வெறுப்புச் செயற்பாடுகளின் அபாயமணிச் சத்தம்

🕔 May 23, 2017

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை விடவும், வர்ணப் புகைப்படமொன்று அழகாகவும் இரசனைக்குரியதாகவும் இருப்பதற்கான காரணம் என்ன என்பது பற்றி, நம்மில் எத்தனை பேர் யோசித்திருக்கின்றோம்? நிறங்களின் பன்மைத்துவம்தான் அந்த அழகுக்குக் காரணமாகும்.

உலகில் வாழும் எல்லோரும் ஒரே முகச்சாயலுடையவர்களாக இருப்பார்களாயின் வாழ்க்கை எப்போதோ, அலுத்துப் போயிருக்கும். அழகு மற்றும் இரசனையின் அடிப்படையாக பன்மைத்துவம் உள்ளது.

தனித்த இனமொன்று வாழும் நாட்டை விடவும், பல இனங்கள் வாழும் நாடு இரசனைக்குரியதாகும். ஒவ்வொரு சமூகத்தினதும் மாறுபட்ட இலக்கியம், கலை, கலாசாரம், விழுமியங்கள் மற்றும் மத நம்பிக்கை போன்றவற்றால், பன்மைச் சமூகங்கள் வாழும் நாடுகள், வர்ணப் புகைப்படங்களைப் போன்று அழகுகளால் நிறைந்துள்ளன.

பல்லின மக்கள் வாழும் நாட்டின் பிரஜைகள், உளரீதியான சில அம்சங்களைத் தம்முள் வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவைகளும் உள்ளன. அவற்றில் முக்கியமானது சமூக நல்லிணக்கமாகும். இந்தச் சொல் நமக்கு மிகவும் பழக்கமானதாகும். என்றாலும் கூட, ‘சமூக நல்லிணக்கம்’ என்பதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நம்மில் எத்தனை பேர், விளங்கி வைத்திருக்கின்றோம் எனத் தெரியவில்லை.

‘வேறுபாடுகளைக் கடந்து – ஒரு மனிதனை இன்னொரு மனிதன் புரிந்து கொள்வதும், ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் சகித்துக் கொள்வதும், ஓர் இனத்தை மற்றுமோர் இனம் அனுசரித்துச் செல்வதும்’ சமூக நல்லிணக்கமாகும்.

‘ஏதேனும், பன்மைத்துவ சூழலில் நிலவும் வேறுபாடுகளைக் கடந்து ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை மதித்தல், ஒன்றாகக் கூடி வாழ்தல், தாம் விரும்பும் கருத்துகள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுதல், ஏனையவர்களுடன் விட்டுக்கொடுப்பு மற்றும் சகிப்புத்தன்மையுடன் செயற்படுதல்’ என்பதையும் சமூக நல்லிணக்கம் என்கின்றனர்.

ஒரு சமூகத்தின் செயற்பாடுகளை மற்றைய சமூகம் ‘சகித்துக் கொள்ளுதல்’ என்று, மேலே குறிப்பிட்டுள்ள விடயத்தை விளங்கிக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். இங்கு ‘சகித்துக் கொள்ளுதல்’ என்பதை, ‘வேண்டா வெறுப்புடன் ஜீரணித்துக் கொள்ளுதல்’ என விளங்குதல் கூடாது. ‘வேறுபாடுகளின் எல்லை கடந்த புரிந்துணர்வு’தான் இங்கு சகித்துக்கொள்ளுதல் எனப்படுகிறது.

அவ்வாறாயின், சமூக நல்லிணக்கமானது சகிப்புத் தன்மையிலிருந்தே உருவாகிறது என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும். அல்லது சகிப்புத்தன்மைதான் சமூக நல்லிணக்கத்துக்கான அடித்தளமாக இருக்கின்றது எனவும் கூறலாம்.

பல மாறுபட்ட இனங்களையும் சமூகங்களையும் கொண்ட நமது நாட்டின், பன்மைத்துவத்துவ அழகை இரசித்து அனுபவிக்கும் பாக்கியத்தை நாம் மிக நீண்ட காலமாக இழந்து கொண்டிருக்கின்றோம். மிக அதிகமான காலங்களை மோதல்களிலும், முரண்பாடுகளிலுமே கழித்து விட்டோம். இன்னொருபுறம், நமது அரசியலும் இன ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால், ஓர் இனத்தை மற்றைய இனம் புரிந்து கொள்ளத் தவறி விட்டது.

நாட்டில் நிலவிய யுத்தம் முடிவுக்கு வந்த பிறகு, பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும் என்று ஒரு கூட்டம் நம்பியது. யுத்தம் இல்லாமலாகி எட்டு வருடங்கள் கடந்து விட்டபோதும், பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.

யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக இனங்களுக்கிடையிலான வெறுப்புணர்வு மிகத் திட்டமிட்டு வளர்த்து விடப்பட்டது. அதனைத்தான் நேற்றும், நேற்றைக்கு முன்னைய தினங்களிலும் கூட, நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

நம்மிடையே சமூக நல்லிணக்கம் மிக நலிவடைந்து விட்டது. அடுத்த இனத்தவரின் கலாசாரங்களையும் மத அடையாளங்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பாங்கை நாம் தொலைத்து விட்டோம். வெளிப்படையாக சமூக நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றவர்களும் மற்றைய இனங்களின் அடையாளங்களை தன்னளவில் சகித்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றமையை அவ்வப்போது காண முடிகிறது.

ஆகக்குறைந்தது, யுத்தம் முடிவடைந்த கையுடனாவது, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் செயற்பாடுகளையும் அரசு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்வதற்கான உளவியல் பயிற்சிகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்; அது நடைபெறவில்லை.

அதனால்தான் விகாரைகளில் ஓதப்படும் ‘பணை’களும் கோவில்களில் உச்சரிக்கப்படும் மந்திரங்களும் பள்ளிவாசல்களில் கூறப்படும் ‘அதான்’களும் அவற்றைச் சாராத சமூகத்தவர்களுக்கு வெறும் இரைச்சலாகவும் கோபத்தை ஏற்படுத்தும் சத்தங்களாகவும் கேட்கின்றன.

இந்த நிலைவரமானது ஆபத்தானதாகும். சமூக நல்லிணக்கமற்ற இனங்களுக்கிடையில், மோதலொன்று ஏற்படுவதற்கு மிக அற்பமான காரணமே போதுமானதாக இருந்து விடும். இதனை நன்றாகப் புரிந்து கொண்டவர்கள், தமது அரசியலுக்கும் நிகழ்ச்சி நிரல்களுக்கும் ஏற்றவாறு ஒரு ‘தீக்குச்சியை’ உரசிப் போட்டால் போதும். பிறகு, எல்லாமே எரிந்து சாம்பராகி விடும்.

அந்தத் ‘தீக்குச்சி’யை மிகவும் வெளிப்படையாக கைளில் ஏந்திக் கொண்டு ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருக்கின்றது. அதனால், முஸ்லிம் மக்களின் வாழ்க்கை அச்சத்துக்குள் உறைந்து போயுள்ளது.

இந்த அச்சத்தைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளபோதும், அதனை ஆட்சியாளர்கள் நிறைவேற்றவில்லை என்கிற ஆத்திரம் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் 21 முஸ்லிம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் அத்தனை பேரும் ஆளுந்தரப்பில்தான் இருக்கின்றார்கள். ஆனாலும், முஸ்லிம்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் அச்ச சூழ்நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இது மிகவும் அவமானத்துக்குரிய நிலைவரமாகும். முஸ்லிம்கள் தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், இது குறித்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதப் போவதாக அண்மையில் கூடிக்கலைந்த முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்திருக்கின்றார்கள்.

இது கவலையிலும் சிரிக்கத்தக்க பகிடியாகும். ‘முஸ்லிம்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்படாத வரை, நாடாளுமன்ற அமர்வைப் பகிஷ்கரித்து விட்டு, சத்தியாக்கிரக நடவடிக்கையில் ஈடுபடப் போகிறோம்’ என்றாயினும் கூறுவதற்குக் கூட, முஸ்லிம் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு இயலவில்லை.

இவ்வாறான நிலையில், தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் வெறுப்பு நடவடிக்கைகளைத் தீர்த்து வைக்கும் பொருட்டு, முன்னாள் அமைச்சர் அதாஉல்லா எடுத்துள்ள சில நடவடிக்கைகள் அதிக கவன ஈர்ப்பைப் பெற்றுள்ளன.

மல்வத்து மகாநாயக தேரரை சில தினங்களுக்கு முன்னர் அதாஉல்லா சந்தித்திருந்தார். இதன்போது, முஸ்லிம்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான பின்னணி பற்றிய தனது கருத்தை அதாஉல்லா தெரியப்படுத்தியதோடு, ஞானசார தேரர் தொடர்பாகவும் மகாநாயக தேரரிடம் முறைப்பாடு செய்திருந்தார். இலங்கையிலுள்ள பௌத்த பீடங்களின் உச்ச தலைவர்களில் மல்வத்து மகாநாயக தேரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனப் பிரச்சினைகளினால் நமது தேசம் அடைந்த இழப்புகள் ஏராளமானவையாகும். எல்லா இன மக்களும் இனப் பிரச்சினையால் இழப்புகளைச் சந்தித்திருக்கின்றனர்.

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என, அனைத்து இனத்தவர்களும் இனப்பிரச்சினையின் காரணமாகவும் அதனால் ஏற்பட்ட யுத்தத்தினாலும் தமது உயிர்களைப் பலி கொடுத்திருக்கின்றனர். பிரச்சினையோடு தொடர்பற்ற சமூகங்களும் இனப் பிரச்சினையின் காரணமாக இழப்புகளைச் சந்தித்திருக்கின்றன.

