திறமைசாலிகளை அஷ்ரப் அருகே வைத்துக் கொண்டார்; ஹக்கீம், வெளியே வீசுகின்றார்: நஸார் ஹாஜி

🕔 September 18, 2017

– ரி. தர்மேந்திரன் –

முஸ்லிம் அரசியல் அரங்கில் மாற்றத்தை உருவாக்க கூடிய, முஸ்லிம் கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பை உருவாக்கும் பகீரத முயற்சியில் தாம் ஈடுபட்டு வருவதாக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட முன்னாள் உறுப்பினரும், தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவருமான தொழிலதிபர் நஸார் ஹாஜியார் தெரிவித்தார்.

இந்த வேளையில், முஸ்லிம் மக்களை சரியாக வழி நடத்த கூடிய தலைவர்கள் தம்முடன் கை கோர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், பொய்யனும், எத்தனும், ஏமாற்று பேர்வழியுமான ஒருவன் முஸ்லிம்களின் தலைவராக இனியும் இருக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தூய தலைவர்களான எம்.எச்.எம்.  அஷ்ரப் மற்றும் பரீத் மீராலெப்பை ஆகியோரை நினைவு கூறும் நிகழ்வு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத்தின் ஆசியுடன், அஷ்ரப் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் முஹைதீன்பாபா தலைமையில் ஏறாவூர் ஜுப்ரியா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் பேராளர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஜவாஜிர் சாலி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் ஆகியோரும் பேராளர்களாக கலந்து கொண்டனர்.

அங்கு நஸார் ஹாஜியார் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“இன்றைய அரசியல் நிலைவரத்தில், பெருந்தலைவர் அஷ்ரப் குறித்து ஒவ்வொரு நாளும் மேடை போட்டு பேச வேண்டி உள்ளது. தலைமைத்துவத்தின் சிகரத்தை தொட்ட மாமனிதர் அவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற அரசியல் கட்சியின் தலைவராக மாத்திரம் அன்றி, முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும் விளங்கினார். அவர் முஸ்லிம் சமூகத்தின் தலைவராக மாத்திரம் அன்றி தந்தையாகவும் திகழ்ந்தார். எமது சமூகத்தின் வழிகாட்டியாகவும், விழிகாட்டியாகவும் திகழ்ந்து அரசியலில் விழிப்புணர்வையும், விடியலையும் ஏற்படுத்தி தந்தார்.

ஆனால் அவரால் உருவாக்கி வழி நடத்தப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று பிழையான பாதையில் பயணிக்கின்றது. அரசியல் ஞானியும், சட்ட வல்லுநருமான அவர், கட்சியில் தலைவருக்கு ஈடான தவிசாளர் பதவி, அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவி ஆகியவற்றை தூர நோக்கு, தீர்க்கதரிசனம் ஆகியவற்றோடுதான் உருவாக்கி கொடுத்து இருந்தார். மசூரா சபை அமைக்கப்பட்டு மசூரா அடிப்படையில்தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. சூரா சபை இயங்கியது. குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு கட்சி செயற்பட்டது.

ஆனால் தலைவர் அஷ்ரப் உருவாக்கி கொடுத்த யாப்பை, தற்போது மாற்றி விட்டார்கள். குறிப்பாக அதிகாரம் பொருந்திய செயலாளர் நாயகம் பதவியை இல்லாமல் செய்து விட்டார்கள். கட்சியில் தலைவரின் சர்வாதிகாரம் நடக்கின்றது. கட்சி அதியுயர்பீட உறுப்பினர்கள் 94 பேரில் 54 பேரை நியமிக்கின்ற அதிகாரத்தை தலைவர் பிடித்து வைத்திருக்கின்றார் என்றால், வேறு எப்படி கூற முடியும்? இந்த அநியாயங்களைத்தான் கட்சிக்குள் இருந்து தட்டி கேட்டோமே ஒழிய, ஒருபோதும் தேசிய பட்டியல் கேட்டு சண்டை பிடிக்கவில்லை. செயலாளர் நாயகம் ஹசன் அலியும் சரி, தவிசாளர் பஷீர் சேகு தாவூத்தும் சரி, கட்சி தலைமைக்கு கட்டுப்பட்டுத்தான் கடந்த பொது தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கவில்லை.

