கரும் புள்ளிகள்

🕔 June 6, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும்.

இது எங்கு போய் முடியும் எனத் தெரியவில்லை. ஆனால், இந்தச் சந்தர்ப்பத்தை மஹிந்த ராஜபக்ஷ அணி மிக நன்றாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. முஸ்லிம்களுக்காகப் பரிந்தும், அனுதாபத்துடனும் மஹிந்த தரப்புப் பேசத் தொடங்கியுள்ளது. எதிர்வரும் தேர்தல்களில் இந்த நிலைவரம் ஏதோவொரு விதத்தில் தமக்குச் சாதகமாக அமையும் என்று மஹிந்த தரப்பு நம்புகிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக இன வெறுப்பு நடவடிக்கைகளில் மிகப் பகிரங்கமாக ஞானசார தேரர் ஈடுபட்டார். அப்போது, அதைத் தடுப்பதற்கு பொலிஸார் முன்வரவில்லை. பின்னர், ஞானசாரருக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன.

இதனையடுத்து, ஞானசாரரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் முயற்சிப்பதாகவும் ஆனால், ஞானசாரர் எங்கோ மறைந்திருப்பதால், அவரைக் கைது செய்ய முடியவில்லை எனவும் பொலிஸார் கூறினர். ஆனால், முஸ்லிம் மக்களும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதை நம்பத் தயாராக இல்லை. இதை ஒரு நாடகம் என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.

ஆனானப்பட்ட பிரபாகரனைத் தேடிப் பிடித்துப் பலி கொண்டதாகக் கூறிப் பெருமைப்படும் இலங்கையின் பாதுகாப்புப் பிரிவினருக்கு, ஞானசாரர் ‘தண்ணி’ காட்டுகிறார் என்பது, நம்பும்படியாக இல்லை என்பது மக்களின் வாதமாகும்.

ஞானசார தேரரை அரசாங்கம் பாதுகாக்கின்றது என்கிற குற்றச்சாட்டு, மிக வெளிப்படையாகவே முன்வைக்கப்படுகிறது. ஏழு நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன்போது, தூதுவர்கள் முன்னிலையில் பேசிய, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி, “ஞானசார தேரரைக் கைது செய்யாமல் தடுப்பவர், நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷதான்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருந்தார். இது, ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானது.

அசாத் சாலியின் குற்றச்சாட்டிலுள்ள உண்மைத்தன்மை குறித்து இங்கு தீர்ப்புச் சொல்ல முடியாது. ஆனாலும், அசாத் சாலியின் குற்றச்சாட்டுக்கு விஜேதாஸ ராஜபக்ஷ இதுவரை மறுப்புத் தெரிவித்ததாகத் தெரியவில்லை.

எது எவ்வாறாயினும், அரசாங்கத்தின் அல்லது அரசாங்கத்திலுள்ள அதிகாரம் பொருந்திய ஒருவரின் ஆதரவில்லாமல், ஞானசார தேரரால் இத்தனை நாட்கள் பொலிஸாரிடம் அகப்படாமல் ஒளிந்திருக்க முடியாது என்பது பரவலான கருத்தாக உள்ளது.

இந்த நிலையில், “ஞானசார தேரரை விரைவில் கைது செய்வோம்” என்று, பொலிஸ் மா அதிபர் கூறியிருக்கின்றார். “தேரரைக் கைது செய்வதற்கு 04 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார். மேலும், “சில இடங்களில் நாம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பேசப்படுகிறது” என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதாவது, ஞானசாரர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸார் தவறியுள்ளனர் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், பொலிஸ் மா அதிபரை உறுத்தியிருக்கிறது. ஆனால், பொலிஸார் வழங்கும் உத்தரவாதங்கள் அனைத்தும், இப்போதைக்கு வெறும் வாய்ப் பேச்சளவில் மட்டும்தான் இருக்கின்றன.

இந்த நிலைவரங்கள் எல்லாம் சேர்ந்து, அரசாங்கத்தைப் புறக்கணிக்கும் மனநிலைக்கு முஸ்லிம் மக்களைத் தள்ளிவிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. நோன்பு காலங்களில் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஒவ்வொரு முறையும் இப்தார் நிகழ்வுகளை நடத்துகின்றமை வழமையாகும்.

