அஷ்ரஃபின் கனவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உள்ளக நெருக்கடிகளும்

🕔 May 21, 2018

– ஏ.எல். நிப்றாஸ் –

ளியோடைப் பாலத்திற்கு அருகில் நெல் களஞ்சியசாலையாகவும் தென்னந்தோப்புக்களாகவும் இருந்த பல ஏக்கர் நிலப்பரப்பை பார்ப்பதற்கு எம்.எச்.எம். அஷ்ரஃப் ஒரு நாள் ஹெலிகொப்டரில் வந்தார். அந்த நிலப்பரப்பிற்கு மேலாக பலமுறை ஹெலியில் வட்டமடித்த அஷ்ரஃப், “இங்கு ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்போகின்றோம். இது லண்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் போலவும் இந்த கழியோடை ஆறு கேம்பிரிட்ஜிற்கு அருகிலுள்ள நதி போலவும் இருக்கும் என நான் கற்பனை செய்கின்றேன்” என்று தன்னுடன் வந்தவர்களிடம் சொன்னாராம்.

கிழக்கில் யுத்த மேகம் சூழ்ந்திருந்த ஒரு காலப்பகுதியில், அன்றாட வாழ்க்கையைக் கூட நடத்துவது சிரமமான ஒரு சூழலில், ஒரு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எந்த அடிப்படை வளங்களும் அற்ற,தென்னை மரச் சோலைகளும் சிதைவடைந்த நெற்களஞ்சியங்களும் நிரம்பியிருந்த ஒரு நிலப்பகுதியில் சர்வதேச தரத்துடனான அரச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவேன் என்று அஷ்ரஃப் சொன்னது, ஹெலியில் இருந்தவர்களைப் போலவே பலருக்கும் ஆச்சரியமாகவும் அதீத கற்பனையாகவும் இருந்தது.

இதைச் செய்வது சாத்தியமில்லை என்று சாதாரண பொது மக்கள் முதல், அரசியல்வாதிகள் வரை பலரும் பேசியது இப்போதும் ஞாபகத்தில் இருக்கின்றது. ஆனால், அஷ்ரஃப் அதைச் செய்து காட்டினார். அதுதான் அஷ்ரஃப்.

செய்து காட்டிய தலைமை

அவர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் அஷ்ரப் என்ற ஆளுமை இன்றிருக்கின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்களை எல்லாம் விஞ்சியவராக துருத்திக்கொண்டு தனியே மிளிருவதற்கான காரணம்; எடுத்ததை, வாக்குறுதி அளித்ததை செய்து முடிக்கும் ஆற்றலாகும். முஸ்லிம் சமூக அரசியலில் அவருக்குப் பிறகு வந்த அரசியல்வாதிகளில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே இதில் பத்தில் ஒரு பங்கு ஆற்றலைப் பெற்றிருக்கின்றனர். மற்றவர்களை அவருடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூட முடியாது.

அப்துல் கலாமுக்கு முன்னரே ‘கனவு காணுங்கள்’ என்று இலங்கை முஸ்லிம்களுக்கு சொன்னவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப். பெரிதாக கனவு கண்டாலேயே சிறிதாகவாவது கிடைக்கும் என்பது அவருடைய சித்தாந்தமாக இருந்தது. அதேபோல், செய்ய முடியாதவற்றையும் செய்து முடிக்கும் கலையே அரசியல் என்பதையும் செயலில் காட்டியவராக அவரைக் குறிப்பிட முடியும்.

அந்த வகையில் அஷ்ரஃபின் பெரும் பிரயத்தனங்களோடும் அவருடன் சேர்ந்தியங்கிய பலரது பங்களிப்புக்களுடனும் உருவான இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வாழ்வியலில் மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களினதும் வரலாற்றில் ஒரு மைற்கல் என்பதை சொல்லாமல் விட முடியாது.

எந்தவொரு பல்கலைக்கழகத்தையும் தனியொரு இனம் உரிமை கொண்டாட முடியாது என்ற போதிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டது என்றும் அதில் முஸ்லிம்களின் பங்களிப்பு அதிகம் என்பதையும் யாரும் மறுக்கவியலாது. அந்த வகையில், இப்பல்கலைக்கழகம் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களின் சமூக அரசியலில் ஒரு முக்கிய வகிபாகத்தை கொண்டிருந்ததாக குறிப்பிட முடியும். இவற்றுள் ஒலுவில் பிரகடனம் போன்றவற்றை குறிப்பிட்டுக் கூற முடியும்.