அப்படியென்றால், இனப் பிரச்சினையை மீண்டும் ஏற்படுத்த வேண்டிய தேவை, இங்கு மீண்டும் ஏன் ஏற்பட்டுள்ளது? அது யாருக்குத் தேவையாக இருக்கிறது? அதனால் பயனடைந்து கொள்ளும் தரப்பு எதுவாக இருக்கும்? என்கிற கேள்விகள் இங்கு முக்கியமானவையாகும்.

நாட்டில் தற்போது நடக்கும் ‘விவகாரங்கள்’ இயல்பானதாகவோ, எழுந்தமானதாகவோ நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஓர் ஆபத்தான இலக்கை அடைந்து கொள்ளும் அவசரத்தனமாக வெஞ்சினத்துடன், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.

இவ்வாறான சூழ்நிலைகளில் சமூக அக்கறையாளர்களும் ஊடகங்களும் மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுதல் அவசியமாகும். குறிப்பாக சிங்கள சமூகத்திலுள்ள அக்கறையாளர்கள் தற்போதைய சூழலில் பரவலாக உரத்துப் பேசுவதற்கு முன்வருதல் வேண்டும்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக சிங்கள மக்களின் தரப்பிலிருந்து அதிக குரல்கள் ஒலிக்கும் போது, வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் அடங்கிப்போகும் நிலை ஏற்படும். இன்னொருபுறம் சமூக ஊடகங்களில் இப்போது எவரும், எதையும் எழுதலாம் என்பது, எரிகின்ற நெருப்புக்கு எண்ணையூற்றுகின்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

ஆயிரக் கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள ஒரு நாட்டிலிருந்து கொண்டு, தமது சமூகத்துக்கு ஆதரவாகப் ‘பொங்குகின்ற’ ஒரு முட்டாளின் நிலைத்தகவலானது, இங்கு இரண்டு சமூகங்களுக்கிடையில் கலவரத்தை ஏற்படுத்தி விடவும் கூடும்.

இன்னொருபுறம், இந்த விவகாரத்துக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளால் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதால், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை, சில முஸ்லிம் அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகத் திருப்பி விடுவதற்கு முயற்சிக்கின்றமையையும் அவதானிக்க முடிகிறது.

‘முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் வெறுப்பு நடவடிக்கைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்படாது விட்டால், முஸ்லிம் இளைஞர்கள் பொறுமையிழந்து, வீதிக்கு இறங்கும் விபரீதம் ஏற்படும்’ என்று, அண்மையில் முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் அறிக்கை விட்டிருந்தமையை ஊடகங்களில் காணக்கிடைத்தது.

தனது இயலாமையை மறைப்பதற்கான பிரதியமைச்சரின் முயற்சிதான் இதுவாகும். தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக, நாட்டில் மேற்கொள்ளப்படும் வெறுப்பு நடவடிக்கைகளின் போது, முஸ்லிம் இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றி விடாமல், நெறிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், மேற்படி பிரதியமைச்சர் தனது அரசியலுக்காக இப்படிக் கூறியுள்ளமை புத்திசாலித்தனமல்ல.

இனவெறுப்புப் பேச்சுகளையும் செயற்பாடுகளையும் கருணையின்றி அடக்க வேண்டும். இன வெறுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றவர் எந்தச் சமூகத்தவர் என்று பார்க்கத் தேவையில்லை.

ஆனால், ‘பௌத்த மதத் துறவிகள்’ எனும் அடையாளத்துடன், இனவெறுப்பு பிரசாரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சிலர் தொடர்பில், சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. பொலிஸார் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, இன வெறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள், தமது கடமையை இனிதே நிறைவு செய்து கொள்கின்றனர்.

இதன்போதுதான், முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கமும் துணைபோகிறதா என்று, சாதாரண மக்களும் யோசிக்கத் தொடங்குகின்றனர்.

முஸ்லிம்கள் மீது தற்போது ஏவி விடப்பட்டுள்ள நடவடிக்கைகளை, மத ரீதியான நல்லிணக்கமின்மையாக மட்டும் பார்க்க முடியாது. இதன் பின்னால், உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசியல் மறை கரங்கள் உள்ளன என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லா, இதுபற்றி மிகப்பகிரங்கமாகவே பேசி வருகின்றார். அவை அனைத்தும் உண்மையாக இருக்குமாயின், தற்போதைய பிரச்சினையை முஸ்லிம்களுக்கு எதிரானதாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. நமது தேசம் எதிர்கொள்ளவுள்ள பெரும் சிக்கலுக்கான அபாய மணிச்சத்தமாகவே இந்த வெறுப்புச் செயற்பாடுகளைக் காண முடிகிறது.

நன்றி: தமிழ் மிரர் (23 மே 2017) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்