நிர்வாணம், அவர்களுக்கு வெட்கமில்லை: நெருங்க முடியாத பழங்குடி மனிதர்கள்

🕔 November 25, 2018

– வாசு தேவன் –

லகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பூர்வ குடி இனங்களைபற்றி போதிய தகவல்கள் நம்மிடம் இல்லை. அவர்களின் கலாச்சாரம், வரலாறு, வாழ்வியல் பற்றி எந்த தகவலும் இல்லை. மற்றும் அவர்கள் நாகரிக சமுதாயத்திலிருந்து விலகி இருக்கிறார்கள். இது அவர்களின் தனித்தன்மை என்றளவில்தான் அவர்களை மதித்து நாம் விலகி நிற்க வேண்டும். மேலும் நாகரிக சமுதாயத்தில் வளர்ந்து பரவிய பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மூலம் நோய் பரவி அரிய பூர்வ குடி மக்கள் அழியக்கூடும் என முன்னெச்செரிக்கையாக ஐ.நா அனைத்து நாடுகளையும் விலகி நிற்க அறிவுறுத்தியுள்ளது.

பெரும்பாலான பூர்வகுடிமக்கள் வாழ்வது தென் அமெரிக்காவின் அமேசான் காடுகளில். அமேசான் காட்டின் பரப்பளவு 55 லட்சம் சதுர கிலோமீட்டர்கள். இந்திய நாட்டின் பரப்பளவை விட (33 லட்சம் சதுர கிலோ மீட்டர்கள்) ஏறத்தாழ இரு மடங்கு பெரிது. அமேசானில் அசட்டையாக உள்ளே நுழைந்து வெளியேறமுடியாது. பல அபூர்வ உயிரினங்கள் மற்றும் அரிய தாவரங்கள், பூர்வ குடிகளின் வசிப்பிடம்.

இதில் இந்திய துணைக்கண்டத்தில் அந்தோமான் நிக்கோபார் தீவுகளில் ஒன்றில் வசிக்கும் செண்டினல் பூர்வ குடிமக்களைப் பற்றி ஒரு விடயமும் தெரியாது. 500 தொடக்கம் 1000 பேர்கள் மட்டும் நிர்வாணமாக வாழ்கிறார்கள் என்ற தோராயமான கணக்கு உண்டு. இவர்களின் மொழி, கலாச்சாரம், பின்புலம் எதுவும் தெரியாது. மானுடவியலாளர்களின் படி ஏறத்தாழ 40,000 ஆண்டுகளுக்கு முன், ஆஃப்ரிக்காவிலிருந்து புலம் பெயர்ந்த கறுப்பினர்கள் என்ற ஊகம் மட்டுமே எஞ்சியுள்ளது.

மிக மூர்க்கமானவர்கள், எவரையும் தங்களுடைய தீவுக்கு அண்ட விட்டதில்லை, நெருங்கினால் கொலை செய்வது என்பது அவர்களின் பழக்கம். 1960களில் இந்திய அரசாங்கம் மானுடவியல் அறிஞர் பண்டிட்டின் தலைமையில் இவர்களோடு நட்புறவை மேற்கொள்ள முயன்றார்கள்; சரி வரவில்லை. பிறகு 1980 களில் தாய்லாந்து கப்பல் இந்த தீவு பக்கம் கரை தட்டி ஒதுங்கியபோது இந்திய ராணுவத்தின் உதவியால் மயிரிழையில் கப்பலில் இருந்தவர்கள் உயிர் தப்பினார்கள். புயலில் சிக்கி இந்த தீவில் ஒதுங்கிய பல மீனவர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள்.

1990 களில் கடைசி முயற்சியாக , தேங்காய்களை அந்த தீவில் வீசி, பூர்வ குடி மக்களோடு கை குலுக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. செண்டினல் பூர்வ குடிமக்கள் வசிக்கும் தீவில் தென்னை மரங்கள் கிடையாது. அவர்களை பொருத்த மட்டில் தேங்காய் அரிய பண்டம். அதை பெற்றுக்கொண்டாலும், அந்நியர்களை நெருங்க விடவில்லை.

