மைத்திரியின் ‘கள்ளத்தனமாக சந்திப்பு’ குறித்து, அமைச்சர் ராஜித விளக்கம்

🕔 June 29, 2017

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பானது, கள்ளத்தனமானது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதிக்கும், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்குமிடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு உத்தியோகபூர்வமற்ற ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

“அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகச் சந்திக்கவில்லை. சங்கத்திரை உத்தியோகபூர்வமற்ற முறையில் சந்திப்பதற்கே ஜனாதிபதி இணங்கியிருந்தார். மேலும், ‘இது ஒரு கள்ளத்தனமான சந்திப்பு’ என்றும், அவர்களிடம் ஜனாதிபதி கூறியிருந்தார். அதேவேளை, அந்தச் சந்திப்பு தொடர்பில் எந்தவிதமான அறிக்கைகளும் விடுவதில்லை என்றும், புகைப்படங்கள் எடுப்பதில்லை எனவும் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், ஜனாதிபதியின் செயலாளர் அபேகோனையோ அல்லது ஜனாதிபதியின் மேலதிக செயலாளரையோ ஜனாதிபதி செயலகத்தில் சங்கத்தினர் சந்திக்கவுமில்லை” என்றும் அமைச்சர் ராஜித கூறினார்.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்துடனான சந்திப்பு தொடர்பில், ஜனாதிபதி செயலகம் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, மேற்கண்ட விடயங்களை அமைச்சர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்