சிக்கித் தவிக்கும் ‘மயிலு’

🕔 August 4, 2015

Article - 04

ம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளன. ஆனால், அதை விடவும் சூடு பிடித்திருக்கும் விடயம், அ.இ.ம.காங்கிரசின் மயில் சின்னத்தில் போட்டியிடும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் என்பவர், பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை தொடர்பில் எழுந்துள்ள சட்டப் பிரச்சினை குறித்த விவகாரமாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்திலிருந்து அ.இ.ம.காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், அதே பல்லைக்கழகத்தில் முதலாம் தர சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றி வந்த நிலையிலேயே, பொதுத் தேர்தலில் போட்டியிட களமிறங்கியுள்ளார்.

குற்றச்சாட்டுகள்

இந்த நிலையில், மேற்படி எஸ்.எம்.எம். இஸ்மாயில் – தனது தொழிலை ராஜிநாமா செய்து விட்டே வேட்புமனுத் தாக்கல் செய்திருக்க வேண்டும் என்கிற, சட்ட ரீதியான வாதமொன்று முன்வைக்கப்படுகிறது. ஆனால், விடுமுறைக்கு விண்ணப்பித்த நிலையில்தான், இஸ்மாயில் – தனது வேட்புமனுவினைத் தாக்கல் செய்திருக்கிறார். எனவே, சட்டரீதியாக இஸ்மாயில் தவறிழைத்துள்ளதாகவும், அதன் காரணமாக, அவரால் நாடாளுமன்ற உறுப்பினராக முடியாது எனவும், இஸ்மாயிலுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதேவேளை, இந்தச் சட்டச் சிக்கல்களையெல்லாம் தாண்டி, நாடாளுமன்றம் செல்வதற்கு இஸ்மாயிலால் முடியாது என்றும், அவ்வாறு அவர் நாடாளுமன்றம் செல்வாராயின், தனது காதினை அறுத்தெறிவேன் என்றும், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் – தேர்தல் மேடைகளில் சவால் விடுத்து வருகின்றார். மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், ஒரு சட்ட முதுமானி என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் பிரவேசம்

இஸ்மாயில் என்பவர் – அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையை சொந்த இடமாகக் கொண்டவர். இவர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இரண்டு தடவை பதவி வகித்தவர். நபரொருவர், இரண்டு தடவைக்கு மேல் உபவேந்தர் பதவியினை வகிக்க முடியாது என்பதனால், மேற்படி இஸ்மாயில், அதே பல்கலைக்கழகத்தின் – கலை மற்றும் கலாசார பீடத்திலுள்ள சமூக சேவைத் திணைக்களத்தில், முதலாம் தர சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வந்தார். இவ்வாறானதொரு நிலையில்தான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அ.இ.ம.காங்கிரசின் மயில் சின்னத்தில் ஒரு வேட்பாளராக, இஸ்மாயில் களமிறங்கியுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 29 ஆம் திகதியன்று, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தருக்கு, மேற்படி இஸ்மாயில் கடிதமொன்றினை எழுதினார். அந்தக் கடிதத்தில், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய எண்ணம் அவருக்கு உள்ளமையினை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் பின்னர், ஜுலை மாதம் 11 ஆம் திகதியன்று, அதாவது, பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும் இறுதித் தினமான ஜுலை 13 ஆம் திகதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், இன்னுமொரு கடிதத்தினை, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு, இஸ்மாயில் எழுதியிருந்தார். குறித்த கடிதத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில், தான் – ஓர் அபேட்சகராகப் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கிணங்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தாபனக் கோவை இலக்கம் 1:3:2, அத்தியாயம் xvii இன் படியும், இலங்கை அரசியலமைப்பின் பிரிவு 102 இன் அடிப்படையிலும் அந்தக் கடிதத்தில் கோரிக்கையொன்றினை அவர் விடுத்திருந்தார்.

அதாவது, தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளமையினால், மேற்குறிப்பிட்ட பிரிவுகளின் அடிப்படையில், 2015 ஜுன் 29 ஆம் திகதி முதல், 2015 ஓகஸ்ட் 18 ஆம் திகதிவரை, அவருக்கு விடுமுறை வழங்குமாறு, தனது கடிதத்தில் இஸ்மாயில் கேட்டிருந்தார்.

இங்குதான் பிரச்சினை ஆரம்பமாகிறது.