1997இல் இந்திய அரசாங்கம், அவர்களின் தனித்தன்மையை மதித்து, எவரும் அந்த தீவு பக்கம் போகக்கூடாது என அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டது. மிகவும் அபூர்வமான புதிரான இனம். அவர்கள் ஆபத்தானவர்கள், காட்டுமிராண்டிகள் என வர்ணிப்பது மிக அபத்தமானது.

பூர்வகுடி மக்கள் காட்டுமிராண்டிகள், அவர்களுடைய சிந்தனைகள், வெள்ளையர்களைவிட தாழ்ந்தவை என்ற கருதுகோள்களை, அதிமுக்கிய ஆளுமை மானுடவியல் அறிஞர் கிளாத் லெவி.ஸ்டராஸ், தகர்க்கிறார். இவர் அமேசான் காடுகளில் உயிரை பணயம் வைத்து ஆய்வை மேற்கொண்டவர். அமைப்பியல் என்ற கோட்பாட்டின் வாயிலாக இரண்டு முக்கியக்கூறுகளை முன்வைக்கிறார்.

  1.  பூர்வகுடிகள் அபாரமான உயரிய பண்பாடு/கலாச்சாரத்தோடு வாழ்கிறார்கள்.
  2. பூர்வகுடிகளின் சில பழக்கவழக்கங்கள்,சிந்தனைகள் அறிவியலுக்கு எதிரானதாக இருந்தாலும், அது முறைப்பட்ட சிந்தனைதான் என நிரூபிக்கிறார்.

இவரின் முக்கிய நூல்கள் structural anthropology மற்றும் savage mind ஆகியவை.

பூர்வ குடிமக்கள் மற்றும் தொன்மங்களை தளப்பார்வையாகவும், காலப்பார்வையாகவும் இவர் ஆராய்ந்தார். லெவி ஸ்டராஸ் இல்லையேல் நமக்கு பூர்வகுடியினரைப் பற்றி அறிய வாய்ப்பில்லை. குறிப்பாக பிரெசில் அமேசான் காடுகளில் அலைந்துதிரிந்து பல்வேறு பூர்வ குடி மக்களுடன் வாழ்ந்து அவர்களை பற்றி எழுதிச் செல்கிறார்.

பெயர்பெற்ற ‘காலேஜ் தி பிரான்ஸ்’ பல்கலைக்கழகத்தில் லெவி ஸ்ட்ராஸ் உரை நிகழ்த்தியபோது அவர் கூறுகையில்; “பூர்வகுடி மக்களுக்காக நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன். அவர்களோடு வாழ்ந்தவன், அவர்களின் அன்பை நான் பண்பாக மாற்றியுள்ளேன். நான் அவர்களின் மாணவன்” என்கிறார். லெவி ஸ்ட்ராஸ் பூர்வகுடிகள் என எழுதும்போது அவர்களின் முக்கியத்துவத்தை குறிப்பிட, அடைப்புக்குறிக்குள் தான் எழுதிச்செல்வதை முக்கியமாக பார்க்கவேண்டும்

இப்போது ஒரு அந்நிய நாட்டவர் அந்த தீவு பக்கம் சென்று கொல்லப்பட்டுள்ளார். ஆர்வக்கோளாறுதான் இதற்குக் காரணம். அவர் கொலைக்கு உள்நோக்கம் கற்பிப்பது (கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு சென்றார் என) மகா விஷமத்தனமானது.

மேற்குறிப்பிட்ட செண்டினல் பூர்வகுடி மக்களைப் பற்றிய முக்கிய சம்பவங்கள் இந்திய அரசாங்கத்தால் காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 19 நிமிட அரிய காணொளியை கீழே காணலாம்.

வீடியோ

Comments