பட்டு வேட்டியும், துண்டுத் துணியும்

🕔 November 28, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

ட்காயம் போல் இருந்து வந்த, நல்லாட்சியாளர்களுக்கிடையிலான முறுகல்கள், வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ஜனாதிபதியை நேரடியாகவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறமாக, “அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினர் ஊழல் மேற்கொண்டால், அதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஊழலுக்கு எதிராகச் செயற்படுவதற்குத் எனது பதவி ஒரு தடையாக இருந்தால், அதைத் துறப்பதற்குத் தயார்” என ஜனாதிபதி கூறியிருக்கின்றார்.

உற்று நோக்கும்போது, இவையெல்லாம் யுத்தமொன்றுக்கு முன்னரான பேரிகைச் சத்தம் போலவே காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நல்லாட்சியாளர்கள் மக்களுக்கு ஏமாற்றங்களைப் பரிசளிக்கத் தொடங்கியுள்ளார்கள். நல்லாட்சி எனும் வார்த்தை, இந்த அரசாங்கத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொச்சைப்படத் தொடங்கியுள்ளது. திருட்டைப் பிடிக்க வந்தவர்களே திருடர்களாக மாறிக் கொண்டிருக்கும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தேசத்தின் நலனுக்காகக் கைகோர்த்துக் கொண்டதாகக் கூறியவர்கள், கட்சி அரசியலுக்குள் சறுக்கி விழுந்துள்ளனர்.

சுதந்திரக் கட்சியைப் பலவீனப்படுத்தும் செயற்பாடுகளில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகிறாரென அரசியலரங்கில் பேசப்பட்டது. அதேபோன்று, ஐ.தே.கட்சியைப் பலம் குன்றச் செய்யும் செயற்பாடுகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருகிறாரெனவும் கூறப்பட்டது.

சில நாட்களுக்கு முன்னர் வரை கிசுகிசுவாகப் பேசப்பட்ட இந்த விடயங்கள், இப்போது பகிரங்கமாக அரசியலரங்கில் பேசப்படுகின்றன.

பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரிப்பதற்காக, ஓர் ஆணைக்குழுவை ஜனாதிபதி அமைத்தமை, ஐ.தே.கட்சிக்கு எதிரான செயற்பாடாகும் என்று, ஐ.தே.கட்சியினர் கூறத் தொடங்கியுள்ளனர்.

இந்த கூற்றில் உண்மைகள் இல்லை என்று கூறிவிடவும் முடியாது. பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புபட்டவர்கள், ஐ.தே.கட்சிக்குள் இருப்பதைக் கணித்துக் கொண்ட பின்னர், ஜனாதிபதி இந்தச் சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்திருக்கவும் கூடும்.

இருந்தபோதும், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்றால், ஐ.தே.கட்சிக்கு இந்தளவு கை நடுங்கத் தேவையில்லை என்பது, நடுநிலையாளர்களின் கருத்தாகவும் உள்ளது.

எது எவ்வாறாயினும், ஐக்கிய தேசியக் கட்சியைச் சீர்குலைப்பதற்காக, பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழுவை ஜனாதிபதி அமைக்கவில்லை என்று, அமைச்சர் பி. ஹரிசன் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார். அதேவேளை, பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டவர்களின் பெயர்கள், அடுத்த வாரம் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை, இப்போதைய நிலையில் தேர்தலொன்றை எதிர்கொள்ளக் கூடிய நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இல்லை என்று கூறப்படுகிறது. சுதந்திரக் கட்சிக்கு, மஹிந்த அணி பெரும் சவாலாக உள்ளது.

தேர்தலொன்று நடந்தால், சுதந்திரக் கட்சி நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும் என்கிற பேச்சு, அரசியலரங்கில் உள்ளது. இப்படியானதொரு நிலையில்தான் உள்ளூராட்சித் தேர்தலொன்றை நடத்துவதற்கான முனைப்பொன்று மேற்கொள்ளப்படுகிறது.

சுதந்திரக் கட்சியின் பலவீனத்தைத் தெரிந்து கொண்டு, பிரதமர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கான முடிவைத் தன்னிச்சையாக எடுத்தாரெனக் கூறப்படுகிறது. கட்சி அரசியலில் மைத்திரியைப் பலவீனப்படுத்தி, அவரைத் தனது வழிக்குக் கொண்டு வருவதற்காகவே ரணில் இப்படிச் செய்ததாகவும் பேசப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரி, இந்த நகர்வை அறிந்து கொள்ள முடியாதவரல்லர். உள்ளூராட்சித் தேர்தலொன்று இப்போது நடந்தால், அரசியல் ரீதியாகத் தானும், தான் தலைமை தாங்கும் கட்சியும் பலமிழந்து போகும் நிலை ஏற்படும் என்பது அவருக்கு மிக நன்றாகவே தெரியும்.