பஷீர் சேகுதாவூத்தை பொறுத்த வரை கட்சியை காப்பாற்றி கொடுத்தவர். கட்சியை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இன்று தலைவராக இருப்பவரை தனிப்பட்ட பிரச்சினைகளில் இருந்தும் காப்பாற்றியவர். கட்சியையும், கட்சி தலைமையையும் காப்பாற்றினால்தான் சமூகத்தை காப்பாற்ற முடியும் என்று உணர்ந்தவராக அவற்றை கடமையாக செய்தார். கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் மர சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட வியூகம் அமைத்து கொடுத்தவர் ஹசன் அலி. ஆனால் மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில்தான் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு ஆக வேண்டும் என்று முரண்டு பிடித்து கொண்டிருந்தார் ரவூப் ஹக்கீம். இருப்பினும் அதிகாரம் மிக்க செயலாளர் நாயகம் பதவியின் மூலமாக தலைவருக்கு மூக்கணாங் கயிறு போட்டு தலைவரை நிர்ப்பந்தித்து வழிக்கு கொண்டு வந்தார். இதன் பலனாகத்தான் கிழக்கு மாகாணத்துக்கு குறிப்பாக ஏறாவூர் மண்ணுக்கு ஒரு முஸ்லிம் முதலமைச்சர் கிடைத்தார்.

ஆனால் தவிசாளர் பஷீர் சேகு தாவூத்தையும், செயலாளர் நாயகம் ஹசன் அலியையும் ரவூப் ஹக்கீம் வெளியே போட்டு விட்டார். பெருந்தலைவர் அஷ்ரப்பின் தலைமைத்துவத்துக்கும், இன்று தலைவராக உள்ள ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்துக்கும் உள்ள முக்கியமான வேறுபாடுகளில் குறிப்பிடத்தக்க ஒன்று தலைவர் அஷ்ரப் திறமைசாலிகளை, ஆளுமை உடையவர்களை, ஆற்றல் மிக்கவர்களை எங்கிருந்தாலும் அடையாளம் கண்டு கட்சிக்குள் உள்ளீர்த்தார். தலைவர் அஷ்ரப்பால் இவ்விதம் அடையாளம் காணப்பட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் மிக கௌரவமான முறையில் கொண்டு வரப்பட்டவர்தான் பஷீர் சேகுதாவூத். ஆனால் ரவூப் ஹக்கீம் திறமைசாலிகளையும், ஆளுமை உடையவர்களையும், ஆற்றல் மிக்கவர்களையும் கட்சிக்குள் இருந்து வெளியேற்றுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றார். ஏனென்றால் அவருக்கு பயம். இன்று கட்சிக்குள் ஞான சூனியங்கள்தான் மிஞ்சி உள்ளனர். ‘அவிவேக பூரண குருவும், முட்டாள் சீடர்களும்’ என்கிற கதைதான் எனக்கு நினைவுக்கு வருகின்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கள்வர்கள், கயவர்கள், சமூக விரோதிகள், சுயநலவாதிகள் ஆகியோரின் குகையாக மாறி வருகிறது. மோசடிகாரர்களுக்கும், ஏமாற்று பேர்வழிகளுக்கும்தான் ரவூப் ஹக்கீம் பதவிகளை கொடுத்து வைத்திருக்கின்றார்.

எனவே முஸ்லிம் அரசியலில் எமக்கு இன்று ஒரு மாற்றம் நிச்சயம் தேவைப்படுகின்றது. தலைமை பதவி தனக்குத் தேவை இல்லை என்று ஹசன் அலி பகிரங்கமாக அறிவித்துள்ளார் . பிரதிநிதித்துவ அரசியலில் இருந்து விலகுவதாக பஷீர் சேகு தாவூத் பகிரங்கமாக அறிக்கை விட்டவர். எனவே நாம் மாற்றம் ஒன்றை உருவாக்கவே போராடுகின்றோம் என்பது வெளிப்படையான நிதர்சனம். இந்த மாற்றத்தை உருவாக்க கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் அனைவரும் முன்வர வேண்டும்.

இந்த மாற்றத்தை உருவாக்க கூடிய திறவுகோலாக முஸ்லிம் கூட்டமைப்பு என்கிற கட்டமைப்பை உருவாக்குகின்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம். தமிழ் தேசிய கூட்டமைப்பை போலவே முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம் அரசியல் ஆளுமைகள் அனைவரையும் உள்வாங்கி இக்கூட்டமைப்பு அமைக்கப்பட்டு ஒரு தலைவரை உடையதாக அன்றி, தலைமைத்துவ சபையை கொண்டதாக இயங்க வேண்டும் என்பதே எமது பார்வையாக உள்ளது.

எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியில் வீசப்பட்ட அனைத்து ஆளுமைகளும் எம்முடன் இணைதல் வேண்டும். முஸ்லிம் மக்களை சரியாக வழி நடத்த கூடிய தலைவர்கள் எம்முடன் கை கோர்த்து இப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும். பொய்யனும், எத்தனும், ஏமாற்று பேர்வழியுமான ஒருவன் முஸ்லிம்களின் தலைவராக இனியும் இருக்க முடியாது. எனவே எல்லோரும் சேர்ந்து ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் கரங்களை பலப்படுத்துங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்