அந்த வகையில், இவ்வருடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நடத்துகின்ற இப்தார் நிகழ்வுகளில் முஸ்லிம் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளக் கூடாது என்று, முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடத் தொடங்கியுள்ளனர்.

முஸ்லிம்களின் இந்தக் கோரிக்கை சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதைக் காண முடியும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஏற்பாடு செய்யும் இப்தார் நிகழ்வுகளை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கை சரியா, தவறா என்கிற வாதப் பிரதிவாதங்களும் இருக்கின்றன. அது குறித்து இங்கு நாம் பேசப்போவதில்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் மீது முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள கசப்புணர்வை இங்கு நாம் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போதும், இந்த நிலை எழுந்திருந்தது. முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனாவின் அட்டகாசங்கள் மேலெழுந்திருந்த நிலையில், அந்த அமைப்பின் தோள்களில் கோட்டாபய ராஜபக்ஷ போன்றவர்கள் தோழமையுடன் கைபோட்டுக் கொண்டு திரிந்தனர்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் மஹிந்த மற்றும் கோட்டா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வுகளில் முஸ்லிம் முக்கியஸ்தர்கள் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று, அப்போது முஸ்லிம் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையையும் தாண்டி, அவர்களின் இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்கள், சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டமை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆனால், இப்போது, முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபலசேனா புரியும் அட்டகாசம் தொடர்பிலும், அதைத் தற்போதைய அரசாங்கம் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பதையும் மஹிந்த தரப்பினர் விமர்சிக்கின்றனர். முஸ்லிம்கள் மீது அன்பு செலுத்த முயற்சிக்கின்றனர். இது, ‘ஆடு நனைகிறதென்று ஓநாய் கவலைப்பட்ட’ கதைக்கு ஒப்பானதாகும்.

பொதுபலசேனா என்கிற அமைப்பை ‘பாலூட்டி, சீராட்டி’ வளர்த்து விட்டவர்கள் எந்தத் தரப்பினர் என்பதையும் முஸ்லிம்கள் இப்போதைக்கு மறந்து விடப் போவதில்லை.

அரசாங்கம் மீதான இந்தக் கசப்புணர்வு வளர்ந்து கொண்டே வருகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமரின் இப்தார் நிகழ்வுகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிற கோரிக்கையானது, ‘நாடாளுமன்ற அமர்வுகளைப் பகிஷ்கரிக்க வேண்டும்’ என்கிற புள்ளியில் வந்து நிற்கிறது.

கொலன்னாவை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ முகாமில் கலந்து கொண்ட ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அங்கு சந்தித்த பொதுமக்களிடம் பேசிய போது “ஞானசார தேரருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்காமல், இழுத்தடித்து வரும் அரசாங்கத்துக்கு, அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அதன்பொருட்டு, “முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளைப் பகிஷ்கரிக்கும் தீர்மானம் ஒன்றுக்கு வரவேண்டியுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கம் மீதான கசப்புணர்வை வெளிப்படுத்தும் பொருட்டு, நாடாளுமன்ற அமர்வுகளைப் பகிஷ்கரித்தல் என்பது, சிறந்ததொரு தீர்மானமாகும். இது குறித்து நமது பத்திகளில் பல தடவை நாம் எழுதியுள்ளோம்.

அரசாங்கம் மீதுள்ள கசப்புணர்வை வெளிப்படுத்துவதற்காக வெறுமனே ஊடக அறிக்கைகளை வெளியிடுவதில் பிரயோசனங்கள் எவையுமில்லை. நாடாளுமன்ற அமர்வுகளை முஸ்லிம் பிரதிநிதிகள் பகிஷ்கரிப்பதென்பது – ஆட்சியாளர்களை கடுமையான இக்கட்டுகளுக்குள் மாட்டி விடும் செயற்பாடாக அமையும்.

விரும்பமில்லாது விட்டாலும், ஞானசாரர் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டிய நிலைவரத்துக்குள் ஆட்சியாளர்களைத் தள்ளிவிடும்.

ஆனால், நாடாளுமன்ற அமர்வுகளை பகிஷ்கரிக்கும் தீர்மானத்துக்கு முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் இணங்குவார்களா என்கிற கேள்வியொன்றும் இங்குள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் நல்லவர்களாக எப்போதும் இருந்து விட வேண்டும் என்கிற மனநிலையுடைய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

அவ்வாறானவர்கள், நாடாளுமன்ற அமர்வுகளைப் பகிஷ்கரிப்பதன் மூலம், ஜனாதிபதி மற்றும் பிரதமரை சங்கடப்படுத்த விரும்ப மாட்டார்கள்.