அப்படியென்றால் என்ன செய்வது? ஒன்றில் தேர்தலை நடத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அல்லது சுதந்திரக் கட்சியின் பலத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும்.

இரண்டையுமே ஜனாதிபதி செய்து வருகிறார் என்றுதான் பேசப்படுகிறது. மிக வெளிப்படையாகச் சொன்னால், உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக சில வழக்குகள் தொடரப்பட்டு, அதனூடாகத் தேர்தலை நடத்தாமல் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன அல்லவா? இதன் பின்னணியில் இருப்பவர் ஜனாதிபதி என்றுதான் குற்றஞ்சாட்டப்படுகிறது.

நாடாளுமன்றத்திலுள்ள ஐ.தே.கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள், இதை ஊடகங்கள் முன்னிலையிலேயே சாடை மாடையாகத் தெரிவித்திருந்தனர். தேர்தலை நடத்தாமல் செய்வதனூடாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, வில்லனாகக் காட்டுவதற்கு முயல்பவர் யார் என்பதை, தாங்கள் அம்பலப்படுத்தப் போவதாக, அவர்கள் கூறியிருந்தார்கள்.

மேலும், மலர் மொட்டும் (மஹிந்த அணியும்), வெற்றிலையும் (மைத்திரி அணியும்) ஒற்றுமைப்படும் வரையில் தேர்தலைப் பிற்போட வேண்டிய தேவை உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஜனாதிபதியை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர்கள் இவற்றையெல்லாம் கூறினார்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கு, அவ்வளவு பெரிய அரசியல் அறிவு தேவையில்லை.

உண்மையாகவே, ஜனாதிபதி தலைமை தாங்கும் சுதந்திரக் கட்சியைத் தவிர, மற்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென வலியுறுத்துகின்றன. ஆனால், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றால், அதில் தோற்றுப் போய் விடுவோம் என்கிற பயம், சுதந்திரக் கட்சியினருக்கு நிறையவே இருக்கிறது.

மைத்திரியிடம் அவரின் கட்சியிலுள்ள மூத்த தலைவர்களே இந்த அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தத் தோல்வியிலிருந்து தப்பிக்க வேண்டுமாயின், மஹிந்தவுடன் கைகோர்த்தே ஆக வேண்டும் என்றும், மைத்திரியிடம் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதை மைத்திரியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதனால்தான் சுதந்திரக் கட்சிக்கும் மஹிந்த தரப்பினருக்கும் இடையில் நேற்றுத் திங்கட்கிழமை சந்திப்பு ஒன்றுக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்புக் குறித்து இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை எதுவும் தெரியவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்தின் தலைவர்களுடைய இந்தக் கூத்துகளையெல்லாம் பார்க்கும்போது, வேதனையாக உள்ளது. கவிஞர் வைரமுத்துவின் பாணியில் சொன்னால், பட்டு வேட்டி பற்றிய கனவுகளோடு வந்த நல்லாட்சித் தலைவர்கள், கோவணங்களுக்காகச் சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். “நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்புவோம்” என்று கூறிப் பதவிக்கு வந்தவர்கள், தங்கள் கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, மஹிந்த ராஜபக்ஷவின் நிழலில் தஞ்சம் தேடத் தொடங்கியுள்ளமையானது, வெட்கக் கேடானதாகும்.

பதவியும், அதிகாரமும் மிகப்பெரும் போதை என்பது அநேகமாகப் பொய்த்துப் போனதில்லை. “நாட்டுக்காகக் கூட்டாட்சி அமைக்கின்றோம்” என்று கூறி வந்தவர்கள், தங்கள் கதிரைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் காய் வெட்டத் தொடங்கியுள்ளமை கவலைக்குரியதாகும்.

நல்லாட்சியாளர்களின் இந்தச் சதுரங்க ஆட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷதான் அதிகம் பலனடைந்து கொண்டிருக்கின்றார் என்பது, நல்லாட்சியைக் கொண்டு வர வாக்களித்தவர்களுக்கு வேதனையான செய்தியாகும்.

நல்லாட்சி என்பது ஊழலற்றதாக இருக்க வேண்டும்; ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்; இந்த இரண்டையும் நிறைவேற்றுவதற்காக கடினமாக உழைக்க வேண்டும். ஆனால், ஆட்சிக்கு வந்தவுடனேயே இவர்கள் பிணைமுறி விவகாரத்தில் பல்லாயிரம் மில்லியன் ரூபாய்களை ஏப்பமிட்டிருக்கின்றார்கள் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஏற்கெனவே திட்டமிட்டு ஒத்தி வைத்து விட்டார்கள். உள்ளூராட்சித் தேர்தலையும் நடக்காமல் செய்வதற்கான தந்திரங்களைச் செய்து வருகின்றனர். இதனால், மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமைக்கு ஆப்பு விழுந்திருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லாமே, தலைகீழாக மாறிப் போயிருக்கிறது. கறுப்பு நிறத்திலுள்ள பிள்ளையொன்றுக்கு ‘வெள்ளையன்’ என்று பெயர் இருப்பதைப் போலதான், ‘நல்லாட்சி’ என்பதைப் பார்க்க முடிகிறது.