அரசியலமைப்பின் 102 ஆம் பிரிவு என்ன சொல்கிறது. ‘பகிரங்க அலுவலர் ஒருவர் அல்லது பகிரங்கக் கூட்டுத்தாபனமொன்றின் அலுவலர் ஒருவர், ஏதேனும் தேர்தலில் வேட்பாளர் ஒருவராக இருப்பின், அவர் எத்தேதியன்று வேட்பாளர் ஒருவராக பெயர் குறித்து நியமிக்கப்பட்டாரோ, அத்தேதியிலிருந்து – தேர்தல் முடியும் வரை, விடுமுறையில் இருப்பதாகக் கருதப்படுதல் வேண்டும். அத்தகைய பகிரங்க அலுவலர் ஒருவர் அல்லது பகிரங்கக் கூட்டுத்தாபனத்தின் அலுவலர் ஒருவர், இக்காலப் பகுதியின்போது, தமது பதவிக்குரிய தத்துவங்கள், கடமைகள் அல்லது பணிகள் எவற்றினையும் பிரயோகித்தல், புரிதல் அல்லது நிறைவேற்றுதல் ஆகாது’ என்கிறது.

இதற்கிணங்கவே, முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில், தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, விடுமுறை கோரியிருந்தார்.

சட்டச் சிக்கல்

ஆனால், மேற்சொன்ன பிரிவின் அடிப்படையில், விடுமுறை எடுத்துக் கொண்டு, தேர்தலில் போட்டியிடுவதற்கு, சட்டரீதியாக இஸ்மாயில் தகுதியற்றவர் என்கிற வாதமொன்று முன்வைக்கப்படுகிறது.

ஏனெனில், ‘7200 ரூபாவுக்குக் குறையாத ஆண்டுச் சம்பளத்தை, அதன் சம்பள அளவுத் திட்டத்தின் தொடக்கச் சம்பளமாகக் கொண்டுள்ள ஒரு பதவியை வகிக்கும் பகிரங்கக் கூட்டுத்தாபன அலுவலராக இருப்பவர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாமற் செய்யும் தகமையீனத்தைக் கொண்டுள்ளார்’ என்று, அரசியலமைப்பின் பிரிவு 91(1)(ஈ)viii கூறுகிறது.

மேற்படி சம்பளத்திட்டமானது 1970 ஆம் ஆண்டுக்குரியது. அந்த சம்பளத் தொகையினை, தற்போதைய சம்பளத் திட்டத்துக்கு மாற்றிக் கணிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆக, அரசியலமைப்பின் மேற்குறிப்பிட்ட பிரிவின்படி, இஸ்மாயில் – தன்னுடைய பதவியினை ராஜிநாமாச் செய்து விட்டுத்தான் தேர்தலில் குதித்திருக்க வேண்டும் என்கின்றனர் இஸ்மாயிலுக்கு எதிரானவர்கள். ஆனால், அவர் – அவ்வாறு செய்யாமல், தனது பதவியில் இருந்து கொண்டு, தேர்தலில் களமிறங்கியமையினால், அவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட முடியாதவராகிறார் எனவும் மேற்படி நபர்கள் வாதிடுகின்றனர்.

இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தாபனக்கோவை இலக்கம் 2:1, அத்தியாயம் xvii இனையும், இஸ்மாயிலுக்கு எதிரானவர்கள் கையிலெடுத்துள்ளனர். மேற்படி தாபனக்கோவை கூறுகின்ற விடயம் இதுதான். அதாவது, ‘அரசியலமைப்பு 91(1)(ஈ)viii இல் கூறப்பட்டுள்ளதன் பிரகாரம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவராவார். எனவே, அவ்வாறான பதவியினை வகிக்கும் மேற்படி நபர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கோ, வேட்பு மனுவினைவித் தாக்கல் செய்வதற்கோ எண்ணம் கொண்டிருப்பார்களாயின், அவர்கள் தமது பதவிகளை முதலில் ராஜிநாமாச் செய்தல் வேண்டும்’ என்பதாகும்.

இன்னொருபுறம், இவ்விவகாரம் தொடர்பில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின், 2009 ஜுலை 22 ஆம் திகதியிடப்பட்ட 914 ஆம் இலக்க சுற்று நிருபமும் அறிவுறுத்லொன்றினை வழங்குகிறது. அதாவது, ’91(1)(ஈ)viii இல் குறிப்பிடப்பட்டுள்ள, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கடமையாற்றும் எந்தவொரு பணியாளரும், மாகாணசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதியை இழக்கின்றார்’ என, அந்த சுற்று நிருபம் கூறுகிறது.

நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான விவகாரத்துக்கும், இந்த சுற்று நிருபத்தில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பொருந்தும் என்கின்றனர் சட்ட நிபுணர்கள்.