ஆனால் கடந்த 10 வருடங்களில் சமூக அரசியலில் பல்கலைக்கழகத்தின் செல்வாக்கு, தாக்கம் குறைவாக இருப்பதாக சமூக நோக்கர்கள் கூறுகின்றனர். பல்கலைக்கழகத்தின் கற்றல், தரம், பௌதீக வளங்கள் முன்னேறியிருக்கின்றது. கலாநிதிகள் மட்டுமன்றி பேராசிரியர்களும் இங்கு உருவாகியிருக்கின்றார்கள். சமகாலத்தில் சமூகத்திற்கு அவசியமான பல ஆய்வுகளும் மாநாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. இது வரவேற்கத்தக்கது என்றாலும்,முஸ்லிம் சமூக மற்றும் அரசியல் தளத்தில் மறைமுகமாக ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்தும் சக்தியாக இந்தப் பல்கலைக்கழகம் மிளிரவில்லையோ என்ற ஒரு மனக் குறை இருக்கின்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை கற்பதற்காக மட்டுமன்றி அதற்கப்பாலான இலக்குகளை நோக்கியுமே அஷ்ரப் நிறுவினார். அவரிடம் இருந்த கனவுகளை பல இடங்களில் அவர் எழுதியுமிருக்கின்றார். இன்று இப் பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் பேசப்படும் பெருமைமிகு ஒரு கல்வி மையமாக மிளிர்ந்தாலும், அஷ்ரஃபின் கனவின் வழியாக பயணிக்கவில்லையோ என்ற சிந்தனை அடிக்கடி ஏற்படுவதுண்டு.

தற்போதைய முரண்

இந்த வேளையில்தான் கடந்த ஓரிரு வருடங்களாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகள், அதனால் வளாகத்திற்கு உள்ளேயும் சமூகத்திலும் ஏற்பட்டிருக்கின்ற எதிர்விளைவுகள் பற்றியெல்லாம் பேச வேண்டியிருக்கின்றது.

பல்கலைக்கழகம் என்பது மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் அரசாங்க கல்வி மையம் என்றாலும், இப் பல்கலைக்கழகம் உண்மையிலேயே அஷ்ரப் விட்டுச் சென்ற முஸ்லிம்களின் சொத்து என்ற அடிப்படையில் அங்குள்ள விவகாரங்களை திறந்துபேச வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது. இதில் முதன்மையானது பல்கலைக்கழக உப வேந்தருக்கும் – பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள உள்ளக முரண்பாடாகும்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் எம்.எம்.எம். நாஜிம் தொடர்பாக அங்கு கடமைபுரியும் கணிசமான விரிவுரையாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். அவரது சேவைக்காலம் முடிவடையவிருக்கின்ற போதும் புதிய உபவேந்தரை நியமிப்பதற்கு தற்போதைய உபவேந்தர் நடவடிக்கைகளை மேற்கொள்ளாததையடுத்து, தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேரடியாகவே அவரை எதிர்க்க தொடங்கியது.

கடந்த பெப்ரவரி 06ஆம் திகதி ஊடகவியலாளர் மாநாட்டை நடாத்திய தெ.கி.ப. ஆசிரியர் சங்கத்தினர், உபவேந்தர் நாஜிம் மீது 20 குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதில் பிரதான குற்றச்சாட்டு; ‘அடுத்த உபவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரும் செயன்முறைகளை நாஜிம் இழுத்தடிக்கின்றார்’ என்பதாகும்.
அதாவது,வழக்கமாக இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஒரு உபவேந்தரின் பதவிககாலம் முடிவதற்கு 06 தொடக்கம் 08 மாதங்களுக்கு முன்னரே புதிய உபவேந்தரை நியமிக்க விண்ணப்பம் கோரப்படும். ஆனால் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற போதும் அவர் இன்னும் விண்ணப்பத்தை கோரவில்லை. இதன்மூலம் தனக்கு விரும்பிய ஒரு பேரவையை உருவாக்கிவிட்டு சூட்சுமமான முறையில் இப்பதவியில் தொடர்ந்து இருப்பதற்கு திட்டம் தீட்டுகின்றார் என்று ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

பேராசிரியர் நாஜிம் உப வேந்தராக வந்த பிறகு, பல்கலைக்கழகத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைவடைந்தமை, அநாமதேய கடிதத்தை அடிப்படையாக வைத்து பொலிஸில் பொய்யான முறைப்பாட்டை மேற்கொண்டமை, மானிய ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்களுக்கு முரணாக நியமனம் வழங்கியமை, கல்விசார் ஊழியர்களுக்கான முறி ஒப்பந்தத்தை தவறாக நடைமுறைப்படுத்தியமை, பிரதி உபவேந்தர் பதவியை இல்லாது செய்தமை, ஆய்வுக்கான மானிய நடைமுறையை மோசமான முறையில் அமுல்படுத்தியமை என அந்தக் குற்றச்சாட்டுக்களின் பட்டியல் நீள்கின்றது.

