இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தைத் தாக்குவதற்கு, விமானம் தேவையில்லை: பசீர் சேகுதாவூத்

🕔 July 3, 2017

முஸ்லிம் சமூகம் 2013 இலிருந்து எதிர்கொண்ட சிங்கள பௌத்த தீவிரவாதம் ஒப்பீட்டளவில் மென்மையானது. இப்போது எதிர் கொள்வது கடுமையானது. வரலாற்றில் நான்கு நிக்காயக்களும் ஒருசேர முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களை அரசாங்கத்துக்கு முறையிட்டு வரலாற்றில் இப்படியொரு அதிர்ச்சியை அளித்ததில்லை.

நல்லாட்சி முளைப்பதற்கு முன்னைய நிகழ்வுகளில் அதிக உயிர் உடமை இழப்புகளை ஏற்படுத்திய அளுத்கம தாக்குதலாகும். ஆனால் நல்லாட்சியின் தோற்றத்தின் பின்னர் இடையில் முளைத்திருக்கும் இத்தீவிரவாதக் களைகளுக்கு, “நாசினிகள் ” தெளிக்கப்படாமையால், நீளமான எபிசோட்களாக (Episodes) வளர்ந்து பூத்துக் கிடக்கிறது. காய்ப்பதுதான் எஞ்சியிருக்கிறது. காய்ப்பதற்கான ரசாயன ஊக்கி தெளிக்கப்படுவதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் சர்வதேச விவகாரங்களை தனது நாட்டுக்கு அனுகூலமாகக் கையாள்வதற்காக ‘தீவிரமாக’  இயங்கிவருகிற அதன் புலனாய்வுத் துறை, இலங்கையிலுள்ள தமது தூதரகத்தின் மீது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு – ரத்மலானை விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தி, தாக்குதல் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறது என எச்சரித்துள்ளது. இந்த ஆபத்தை இலங்கைக்கு அறிவித்துமுள்ளது. இதனை விசாரணை செய்ய அமெரிக்கப் புலனாய்வாளர்கள் சிலர் இலங்கைக்கு வருகை தருகிறார்கள்.

இனியென்ன? பௌத்த தீவிரவாதம் காய்த்து விடும். தொடர்ந்து குழி வெட்டி, காயைப் புதைத்து புகையடித்து பழுக்க வைத்தும் விடுவார்கள். பழுத்தால் அழுகித்தானே ஆகணும். ஆனால் அழுகினாலும் விதை மிஞ்சுமல்லவா? விதை மீண்டும் புதைக்கப்பட்டால் முளைத்துத்தானே ஆகும்?

கடந்த ஆட்சியில் இயங்கிய பௌத்த மென் தீவிரவாதத்தை செறிவான தீவிரவாதமாக மாற்றிச் செயலாக்கினால்தான் ‘சிங்களக் கதாநாயக அரசியல்வாதிகளின்’ செல்வாக்கை வீழச் செய்து, அதனை தம் வசப்படுத்தலாம் என நம்பும் நல்லாட்சி அரசியல்வாதிகள், அழுகுவதைப் பற்றி அறிந்திருக்க நியாயமில்லை. ‘டப்பாவைத் திறந்து’ அனுபவம் பெறுகிற போது, எரியும் இலங்கைத் தீவைக் காப்பாற்றுவதற்கு சுற்றிவர நிறைந்திருக்கும் கடல் நீர் போதாமல் போகலாம்.

அமெரிக்காவில் அமைந்திருக்கும் அதியுயர் கட்டிடங்களைத் தாக்குவதற்கு வேண்டுமானால், அமெரிக்காவின் உதவியுடன் விமானங்களைக் கடத்தும் தேவை ஏற்படலாம். ஆனால் இலங்கைத் தூதரகத்தை தாக்குவதற்கு விமானம் தேவைப்படாது என்பது, உங்கள் நண்பர்களிடம் பயிற்சி பெற்றவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?

மாற்றி யோசிக்கத் தெரிந்த உலகின் மிகச்சிறந்த புலனாய்வாளர்களே! மிகக் கவனம்!!
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளோடு, கடலோரத்தில் ஒய்யாரமாக வீற்றிருந்து ஆட்சி செய்யும் தூதரகத்தை தாக்குவதற்கு திட்டமிடும் ‘பயங்கரவாதிகள்’, உங்களை ஏமாற்றுவதற்காக விமானத் தாக்குதல் என்று கதையை ஒழுகவிட்டு ஏமாற்றி, கடலைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும்.

மேலும் நீங்கள், தூதரகத்தை விடவும் மிகவும் பாதுகாப்புக் குறைந்த உங்கள் தூதருடைய வாசஸ்தலத்தின் பாதுகாப்பு பற்றி மூச்சே விடவில்லையே ஏன்? ஐ.எஸ்.ஐ.எஸ். இலகுவான இலக்குகளைத் தெரிவு செய்வதில்லை என்று நம்புகிறீர்களா? அல்லது இது உங்களின் இன்னொரு எபிசோட் வியூகத்துக்கு தேவைப்படும் என்பதால் இப்போதைக்கு விட்டு வைத்திருக்கிறீர்களா?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்