டித் தொடர் நாளை (30) வரையும் மட்டக்களப்பில் இடம் பெறும்.

கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய வகையில் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இப் போட்டித் தொடர் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றி பெரும் அணிகளுக்கு பரிசில்கள் வழங்கப்படவுள்ளதாக, மாகாண விளையாட்டுத் திணைக்கள பணிப்பாளர் என்.எம். நௌபீஸ் தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஆண்கள் பிரிவுகளை கொண்ட 30 அணியினரும், 10 பெண்கள் அணிகளும் பங்குபற்றவுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் இறுதி மாகாண சுற்றுக்கு 04 ஆண்கள் அணியும், பெண்கள் அணி 04 உம் தெரிவு செய்யப்படவுள்ளன.

மாவட்ட அடிப்படையிலும் இறுதிப் போட்டிகள் நடைபெற்று கிண்ணங்கள் வழங்கப்படும்.

அந்த வகையில் 29 மற்றும் 30 ம் திகதிகளில் அம்பாறை மாவட்ட போட்டிகள் அட்டாளைச்சேனை கடற்கரையிலும் 03 மற்றும் 04 ம் திகதிகளில் திருகோணமலை போட்டிகள் திருகோணமலை கடற்கரையிலும் இடம் பெறவுள்ளன. இறுதிச் சுற்றுப் போட்டியான மாகாண போட்டிகள்  திருகோணமலையில் எதிர்வரும் டிசம்பர் 06 ம் திகதி வெகு விமர்சையாக இடம் பெறவுள்ளது.

இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹிதபோகொல்லாகம கலந்து கொள்வார்.

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினையும் விளையாட்டுத்துறையினையும் மேம்படுத்தும் பொருட்டு, குறித்த விளையாட்டுப்போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த போட்டிகளில் மாகாணத்திலுள்ள விளையாட்டுக்கழகங்கள் கலந்து கொள்வதுடன், சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டவர்களும் கலந்து கொள்வதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டுத் திணைணக்கள கிழக்கு மாகாணப்  பணிப்பாளர் நௌபீஸ் தெரிவித்தார்.

Comments