இவ்வாறான ஒரு ஊடக மாநாடு நடைபெறுவது பற்றியும் அங்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றியும் உபவேந்தர் நாஜிம் முன்னரும் பின்னரும் அறிந்தவராக இருந்தபோதும், அவர் ஓர் ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக இதற்கான தனது பதிலை வழங்கவில்லை. ஆனால் அவர் பக்க நியாயங்களை கூறும் கேயேடு ஒன்று வேறு ஒரு தரப்பின் பெயருடன் வெளியாகியிருந்தது. அத்துடன், உபவேந்தரிடம் இது பற்றி நாம் வினவிய போது இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துரைத்தார்.

உபவேந்தரின் கருத்து

உபவேந்தர் கருத்துக் கூறுகையில்,’இதுவெல்லாம் பொய்யான, அடிப்படையற்ற, இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள். இதை அவர்களது மனச்சாட்சிகளே சொல்லும். அத்துடன் கணிசமான விரிவுரையாளர்கள் எனது நேர்மைத் தன்மையை அறிவார்கள். அவர்கள் இந்த ஆசிரியர் சங்கம் அறிவிக்கும் தீர்மானங்களோடு உடன்படவில்லை என்றும் அறிவேன். நான் இப்பகுதியைச் சேர்ந்தவன் இல்லை என்றாலும், இந்தப் பல்கலைக்கழகம் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரஃபின் முயற்சியால் உருவானது என்பதையும் அவரது எதிர்பார்ப்பு என்னவாக இருந்தது என்பதையும் நான் அறிவேன்.

ஆனால் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு நான் வந்தபோது இது என்ன நிலைமையில் இருந்தது என்பதை பலரும் அறிவார்கள். பிரதேசவாதமும் ஒரு சிலரின் ஆதிக்கமும் மேலோங்கி இருந்தது. நிர்வாகச் சீர்கேடுகள் இருந்தன. இதையெல்லாம் இங்குள்ளவர்களின் உதவியுடன் நாம் மறுசீரமைத்திருக்கின்றோம். சட்டதிட்டங்கள் விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கின்றோம். அடிப்படை நோக்கத்திற்கு ஒவ்வாத நடைமுறைகள் நீக்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் ஒரு முறைமைக்குள் கொண்டு வந்திருக்கின்றோம்.

பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட மணித்தியாலங்கள் கற்பித்தாக வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆய்வுசார் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்படுகின்றது. ஆனபோதும், வெளிநாட்டு ஆய்வுக்காக மானியத்தொகை பெற்றுச் சென்று உரிய காலத்தில் அதனை நிவர்த்தி செய்யாத விரிவுரையாளர்கள் அந்தத் தொகையை மீளச் செலுத்தவேண்டும் என்று கோரியுள்ளேன். இவ்வாறான இறுக்கமான சட்டதிட்டங்களை கொண்டு வந்ததை பொறுத்துக் கொள்ளாதவர்களே இன்று பொய்யான குற்றச்சாட்டுக்களை என்மீது முன் வைக்கின்றனர். எனக்கு உயிர் அச்சுறுத்தல் கூட வருகின்றது என்று தெரிவித்திருந்தார்.

அதேநேரம் புதிய உபவேந்தரை நியமிப்பதற்கான விண்ணப்பத்தை இத்தனை மாதங்களுக்கு முன்னர் கோர வேண்டும் என்று எவ்வித சட்ட ஏற்பாடுகளும் இல்லை. எவ்வாறிருப்பினும் கூடிய விரைவில் விண்ணப்பம் கோரப்பட்டு உரிய காலத்தில் புதிய உபவேந்தரை நியமிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெ.கி.ப.உபவேந்தர் நாஜிம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதிலிருந்து சில வாரங்களின் பின்னர் தேசிய பத்திரிகைகளில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டது. உரிய செயன்முறைக்கு அமைவாக உபவேந்தர் நியமனம் மேற்கொள்ளப்படும் என்று உபவேந்தர் நாஜிம் கூறியிருந்தார். இந்நிலையில், புதிய உபவேந்தரை நியமிக்கும் நடைமுறையை இழுத்தடிக்க தொடர்ந்தும் முற்படுவதாக பேராசிரியர் நாஜிம் மீது, அப் பல்கலை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியிருக்கின்றது.

அடுத்த கட்டம்

தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் இம்முறை ஊடக சந்திப்பை பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துவதற்கு கடைசிநேரத்தில் உபவேந்தரும் பதிவாளரும் அனுமதி அளிக்கவில்லை. அது வேறுவிடயம். ஆனால், அங்கு வந்திருந்த ஊடகவியலாளர்களுக்கு வாயிற்காவலர்கள் சிலர் அதிகப்பிரசங்கித்தனமாக தவறான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டமை கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளது.

