கருங்கொடியின் காகத்துக்கு….

🕔 August 17, 2017

 

– ராஸி முகம்மத் –

காகமே காகமே
உன் கதை கேளாயோ.

தத்தித்திரிந்தாய்- கடை வீதியில் மெல்ல
எத்தித்திரிந்தாய்- அநாதையாய்
கத்தித்திரிந்தாய் – உன்னை
அரவணைப்போர் யாருமில்லை.

கறுப்பான உனக்கு,
கபடம் கொண்ட
வெறுப்பான உனக்கு
கருங்கொடியூரின்
கிரீடக் கனவு பலிக்காது.
பார்த்துக்கொண்டிரு.

உனது தேவையெல்லாம்
இறகுகளைச் சிலுப்பிக்கொள்ள
ஒரு சேற்றுத் தண்ணீர்.
கொத்திப்பறிக்க ஒரு வடை.
பற்றிப் பிடிக்க
ஒரு மரக் கிளை.

உன்னைக் காகம் என்று தெரியாமல்
ஒரு மலையடிக்குயில் உன்னை
மார்புக்குள் அணைத்தது.

அதன் சொண்டுகளால்
உன் தொண்டைக்குழிக்குள்
அரசியல் சோறு போட்டது.

துரோகி நீ.ஒரு வடைக்காய்
வளர்த்த குயிலின்
கழுத்தை நெரித்தாய்.
ஒரு குதிரையின் மடியில்
அடைக்கலம் எடுத்தாய்.

உன் கரைதலுக்கு மேல்
குதிரையின் கனைப்பு
இருந்தது போலும்.
காகத்துக்கு இயலுமா
குதிரைச் சவாரி.
கரையத் தெரிந்த நீ
கனைக்க முற்படலாமா?

ஒரு தென்னைமரம்
உன்னைத் தாங்குவதாகச்
சொன்னதும்
குதிரையின் உச்சி மயிரைப்
‘பிச்சி’ எறிந்தாய்.

குயிலின் குச்சி வீடும்
குதிரையின் உச்சி மயிரும்
உனது குலமல்ல.
நீ தென்னை மரத்தையே
தேடிச்சென்றாய்.
சேற்று நீர் சுவைக்கும் உனக்கு
கடல் நீர் கசக்கத்தான் செய்யும்.

பறித்த வடையை பதுக்கித் தின்ன
தென்னைமரம்தான் உனக்குச் சரி.
உன்னைப் போல் பல காக்காய்கள்
வடைகள் கொண்டுவரும்.
அங்கு பகிர்ந்து நீ உண்ணலாம்.
பறித்த கதைகளைப்
பேசி மகிழலாம்.

குயிலோடு இருந்தாலும்
குதிரையோடு இருந்தாலும்
நீ கபடம் கொண்ட
கறுப்பினக் காகம்
என்பதை காண்பித்துவிட்டாய்.

ஓ தென்னைமரத்துக் காக்காயே,
எங்கள் வடைகளைத் திருடி
வயிறு வளர்க்கும் கறுப்பே,
நீ மரக்கொப்பில் சற்று மகிழ்ந்திரு.
மரங்கொத்திகள் நாங்கள்
வரும் வரைக்கும்.

(கருங்கொடித் தீவு என்பது, இப்போதைய அக்கரைப்பற்று பிரதேசத்தின் முன்னைய பெயராகும்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்