மேற்சொன்ன விடயங்களை விளங்கிக் கொள்வதற்கு சிரமமாக இருக்குமாயின், அதை வேறொரு வகையில் இலகுவாக விபரிக்க முடியும். அதாவது, சம்பளத் திட்டத்தின் அடிப்படையில், அரசாங்க மற்றும் கூட்டுத்தாபன உத்தியோகத்தர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். (01) நிறைவேற்று அதிகாரம் கொண்ட உத்தியோகத்தர்கள். (02) நிறைவேற்று அதிகாரமற்ற உத்தியோகத்தர்கள்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட உத்தியோகத்தர்களுக்கு அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை கிடையாது. எனவே, அவர்கள் – அரசியலில் ஈடுபட வேண்டுமாயின், அவர்கள் வகிக்கும் பதவியினை ராஜிநாமாச் செய்தல் அவசியமாகும்.

இந்த வகையில், வேட்பாளர் இஸ்மாயில் – நிறைவேற்று அதிகாரமுடைய பதவியைக் கொண்டவர். எனவே, அவரால், அரசியலில் ஈடுபட முடியாது என்பதுதான் அவருக்கெதிராக முன்வைக்கப்படும் வாதமாகும்.

மாற்று நடவடிக்கை

தனது அரசியல் செயற்பாடு குறித்து, மேற்படி வாதப் பிரதிவாதங்கள் உள்ளமையினை அறிந்து கொண்ட இஸ்மாயில், ஜுலை மாதம் 21 ஆம் திகதியிடப்பட்ட ராஜிநாமாக் கடிதமொன்றினை, அவர் பணியாற்றும் கலை மற்றும் கலாசார பீடத்திலுள்ள சமூக சேவைத் திணைக்களத்தினூடாக, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு அனுப்பி வைத்தார்.

எவ்வாறாயினும், மேற்படி இஸ்மாயில் – தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, ஓர் அபேட்சகராக வேட்புமனுத் தாக்கல் செய்து 08 நாட்களின் பின்னர்தான், பல்கலைக்கழகத்தில் அவர் வகித்த சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியினை ராஜிநாமாச் செய்வதாக, எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

எதிராளிகளின் முறைப்பாடு

இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அம்பாறை மாவட்ட வேட்பாளர்கள், ஜுலை மாதம் 13 ஆம் திகதி, அவர்களின் வேட்புமனுவினை அம்பாறை கச்சேரியில் சமர்ப்பித்த நிலையில், குறித்த வேட்புமனு தொடர்பாக, தேர்தல்கள் ஆணையாளரிடம் முஸ்லிம் காங்கிரசின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி. ஹசனலி எழுத்து மூலம் முறைப்பாடொன்றினைக் கையளித்ததாகத் தெரிவிக்கின்றார். அந்த முறைப்பாட்டில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற அ.இ.ம.காங்கிரசின் வேட்பாளர் பட்டியலிலுள்ள அபேட்சகரான எஸ்.எம்.எம். இஸ்மாயில், அரசியலமைப்பு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தாபனக்கோவை ஆகியவற்றினை மீறிய நிலையில், தனது பதவியில் இருந்து கொண்டு, தேர்தலில் போட்டியிடுகின்றமையினைச் சுட்டிக்காட்டியதாகவும் ஹசனலி கூறினார்.

இன்னொருபுறம், அ.இ.ம.காங்கிரசின் வேட்புமனு சமர்ப்பிக்கப்பட்ட தினமன்று, அக்கட்சியின் வேட்புமனு தொடர்பில், சில சுயேற்சைக் குழுக்களும் அம்பாறை கச்சேரியிலுள்ள தேர்தல் அதிகாரிகளிடம், தமது எதிர்ப்பினை வெளியிட்டதாகவும் அறிய முடிகிறது. இஸ்மாயிலின் விவகாரத்தினைச் சுட்டிக்காட்டியே, குறித்த சுயேட்சைக் குழுக்கள், தமது எதிர்ப்பினைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஆயினும், அ.இ.ம.காங்கிரசின் அம்பாறை மாவட்டத்துக்கான வேட்புமனுவினை நிராகரிக்க முடியாதென அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவித்து விட்டார். காரணம், ஒரு வேட்புமனுவினை நிராகரிப்பதற்குரிய காரணங்களாக, தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுள், இஸ்மாயிலுக்கு எதிராகக் சுமத்தப்பட்டுள்ள விவகாரங்கள் எவையும் அடங்காது என்பதனாலாகும். எனவே, இஸ்மாயில் தொடர்பான விவகாரத்தினை, நீதிமன்றம் கொண்டு சென்று, சட்டரீதியான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதே, அடுத்த தெரிவாக இருந்தது.

