மாகாணசபை தேர்தலும், 50:50 முறைமையும்: இலகுவான ஒரு விளக்கம்

🕔 September 29, 2017

– ஜவ்ஸி அப்துல் ஜப்பார் –

மாகாணசபை தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்டு அண்மையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் இருந்து வந்த விகிதாசார தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்பட்டு, தற்போது தொகுதியும் விகிதாசாரமும் சேர்ந்த கலப்பு தேர்தல் முறைமை கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தக் கலப்பு முறைமையினூடாக தொகுதி வாரியாக 50 வீத உறுப்பினர்களும், விகிதாசார ரீதியாக 50 வீதமான உறுப்பினர்களும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த நிலையில், 50க்கு 50 எனும் இந்த முறைமையினை விளங்கிக் கொள்வதில் கணிசமானோர் சிரமப்படுகின்றனர்.

எனவே, அதனை விளங்கும் படியானதொரு பதிவினை உங்களுக்காக வழங்குகின்றோம்.

ஒரு மாவட்டத்தின் உறுப்பினர்களில் 50% தொகுதி முறையிலும் மிகுதி 50% விகிதாசார முறையிலும் தெரிவு செய்யப்படுவர் .

உதாரணமாக  கிழக்கு மாகாணசபை தேர்தலை எடுத்துக் கொள்வோம். அங்குள்ள திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மாகாண சபைக்கு செல்லும் ஆசனங்கள் 14 ஆகும். இதன் 50 வீதம் 70 ஆகும். ஆகவே இங்கே 07 தொகுதிகள் உருவாக்கப்படும். மிகுதி ஆசனங்கள் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்படும்

திகாமடுல்லா மாவட்டத்திலுள்ள 07 தொகுதிகளும் கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் (இரட்டை தொகுதி ), அம்பாறை, தெஹியத்த கண்டி மற்றும் பதியதலாவை எனக்கொள்வோம்.

ஒரு மாவட்டத்தில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகளின் கூட்டுத்தொகை, மொத்த ஆசனங்களினால் பிரிக்கப்படும். இதன் போது கிடைக்கப்பெறும் எண், ‘தகைமையளிக்கும் எண்’ எனப்படும்.

ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளை மேலே குறித்த தகைமையளிக்கும்
எண்ணினால பிரித்து வரும் எண்ணை, ஒரு முழு எண்ணாகக் கொண்டு, ஒவ்வொரு கட்சியும் பெற்ற மொத்த ஆசங்கள் (தொகுதி ஆசனம் + விகிதாசார ஆசனம்)
கணிக்கப்படும் .

பின்வரும் உதாரணம் மூலம் விளங்கிக் கொள்வோம்.

கட்சிகள் வெற்றிபெற்ற தொகுதிகள் வருமாறு;

கட்சி அ  –  04
கட்டி ஆ –  02
கட்சி இ  –  01

மேற்படி கட்சிகள் ஒவ்வொன்றும் மாவட்டத்தில் பெறப்பட்ட வாக்குகளின் விபரம்;

கட்சி அ – 133,000
கட்டி ஆ – 61,000
கட்சி இ  – 52,000
கட்சி ஈ   – 40,000
கட்சி உ  – 18,000

இதன்படி தகைமையளிக்கும் எண் இவ்வாறு வரும்; 304000/14 = 21714

இதன்படி கட்சிகள் பெறும் மொத்த ஆசனங்கள்;

கட்சி அ – (6.1) 6
கட்டி ஆ – (2.8) 3
கட்சி இ  – (2.4) 2
கட்சி ஈ  – (1.8) 2
கட்சி உ  – (0.8) 1

மொத்த கூட்டுத்தொகை, ஆசனங்களின் மொத்த எண்ணிக்கையிலும் கூடும்போது தேர்தல் ஆணையாளர் தீர்மானிப்பார். குறைந்தால் குறித்த கட்சியின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு பட்டியலில் உள்ளவர் நியமிக்கப்படுவார்.

மேலேயுள்ளவாறு மொத்த வாக்குகளிலிருந்து தொகுதி, விகிதாசார உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர், தொகுதி ஆசனங்களில் தெரிவானோர் தவிர, ஏனையோர் மாவட்ட பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்படல் வேண்டும்.

ஆகவே கட்சிகளின் தொகுதி + விகிதாசார விபரம்
(Elected தெரிவு செய்யப்பட்டோர், Returned தேர்ந்தெடுக்கப்பட்டோர்)

கட்சி அ – 6 ( 4+2)
கட்டி ஆ – 3 (2+1)
கட்சி இ  – 2 (1+1)
கட்சி ஈ   – 2 ( 0+2)
கட்சி உ  – 1 ( 0+1)

இதன் போது 25 வீதமான பெண்கள் மொத்த உறுப்பினர்களில் இருந்து தெரிவு செய்யப்படுவதை தேர்தல் ஆணையாளர் உறுதிப்படுத்துவார் .

இந்த முறையிலுள்ள குறிப்பிடத்தக்க அம்சங்கள்

  • புதிய மாகாண தொகுதிகள் உருவாக்கப்படும் .
  • மொத்த ஆசனங்கள் விகிதாசார முறையிலேயே கணிக்கப்படுகின்றன.
  • விருப்பு வாக்குகள் இல்லை. தொகுதியில் அளிக்கப்படும்.
  • வாக்கு – தொகுதி வெற்றியைத் தீர்மானிக்கவும் கட்சியின் மொத்த வாக்குக்குமாக இரண்டு முறைக்கும் எடுத்துக்கொள்ளப்படும்.
  • ஒற்றை வாக்குச் சீட்டு முறை.

தேசியப் பட்டியல் போன்று மாவட்டப் பட்டியல் அல்லது தேர்தல் பட்டியலிலிருந்து விகிதாசார முறை அங்கத்துவர்தெரிவு செய்யப்படுவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்