முஸ்லிம்களின் சம்மாந்துறை வட்டையில், சிங்களவர்கள் அத்துமீறி உழவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

🕔 October 14, 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் –

ம்மாந்துறை,  வளத்தாப்பிட்டியில்  உள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணியான கரங்க வட்டையில்  90 ஏக்கர்  தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

1943 ஆம்  ஆண்டியிலிருந்து 2013 ஆம் ஆண்டு வரை இந்தக் காணியில் முஸ்லிம்கள்  விவசாயச்  செய்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் 2013 ஆம்  ஆண்டு அம்பாறையில் நடைபெற்ற ‘தேசத்துக்கு மகுடம்‘ கண்காட்சியின் பின்னர் அந்தக் காணிகள் முஸ்லிம்களிடமிருந்து கைநழுவச்  செய்யப்பட்டன.

இந்த நிலையில்,  தற்போது அந்தக் காணிக்குள் அத்துமீறிய சிங்கள மக்கள்,  வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர். வியாழன், வெள்ளி மற்றும் நேற்று சனிக்கிழமை என தொடர்ச்சியாக  குறித்த காணியில்  சிங்கள மக்கள் விதைப்புக்கான உழவு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஒரு பௌத்த மதகுரு தலைமையிலேயே நிலத்தை உழவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக  தகவல்கள் வெளிவந்துள்ளன.  இந்த விவகாரம் தொடர்பில் சிலர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்தும், அவர் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அதேவேளை, தொடர்ந்தும் குறித்த காணியை வேளாணண்மைச் செய்கைக்காக சிங்கள மக்கள் தயார்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பாரதூரமான விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்  எவரும்   உரிய முறையில் அதி உச்ச கவனத்தைச்  செலுத்தாமையே தங்களது காணிகள் பறிபோவதற்கான பிரதான காரணம் என மக்கள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

Comments