வழக்குத் தாக்கல்

அந்தவகையில், இந்த விவகாரத்தினை முன்னிறுத்தி, சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும், சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம். முஸ்தபா, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், தனது சட்டத்தரணியூடாக மனுவொன்றினைத் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் யாப்பு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தாபனக்கோவை ஆகியவற்றினை மீறி, சட்டத்துக்கு முரணான வகையில், இஸ்மாயில் என்பவர் செயற்பட்டுள்ளதாகவும், தன்னுடைய பதவியினை ராஜிநாமாச் செய்யாமல், அவர் – எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, திகாமடுல்ல மாவட்டத்தில் ஓர் அபேட்சகராகப் போட்டியிடுகின்றார் என்பதையும், சட்டத்தரணி முஸ்தபா, தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மனுவில் – தேர்தல்கள் ஆணையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், அபேட்சகர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதற்கிணங்க, அரசியல் யாப்பின் 91 ஆம் பிரிவின்படி, இஸ்மாயில் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினராகுவதற்குத் தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்துமாறு, குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்மாயிலை ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக பிரகடனப்படுத்தக் கூடாது என்று, தேர்தல் ஆணையாளருக்கு ஆணையிடுமாறும் தனது மனுவில் சட்டத்தரணி முஸ்தபா வேண்யுள்ளார்.

இதேவேளை, இஸ்மாயிலிடமிருந்து – பிந்திய திகதியிடப்பட்ட ராஜிநாமாக் கடிதங்கள் எவற்றினையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதிவாளருக்கு இடைக்காலத் தடையுத்தரவொன்றினை நீதிமன்றம் வழங்க வேண்டுமெனவும் மனுதாரர் கோரியுள்ளார்.

இந்த மனுவின் அடிப்படையில், குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் வரப்போகும் தீர்ப்பிலேயே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் இஸ்மாயிலின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது.

பழைய கதை

கிட்டத்தட்ட, இதேபோன்றதொரு வழக்கின் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, 1999 ஆம் ஆண்டு – நீதிமன்ற தீர்ப்பினூடாக, அவருடைய நாடாளுமன்ற உறுப்புரிமையினை இழந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பின் பிரிவு 91(உ) இன் பிரகாரம், அரசாங்க ஒப்பந்ததாரர்கள், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்குரிய தகைமை அற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.

1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக களுத்துறை மாவட்டத்தில் போட்டியிட்ட ராஜித சேனாரத்ன, அந்தத் தேர்தலில் வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த நிலையில், ராஜித சேனாரத்னவுக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அரசாங்க ஒப்பந்தகாரராகச் செயற்படுகின்றார் என்றும், இது அரசியலமைப்புக்க முரணானது என்றும், அதனால், அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு ராஜித – சேனாரத்ன தகைமையற்றவர் என உத்தரவிடுமாறும், அந்த வழக்கில் நீதிமன்றத்தினை திலான் பெரேரா கோரியிருந்தார்.

வழக்கினை விசாரித்த நீதிமன்றம், 1999 ஆம் ஆண்டு, ராஜித சேனாரத்னவின் நாடாளுமன்ற உறுப்புரிமையினை இல்லாமல் செய்து தீர்ப்பு வழங்கியது. இதனால், ராஜித சேனாரத்ன அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார்.

கள நிலைவரம்

இது இவ்வாறிருக்க, வேட்பாளர் இஸ்மாயில் தொடர்பான இந்த விவகாரம் குறித்து, அவரின் தரப்பு நியாயங்களைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, இஸ்மாயிலைத் தொடர்பு கொண்டு பேசினோம். எமது கேள்விகளுக்கு நேரடியான பதில்களை வழங்குவதிலிருந்தும் அவர் தவிர்ந்து கொண்டார்.

ஆயினும், இவ்விடயத்தில், சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அனைத்தினையும், தான் மேற்கொண்டுள்ளதாகவும், தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தனது கையில் வைத்துள்ளதாகவும், இஸ்மாயில் நம்மிடம் கூறினார்.

எவ்வாறாயினும், மயில் சின்னத்தில் போட்டியிடும் இஸ்மாயிலின் அரசியலில், இது மாபெரும் கண்டம்தான். சில திரைப்படங்கள் சண்டைக் காட்சிகளுடன் ஆரம்பமாவது போல, இஸ்மாயிலுடைய அரசியல் வாழ்க்கை, சிக்கல்களுடன்தான் துவங்கியிருக்கிறது.

ஓட்டப் பந்தயத்தில், வெல்லும் என்கிற குதிரை மீதுதான் பந்தயங்கள் கட்டப்படும். ஓடுமா எனும் நிலையிலுள்ள குதிரை மீது – பந்தயம் கட்டுவற்கு, எத்தனை பேர் துணிவார்கள் எனத் தெரியவில்லை.

சட்ட விவகாரத்தில் சிக்கிக் கொண்டதால், இப்போதைய தேர்தல் களத்தில், இரண்டாவது ரகக் குதிரை போலவே, இஸ்மாயில் நமக்குத் தெரிகிறார்.

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்