சாய்ந்மதருது இளைஞர் காரியாலய இடமாற்றத்தை ரத்து செய்யுமாறு பிரதமர் பணிப்பு; ஹிஸ்புல்லாவின் முயற்சிக்கு பலன்

🕔 July 3, 2017

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயத்தை சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயம் சாய்ந்தமருதில் இருந்து அம்பாறைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை நிரந்தரமாக அங்கு இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த இடமாற்றம் காரணமாக இளைஞர் – யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை சுட்டிக்காட்டி, நிரந்தர இடமாற்றத்தை தடுத்து நிறுத்துமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்திருந்தார்.

ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் கோரிக்கைக்கு அமைய, மேற்படி கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயத்தை அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்ய வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதற்கமைய மேற்படி இடமாற்றத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளருக்கு பிரதமரின் செயலாளர் சார்பில் பொது உறவுகள் பணிப்பாளர் பி.எம். திஸாநாயக்க கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கு மாகாண இளைஞர் காரியாலயமானது 2011ஆம் ஆண்டு சாய்ந்தமருதில் நிறுவப்பட்டது. அதனூடாக கிழக்கு மாகாண இளைஞர் – யுவதிகள் பெரும் நன்மையடைந்து வந்தனர். இந்நிலையில், அண்மையில் சிலரது தனிப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, மேற்படி காரியாலயம் அம்பாறைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

தற்காலிகமாக மாற்றப்பட்ட இளைஞர் காரியாலயத்தை, அம்பாறையில் நிரந்தரமாக இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை மீண்டும் சாய்ந்தமருதில் இயங்கச் செய்வதற்கான முயற்சிகளை இளைஞர் ஒன்றியம் மேற்கொண்டு வருகின்றது.

அதற்கமைய குறித்த விடயம் சம்பந்தமாக பிரதமரிடம் பேச்சு நடத்தி தீர்வினைப் பெற்றுத் தருமாறு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் இளைஞர் ஒன்றியத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பின்னர், இந்த விடயம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்த ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மேற்படி காரியாலயத்தை அம்பாறைக்கு நிரந்தரமாக இடமாற்றம் செய்வதை தடுத்து நிறுத்துமாறும், அதனை மீண்டும் சாய்ந்தமருதில் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறித்த கடிதத்தில் கோரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது

(ராஜாங்க அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்