இருபதை வென்று கொடுத்தவர்கள், சமூகத்தை தோற்கடித்து விட்டனர்: தூய முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர் நஸார் ஹாஜி

🕔 September 11, 2017

– அஹமட் –

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கிழக்கு மாகாண சபையில் வென்று கொடுத்தவர்கள், சிறுபான்மை சமூகங்களை அரசியல் ரீதியாகத் தோற்கடித்து விட்டனர் என்று, தூய முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தரும், தொழிலதிபருமான நஸார் ஹாஜி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையில் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக, இன்று வாக்களிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் வெளியிகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மு.காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் உட்பட 25 பேர், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக, கிழக்கு மாகாண சபையில்  வாக்களித்தனர்.

இவ் விடயம் குறித்து நஸார் ஹாஜி மேலும் தெரிவிக்கையில்;

“மிக மோசமானதொரு வரலாற்றுத் துரோகம் இன்று நடந்திருக்கிறது. தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு கிடைத்த மிகவும் சொற்பமான அரசியல் அதிகாரத்தின் கணிசமான பகுதியினை, இன்று கிழக்கு மாகாண சபையில் காவு கொடுத்து விட்டார்கள்.

ரஊப் ஹக்கீம் தலைமையிலான தீய முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகக் கைகளை உயர்த்தியதன் மூலம், தமது மலினமான முகத்தை – மக்களுக்கு மீண்டுமொருமுறை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், இந்தத் துரோகத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் விலை போயிருப்பதைத்தான் ஜீரணித்துக் கொள்ள முடியாமலுள்ளது.

அனைத்தையும் வியாபாரமாகவே பார்த்துப் பழகிய கிழக்கு மாகாண முதலமைச்சர், மீண்டுமொருமுறை நமது சமூகத்தை கொழுத்த விலைக்கு விற்றிருக்கிறார் என்று பரவலாகப் பேசப்படுகிறது. இந்த வியாபாரத்தின் பிரதான பங்குதாரிகளாக தீய முஸ்லிம் காங்கிரசின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளனர்.

ரஊப் ஹக்கீமுடைய ஆசிர்வாதத்துடன்தான் இந்தத் திருத்தச் சட்ட மூலத்துக்கு, தீய முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் வாக்களித்துள்ளனர் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தனது நலன்களுக்காக எதையும் பலி கொடுப்பதற்குத் தயாராகவுள்ள ஹக்கீமும் அவரின் சீடர்களும், 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தை வென்று கொடுத்தது ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல.

உரிமைகளை விற்றுப் பிழைப்பது – தீய முஸ்லிம் காங்கிரசினருக்கு புதியதொரு விடயமல்ல. மாகாண சபைகளின் அதிகாரங்களைத் தட்டிப் பறிக்கும் திவிநெகும சட்டமூலம் – கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டபோதும், இதேபோன்று ஆதரவாகக் கைகளை உயர்த்தி, தமது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டமையினை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கைகளை உயர்த்திய – தீய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள், இப்போது சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வேறு புராணம் பாடத் தொடங்கியிருக்கின்றார்கள். திருத்தங்களுடன் நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது சட்ட மூலத்துக்கே தாங்கள் ஆதரவளித்துள்ளதாக அவர்கள் பொய் கூறத் தொடங்கியுள்ளனர். தாங்கள் செய்தது, மிகப் பெரும் சமூக துரோகம் என்பதால்தான் அதனை மறைப்பதற்கு இவர்கள் முயற்சிக்கின்றனர்.

தீய முஸ்லிம் காங்கிரசினருக்கு சமூக அக்கறை இருக்குமானால், நீதிமன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட சட்ட மூலத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் வரையில் அவர்கள் பொருத்திருக்க வேண்டும். அரசியமைப்புக்கு முரணானதா, இல்லையா என்று, இன்னும் நீதிமன்றம் கருத்துத் தெரிவிக்காத ஒரு விடயத்துக்குத்தான் நாங்கள் ஆதரவளித்தோம் என்று, இவர்கள் கூறுவது கோமாளித்தனதாகும்.

ஆனால், மக்கள் முட்டாள்களில்லை. 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளித்ததன் மூலம், தீய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சமூகத்துக்கு எவ்வாறானதொரு துரோகத்தினைச் செய்துள்ளார்கள் என்பதை, மக்கள் மிகத் தெளிவாக விளங்கியுள்ளனர். சந்தர்ப்பம் கிடைக்கும் போது, அதற்குரிய பதிலை மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்.

மாகாணசபைத் தேர்தலொன்றினைச் சந்திப்பதற்கு, தீய முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தைரியமில்லை. அதனால்தான், கிழக்கு மாகாண சபைத் தேர்தலைப் பிற்போடுவதற்கு வழிகோலும் 20ஆவது திருத்தத்தை, அவர்கள் ஆதரித்துள்ளனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்