இவ்வாறானதொரு நிலையில், 93 உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது. இதற்கிணங்க, எதிர்வரும் 13ஆம் திகதி வரை, தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தைச் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது சட்டப் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, இந்தச் சபைகளுக்கும் தேர்தல்களை நடத்த விடாமல் வழக்குத் தாக்கல் செய்யப்படவும் கூடும்.

தேர்தலில் தோற்றுப் போய் விடுவோம் என்கிற அச்சம் உள்ளவர்கள் எதையும் செய்து பார்க்கத் தயங்க மாட்டார்கள்.

இவை அனைத்தையும் தாண்டி உள்ளூராட்சித் தேர்தல்கள் மேற்படி 93 சபைகளுக்கும் நடந்தால், அதுவே பெரிய விடயமாகும். ஆனால், மாரி காலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்தும்.

குறிப்பாக, பிரசாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு மக்களைத் திரட்டிக்கொள்ள முடியாது போய் விடும். இதை மனதில் வைத்துக் கொண்டுதான், மாரி காலத்தில் தேர்தலை வைக்க வேண்டாம் என்று தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா வேண்டுகோள் ஒன்றை முன்வைத்திருந்தார். ஆனால், இப்போதைக்கு தேர்தலொன்று நடத்தப்படுவதென்பதே பெரிய விடயம் என்பதால், மாரி மழை குறித்து ஏனைய கட்சிகள் அலட்டிக் கொள்ள மாட்டாது என நம்பலாம்.

இதேவேளை, முஸ்லிம் மற்றும் தமிழ்ச் சமூகங்களில் பிரதான கட்சிகளாக உள்ள முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றுக்குள் உடைவுகள் ஏற்பட்டிருக்கும் நிலையில், அவை உள்ளூர் மட்டத்தில் தேர்தலொன்றை எதிர்கொள்ளப் போகின்றன.

குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸிலிருந்து ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் தரப்புப் பிரிந்து போன பிறகு நடக்கும் முதலாவது தேர்தல் இதுவாகும். எனவே, இந்தத் தேர்தலானது முஸ்லிம் காங்கிரஸுக்கு அதி முக்கியமானதொன்றாக இருக்கப் போகிறது.

இந்த நிலையில், முஸ்லிம் கூட்டமைப்பொன்று இந்தத் தேர்தலில் களமிறங்கும் என நம்பப்படுகிறது. ஆனாலும், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தேசிய காங்கிரஸானது, முஸ்லிம் கூட்டமைப்பில் இணையும் என்று கடைசிவரை எதிர்பார்க்கப்பட்ட போதும், அது சாத்தியமாகவில்லை என அறிய முடிகிறது.

இந்த நிலையில், அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பெரும்பான்மையைக் கொண்ட அத்தனை உள்ளூராட்சி சபைகளையும் தாங்கள் கைப்பற்றுவோம் என்று, தேசிய காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது. என்ன தைரியத்தில் தேசிய காங்கிரஸ் இப்படிக் கூறியிருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால், முஸ்லிம் கூட்டமைப்புக்கு இந்த உள்ளூராட்சித் தேர்தல் நல்ல முடிவுகளைக் கொடுக்கும். முஸ்லிம் கூட்டமைப்பில் இப்போதைக்கு ஹசன்அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் தரப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணையும் சாத்தியம் உள்ளது. ஹசன் அலி மற்றும் பஷீர் தரப்பு ஏதாவதொரு கட்சியாகவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸுடன் இணையும் சாத்தியம் இருப்பதாகவும் அறிய முடிகிறது.

அம்பாறை மாவட்டத்தில் எந்தவோர் உள்ளூராட்சி சபையிலும் ஹசன் அலி தரப்பினருக்கோ அல்லது அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கோ ஓர் உறுப்பினர் கூட இருந்ததில்லை. அந்தவகையில், எதிர்வரும் தேர்தலில் இந்த அணியினர் வெற்றி கொள்ளும் ஒவ்வோர் உறுப்பினரும், அவர்கள் கணக்கில் இலாபம்தான்.

மூன்று வருடங்களுக்கு முன்னர் நல்லாட்சியாளர்கள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளைப் போலவே, முஸ்லிம் கூட்டணி பற்றிய எதிர்பார்ப்பொன்று கிழக்கு மக்களிடம் உள்ளது.

அது எப்படிப் பூர்த்தியாகப் போகிறது என்பதை, கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நன்றி: தமிழ் மிரர் (28 நொவம்பர் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்