ஆனாலும், நாடாளுமன்ற அமர்வுகளைப் புறக்கணிக்கும் தீர்மானமொன்றைப் பெருமளவான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டும் போது, அதற்கு எதிராக நடந்து கொள்ளும் முஸ்லிம் உறுப்பினர்கள், மக்கள் மத்தியில் துரோகிகளாகப் பார்க்கப்படுவார்கள்.

இதனால், நாடாளுமன்ற அமர்வுகளைப் பகிஷ்கரிப்பதற்கு விரும்பமில்லாதவர்கள் கூட, ‘ஊரோடு ஒத்தோடுவதற்கே’ முயற்சிப்பார்கள். அதுவே, அவர்களின் அரசியலுக்கு நல்லதாகவும் அமையும்.

முஸ்லிம்களின் ஆதரவை மஹிந்த ராஜபக்ஷ இழப்பதற்கு எது காரணமாக இருந்ததோ, அதையெடுத்துத் தமது மடியில் கட்டிக் கொள்ளும் முயற்சியில் நல்லாட்சியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். இது மடத்தனமாக செயற்பாடாகும். நெருப்புக் கொள்ளி என்று தெரிந்தும், அதையெடுத்துத் தலையைச் சொறிந்து கொள்ளும் செயற்பாட்டை வேறெப்படிக் கூறுவது?

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியதில் முஸ்லிம்களுக்குப் பாரிய பங்கிருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்திடமிருந்து வரப்பிரசாதங்களை வலிந்து பெற்றெடுக்கும் தார்மீக உரிமை முஸ்லிம்களுக்குள்ளது.

அதனால், ‘எடுத்தோம் கவிழ்த்தோம்’ என்கிற மனநிலையில், இந்த அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம்கள் விலகக் கூடாது. அரசாங்கத்துக்குள் இருந்து கொண்டு, அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தும் வகையில் தமது கசப்புணர்வுகளை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் இப்போதைக்குள்ள நகர்வாகும்.

ஆனால், இதற்கும் ஆட்சியாளர்கள் அசைந்து கொடுக்கவில்லை என்றால், எதிரணி ஆசனங்களில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வது குறித்தும் யோசிக்கலாம்.

அரசாங்கத்துடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏன் இணைந்திருக்க வேண்டும் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நன்மை கருதி, முஸ்லிம்களுக்கு ஏதாவது நன்மைகள் கிடைக்கும் என்றிருந்தால் மட்டும்தான், அரசாங்கத்துடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்திருக்க வேண்டும்.

அரசாங்கத்துடன் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்திருக்கும் போதே, முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்களும் அநீதிகளும் புரியப்படுமாயின், அதற்கு ஆட்சியாளர்கள் ஏதோவொரு வகையில் துணை போவார்களாயின், அதன்போதும் அரசாங்கத்துடன் முஸ்லிம் நடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்திருப்பதில் அர்த்தங்கள் எவையுமில்லை.

உண்மையில், அப்படி இணைந்திருப்பது வெட்கக் கேடானதாகும்.
நமக்கு எங்கு மதிப்பில்லையோ, எந்த இடத்தில் நாம் அவமானப்படுத்தப் படுகின்றோமோ, அங்கு இல்லாமலிருப்பதுதான் நமக்குக் கௌரவமாகும். எனவே, ‘முஸ்லிம்கள் மீது இவ்வளவு அட்டூழியங்களையும் புரிந்த ஞானசார தேரருக்கு எதிராக, அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகளைப் பகிஷ்கரிப்பது’ என்கிற விடயம் குறித்து, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாகக் கவனம் செலுத்துதல் தவறில்லை.

நமக்கும் கொஞ்சம் சொரணை இருப்பதை அவ்வப்போதாயினும் நிரூபிக்க வேண்டும். அப்படியில்லா விட்டால், வேறொரு முத்திரையை நம்மீது மற்றைய சமூகம் குத்தி விட்டுப் போய் விடுவார்கள்.

நன்றி: தமிழ் மிரர் (06 ஜுன் 2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்