ஹிஜாப் அணியும் தமிழ் யுவதிகள்; முஸ்லிம் வர்த்தகரின் அயோக்கியத்தனத்தை அம்பலமாக்குகிறார் பஷீர் சேகுதாவூத்

🕔 June 8, 2018

– மப்றூக் –

முஸ்லிம் நபரொவருவருக்குச் சொந்தமான பிரபல வியாபார நிறுவனமொன்றில் பணிபுரியும் மலையகத் தமிழ் யுவதிகள், முஸ்லிம்களைப் போல் ஹஜாப் அணிய வைக்கப்பட்டு, முஸ்லிம்களைப் போல் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்து, முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது பேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், குறித்த முஸ்லிம் முதலாளி – இஸ்லாமிய கலாச்சாரக் கூறொன்றை வியாபாரமாக்கும் அயோக்கியத்தனத்தில் ஈடுபடுவதையும், பஷீர் சேகுதாவூத் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தப் பதவில் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ள முழுமையான விடயம் வருமாறு;

‘எந்த மதத்தவராயினும் இனத்தவராயினும் முலாளிகளின் குணாம்சத்தில் வேறுபாடுகள் மிகக்குறைவானவை என்பதையும்,பெரும்பாலும் அவர்களின் குணங்கள் பொதுப்படையானவை என்பதையும் முதலில் பதிவு செய்கிறேன்.

வியாபாரமும் போட்டியும் கொடிகட்டிப் பறக்கும் இவர்களது சாம்ராஜ்யங்களில் எல்லாவகைத் தொழிலாளர்களின் உழைப்பையும் எல்லாவகை முதலாளிகளும் ஒரேவகையாகத்தான் சுரண்டுகிறார்கள். தொழிலாளர்களின் உழைப்பு உபரி லாபமாக முதலாளிகளைச் சென்றடைகிறது.

முதலாளி ஒருவரின் சமய அதிகாரத் திணிப்பை சில நாட்களுக்கு முன்பு நேரடியாகக் காணக்கிடைத்தது. இது ஒரு வித்தியாசமான படு பிற்போக்குத்தனமான செயற்பாடாகும்.

ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் எனது உறவுக்காரர் ஒருவர் நோன்புப் பெருநாளைக்கு உடுத்துவதற்காக தனது மகளுக்கு இரண்டு சுடிதார்கள் வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார்.

சுடிதார் வாங்குவதற்காக, சுடிதார்கள் மட்டும் விற்கும் கொழும்பிலுள்ள  பிரபல்யமான ஒரு கடைக்குச் சென்றேன்.

இக்கடையின் உரிமையாளர் ஒரு முஸ்லிமாவார். அங்கு வேலை செய்யும் பெண் பிள்ளைகள் அனைவரும் சல்வார் அணிந்து தலையை இறுக்கமாக மூடி – ஹிஜாப் அணிந்திருந்தனர். இவர்களில் அநேகர் பேசிய தமிழ் – முஸ்லிம்கள் பேசும் தமிழ்ப் பேச்சுவழக்காக இருக்கவில்லை. இதை அவதானித்த நான் – அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன்.

நாங்கள் மலையகத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்கள் சேர். நிர்வாகத்தால் இவ்வாறு தலையை மூடுமாறு கேட்கப்பட்டுள்ளோம் என்றனர். நீங்கள் மறுக்கவில்லையா? எனக்கேட்டபோது, மறுத்தால் வேலை போய்விடும். மிகவும் கடினமான வாழ்க்கை வாழ்பவர்களாகையால் அவர்கள் சொன்னபடி செய்கிறோம் எனச் சொல்லி விட்டு என்னை விட்டு மிரண்டபடி நகர்ந்தனர்.

குறித்த கடையின் உரிமையாளர் – முஸ்லிம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஏமாற்றில் ஈடுபடுகிறார். வேறு பண்பாட்டுக் கலாச்சாரத்தைக் கொண்டவர்களை, அவர்களது பொருளாதாரப் பலவீனத்தைப் பாவித்து தனது வியாபார நலனுக்கான உத்திக்காக, வேறு கலாச்சார உடையை அவர்கள் மீது திணிக்கிறார்.மேலும், தற்போது நடைமுறையிலுள்ள இஸ்லாமிய கலாச்சாரக் கூறொன்றை வியாபாரமாக்குகிறார் இந்த மாபாதக முதலாளி.

மலையகத்து தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த புதிய பரம்பரைத் தமிழ் உறவுகள் தோட்ட வேலைகளைக் கைவிட்டு பெரு நகரங்களில் தொழிலாளர்களாகத் தஞ்சமடையத் தொடங்கி இரண்டு தசாப்தங்களையும் தாண்டிவிட்டது. இவர்களில் இரு பாலாரும் உள்ளனர். ஹோட்டல்களிலும், துணிக் கடைகளிலும், வேறு வகைக் கடைகளிலும், வீடுகளிலும் மிகக் குறைந்த சம்பளத்துக்கு கூலியாட்களாக கடினமான வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்களை சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் மற்றும் வெளிநாட்டார் என அனைவரும் வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் மீது எனக்கு அபரிமிதமான நேசமும், வாழ்வில் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களைத் தொடுத்தவர்கள் தொடர்பில் தார்மீகக் கோபமும் கடந்த நான்கு தசாப்தங்களாக இருந்துவருகிறது.

இந்தச் சமூகத்துக்குள் 1985 முதல் 1987 வரையான மூன்று வருடங்கள், மக்களை விழிப்பூட்டும் அரசியல் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டவனாகையால், இம்மக்களோடு வாழ்ந்த காலத்து பசுமையான நினைவுகள் அடர்ந்த வனத்துக்குள் அமர்ந்திருக்கும் நிழல் போல, என் நெஞ்சத்துள் நிறைந்திருக்கிறது.

மலையகத் தமிழ்த் தேசிய இனத்தின் உள்ளே நடக்கும் சமூக மாற்றத்தை உன்னிப்பாகப் பார்த்து வருபவன் என்பதால்தான், சுடிதார் கடை நடைமுறை என் கண்ணில் பட்டிருக்கவேண்டும்.

“மன்னார் முதல் மட்டக்களப்பு வரை – பருத்தித்துறை முதல் பதுளை வரை பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு சமத்துவ சமதர்ம ஆட்சியை ஏற்படுத்துவோம்” என்று அன்றொருநாள் கோரஸாகப் பிரகடனம் எடுத்தது மின்னல் வெட்டி மறைவது போல் “தோற்று” மறைகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்