சுதந்திரக் கட்சிக்குள் மஹிந்தவை கொண்டு வர, மூன்று அமைச்சர்கள் நியமனம்

🕔 September 9, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் சுதந்திரக் கட்சியின் பக்கம் ஈர்த்துக் கொண்டு வரும் பணியினை மூன்று அமைச்சர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்படைத்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இதற்காக அமைச்சர்களான ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோரையே ஜனாதிபதி நியமித்துள்ளார் என அறிய முடிகிறது.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் மேற்படி அமைச்சர்கள் மூவரும், மஹிந்த தரப்பினரைச் சந்திப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

நாட்டில் தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அணியினரைப் பகைத்துக் கொண்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று, அந்தக் கட்சியிலுள்ள முக்கியஸ்தர்களே கூறி வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையிலேயே, மஹிந்த மற்றும் அவரின் அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை, சுதந்திரக் கட்சிக்குள் ஈர்க்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்