எல்லை நிர்ணய அறிக்கை: அடுத்தது என்ன?

🕔 August 24, 2018

– சட்டத்தரணி எம்.எம். பஹீஜ் –

மாகாண சபை தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்தது என்ன?

பிரதமர் தலைமையில் ஐவர் அடங்கிய மீளாய்வுக்குழு நியமிக்கப்படவேண்டும்.

இந்தக்குழு என்ன செய்யலாம் ?

தொகுதிகளின் பெயர்களை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதியொன்றுக்கு வழங்கப்பட்ட இலக்கத்தை திருத்தலாம் அல்லது மாற்றலாம். தொகுதிகளின் எல்லைகளை மாற்றலாம்.

இதனை செய்வதற்கு அமைச்சர் ஆற்றுப்படுத்தியதில் இருந்து இரண்டு மாதங்கள் இந்த குழுவுக்கு வழங்கப்படும்.

ஆனால் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அதிகாரம் இந்த மீளாய்வுக் குழுவுக்கு கிடையாது.

அதன் பின்னர் குழு தனது அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கும். ஜனாதிபதி வர்த்தமானியில் அறிவித்தவுடன் சட்டம் அமுல்படுத்தப்படும்.

இனிமேல் நாடாளுமன்றத்தில் மீண்டும் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் இல்லை.

தேர்தல் நடத்தப்படுமா?

ஜனாதிபதி வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதும், தேர்தல் ஆணைக்குழு புதிய முறையில் உரிய நேரத்திற்கு தேர்தலை நடத்த முடியும்.

பழைய முறையில் தேர்தல் நடத்த என்ன செய்யவேண்டும்?

நாடாளுமன்றத்திற்கு ஒரு திருத்தச் சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டு அது 2/3 பெரும்பான்மையால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அரசின் நோக்கம் புதிய முறையில் தேர்தல் நடத்துவது என்றால், இனி நாடாளுமன்றத்தின் உதவியின்றி அதனை இரண்டு மாதங்களின் பின்னர் நடத்தமுடியும்.

அரசின் நோக்கம் பழைய முறையில் தேர்தல் நடத்துவது என்றால், நாடாளுமன்றத்தின் உதவியுடன் அதனை நடத்தமுடியும்.

எவ்வாறாயினும், அரசாங்கம் தேர்தலுக்கு தயாரா என்பதுதான் விடை காணமுடியாத வினாவாக உள்ளது.

அபாயம்

சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரை, விருப்பு வாக்கு அடிப்படையிலான திறந்த பட்டியல் விகிதாசார முறையே இன்றுள்ள நிலையில் திருப்திகரமானதாக தெரிகிறது. இதனால்தான் தேசிய காங்கிரஸ் மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்தை நிராகரித்தது. எல்லை நிர்ணயத்தையும் நிராகரித்தது.

ஆனால் ஏனைய முஸ்லிம் கட்சிகள் சட்டத்துக்கு ஆதரவு வழங்கிவிட்டு, இப்போது அதன் ஒரு பகுதிக்கு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு ,ஏதோ வெற்றி பெற்று விட்டதாக அலறுகின்றனர். அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே வீழ்ந்து விட்டு, அதன் ஒரு சிறு பகுதியை மூடிவிட்டு பெருமை பேசுவதில் அர்த்தமில்லை. குழி மீண்டும் சரிந்து விழும் அபாயம் உண்டு என்பதையும் அவர்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

சிறுபான்மை சமூகங்களுக்கான அதிகார பகிர்வுக்கும் பரவலாக்கத்திற்குமாக உருவாக்கப்பட்ட மாகாண சபை, பெரும்பான்மை சமூகத்தின் அரசியல் சித்து விளையாட்டில் நம்மவர்களின் துணையோடு பலிகொடுக்கப்பட்டு தற்போது ஒரு வருடம் கழிந்திருக்கிறது.

இன்னும் நாம் அடிமைகளாக தொடர்வதுதான் நமது தலைவிதியா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்