தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தரின் ஊழல், மோசடி தொடர்பில் நாளை விசாரணை

🕔 May 27, 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் –

தென்கிழக்குப் பல்கலைக் கழகலைக்கழகத்தின் உபவேந்தராக கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில் கடமையாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளன.

நடாளுமன்ற ‘கோப்’ குழு வின் விசாரணைகளின் அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உயர் கல்வியமைச்சு இந்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

இதனடிப்படையில் நாளை திங்கட்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் அதிகாரி ஒருவர், இது தொடர்பில் பலரிடம் வாக்குமூலங்களைப் பெறவுள்ளார். இது தொடர்பான அழைப்புக் கடிதங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பா கல்வியமைச்சின் உயர் அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, மேற்படி தகவலை அவர் உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்; “நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழுவின் அறிக்கையின் பிரகாரம், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம்.

இதன் அடிப்படையில் தனி நபர் விசாரணையாளர் ஒருவரை நாங்கள் தென்கிழக்கு பல்கலைக்கழத்துக்கு அனுப்புகிறோம். அவர் பலரிடம் வாக்குமூலங்களைப் பெறுவதுடன் விசாரணைகளையும் முன்னெடுப்பார். அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துக் கூற முடியும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்