இதனால் வேறு ஒரு இடத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த ஆசிரியர் சங்கத்தினர், புதிய உபவேந்தர் நியமனத்தை மேலும் காலதாமதப்படுத்துவதற்கும் தானே அப்பதவியில் தொடர்ந்து இருப்பதற்குமாக உபவேந்தர் கபடநாடகமாடுகின்றார் என்று குற்றம் சுமத்தியுள்ளனர். 24.02.2018 நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட 06 தீர்மானங்களுள் 04 தீர்மானங்கள் சரியாக நடைமுறைப்படுத்தியதாகவும் மற்றைய இரு நடவடிக்கைகளையும் குழப்பும் விதத்தில் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, திருமலையைச் சேர்ந்த ஏ.ஆர்.ஏ. ஜவாஹிர், உப வேந்தருக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வந்ததாகவும் பல்கலைக்கழக பதிவாளர் கடமையில் இருக்கவில்லை என்றும் அவரால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலை ஆதாரமாக வைத்துக் கொண்டு, இதனை பெரிதுபடுத்தி, புதிய உபவேந்தரை நியமிக்கும் செயன்முறைகளுக்கு தற்போதைய உபவேந்தர் தடை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஆசிரியர் சங்கம் தெரிவித்தது.

ஜவாஹிர் என்பவர் அந்த தினத்தில் ஒலுவிலுக்கு வரவும் இல்லை என்பதுடன் அவர் வேறு பணிகளில் ஈடுபட்டிருந்தமைக்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும் சங்கம் கூறுகின்றது. எனவே வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் இது நகர்த்தப்பட்டிருக்கின்றது என்பதும் இதனுடன் உபவேந்தருக்கு தொடர்பிருக்கலாம் என்பதுமே சங்கத்தின் நிலைப்பாடாகவும் அறிவிக்கப்பட்டது.

அதேநேரம், இது தொடர்பாக உபவேந்தர் நாஜிம் ஊடமொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், “இது அடிப்படையற்ற, போலிக் குற்றச்சாட்டுக்கள்” என்றும், “இவற்றுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஏற்கனவே சட்ட ஆலோசனை பெற்றுள்ளது” எனவும் கூறினார்.

இரண்டு குழுக்கள்

தெ.கி.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் உபவேந்தர் மீதான குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றது. ஆனபோதும், சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ஐவர் ஒப்பமிட்டு பதில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். உபவேந்தர் மீதான குற்றச்சாட்டுக்களை அவர்கள் அதன்மூலம் வன்மையாக மறுத்துரைத்திருக்கின்றனர்.

ஆகவே, 11 பேர் கொண்டதாக கூறப்படும் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவில் 5 பேர் உபவேந்தரின் பக்கம் நியாயம் இருப்பதாக சொல்வார்களாயின், அந்த சங்கத்திற்குள்ளேயே இரண்டு நிலைப்பாடுகள் இருப்பது புலனாகின்றது. இதேபோல் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களிடையேயும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரு நிலைப்பாடுகள் இருக்கலாம் என்பதையும் இதன்மூலம் ஊகிக்க முடிகின்றது.

இந்த விவகாரத்தில் யாருடைய பக்கம் நியாயம் இருந்தாலும் அதற்காக குரல்கொடுக்கவும் நீதியை நிலைநாட்டவும் வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதில் எவ்வித மறுபேச்சுக்கும் இடமில்லை. அது உபவேந்தராயினும் சரி, ஆசிரியர் சங்கமாயினும் சரியே. ஆனால், இவ்வாறு இரு தரப்பு முரண்பாடுகளும் மாணவர்களிலும் சமூகத்திலும் ஏற்படுத்தும்நெருக்கடிகள்தான் அதைவிட முக்கியமானவையாகும்.

ஆளுக்காள் குற்றம் சுமத்திக் கொண்டும், அதிகாரப் பலப்பரீட்சை நடத்திக் கொண்டும் இருப்பதால் பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கை பாதிக்கப்படுவது ஒருபுறமிருக்க, தெ.கி. பல்கலைக்கழகம் தொடர்பாக தேசிய ரீதியில் ஒரு தவறான இமேஜூம் உருவாக காரணமாகி விடும்போல் தெரிகின்றது.

தென்கிழக்கு பல்கலைக்கழகம் பெரும் எதிர்பார்ப்புக்களோடு உருவாக்கப்பட்ட சொத்து. எனவே இந்த கனவுகளை வீணாக்குவதற்கு யாரும் காரணமாகி விடக் கூடாது. ஆகவே  இது விடயத்தில் அரசியல்வாதிகளும் முஸ்லிம் புத்திஜீவிகள், கல்வியலாளர்களும் உடன் கவனம் செலுத்தி அங்கு ஏற்பட்டிருக்கும் உள்ளக நெருக்கடிகளை போக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Comments