மு.கா. சொத்து வழக்கு: நீதியும் தர்மமும் வெல்லட்டும்

🕔 May 7, 2017

– ஏ.எல். நிப்றாஸ் –

ரு கூட்டுக் குடும்பம் தனித்தனியாக பிரிந்தது போல,ஒரு பறவைக் கூட்டம் கலைந்து சென்று வேறு வேறு கிளைகளில் தங்கியது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முக்கியஸ்தர்களுக்கு இடையிலான உறவு கசந்து போய் கனகாலமாயிற்று. நன்றாக கொத்தும் குலையுமாக கனிகள் நிரம்பி வழிய காய்த்துக் குலுங்கிய மரத்திற்கு, ஸ்தாபகத் தலைவர் அஷ்ரஃபின் மரணத்திற்குப் பிறகு. கண்பட்டது போலாயிற்று.

முஸ்லிம்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்ற இக் கட்சிக்குள் உள்ளக முரண்பாடுகளும் பிளவுகளும் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையிலான பரஸ்பர விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு இக்கட்டான சூழலில் அக்கட்சியின் சொத்து தொடர்பான ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளது. மு,கா.வுக்குள் கடைசிக்கட்ட முரண்பாடுகள் வலுவடையத் தொடங்கிய பிறகு அக்கட்சியுடன் தொடர்புபட்ட இரண்டாவது நீதிமன்ற நடவடிக்கையாக இது அமைகின்றது.

காதலித்து கல்யாணம் முடித்து,பதினாறு வருடங்களாக பிள்ளைகள் பெற்று, விட்டுக் கொடுத்தும் பொறுமையுடனும் ஆளுக்காள் அனுசரணையாகவும் வாழ்ந்த கணவனும் மனைவியும் பிரிந்தது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் அணியில் இருந்து, அக்கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி மற்றும் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் அணியினர் பிரிந்து சென்று செயற்படுகின்றனர். ஹசன்அலி கிழக்கில் தனியொரு அணியை உருவாக்கி பொதுக் கூட்டங்களை நடாத்தி மக்களுக்கு பிரசாரம் செய்து வருகின்றார். பசீர் சேகுதாவூத் வழக்கம்போல ரகசியமாக காய்களை நகர்த்தி வருகின்றார்.

கடைசிக்கட்ட முரண்

இத்தனை காலமாக கட்சியின் தலைவர் மற்றும் அவரது சகாக்கள் மேற்கொண்ட சமூக நோக்கற்ற கைங்கரியங்கள் பற்றி இவர்கள் பிரஸ்தாபித்து வருகின்றனர். தனிப்பட்ட விடயங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விட ஒருகட்சி என்ற அடிப்படையில் சமூகத்திற்கு செய்ததாக கூறப்படும் ஏமாற்றுவித்தைகள் தொடர்பிலும் செய்யத் தவறிய நல்ல காரியங்கள் தொடர்பிலுமே மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். தகவல் வழங்கும் ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்ட ஒரு யுகத்தில்,92 வீதத்திற்கும் அதிகமான எழுத்தறிவைக் கொண்ட ஒருநாட்டில் வாழ்கின்ற பகுத்தறிவுள்ள மக்கள்,இதையெல்லாம் ஒருபோதும் சீர்தூக்கிப் பார்க்க மாட்டார்கள் என்று யாரும் எண்ணக்கூடாது.

எதிர்த்தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மக்கள்மயப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும்,’இவ்வளவு நாளும் மு.கா. தலைவர் றவூப் ஹக்கீமுடன் நல்ல உறவுடன் இருந்துவிட்டு இப்போது அவரைக் குற்றம் சொல்கின்றீர்களே. இது ஏன்? ஆப்படியென்றால் பதவிஆசைதான் காரணமா?’ என்ற கேள்வி அவர்களை நோக்கி எழுப்பபடுகின்றது. இதற்குப் பதிலளிக்கும் வகையில்,தலைவரின் செயற்பாடுகளை ஏன் தாம் பொறுத்துக் கொண்டோம் என்றும், எந்தப் புள்ளியில் நாம் முரண்பட்டோம் என்பதையும் விலாவாரியாக ஹசன்அலியும் அவ்வப்போது பசீரும் சொல்லி விளக்கி வருகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது அதனது அடிப்படைக் கொள்கைக்கு மாற்றமாக. ஒரு தனியார் நிறுவனத்தைப் போல கொண்டு செல்லப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன் பின்னணியிலேயே கிழக்கில் ஒரு புது அணியும் உருவாகியிருக்கின்றது. ‘அப்புறுவராக’ மாறிய சாட்சிகள் போல மக்கள் மன்றத்தில் ஹசன்அலியும் அவரது அணியில் அங்கம் வகிப்போரும் கூறுகின்ற சங்கதிகள் உண்மையானவையென நிரூபிக்கப்படும் பட்சத்தில்,அவை பாரதூரமானவையாகும்.

இன்று தலைவர் ஹக்கீமுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஹசனலியும் பசீரும், தலைவர் தவறுகள் செய்த கடந்த 16 வருடங்களில் அவரோடு இரண்டறக் கலந்திருந்தவர்களே. அந்த அடிப்படையில் பொறுத்துக் கொண்டிருந்தாலும் சம்மதித்திருந்தாலும் அக்காலப்பகுதியில் தலைவர் செய்த தவறுகளில் ஒரு சிறுபங்கு தார்மீகமாக மேற்சொன்ன எல்லோருக்கும் இருக்கின்றது. அவர்கள் தலைவருடன் அப்போது சண்டையிட்டிருக்கலாம். அந்த நடவடிக்கையை தடுக்க முனைந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு காலமாக இவ்விடயத்தை சமூகத்திற்கு சொல்லாமல் இருந்ததை சரி என்று சொல்ல முடியர்து. அது வேறு விடயம். ஆனால் அதற்காக இவர்களது பிரசாரம் கிழக்கின் அரசியலில்உண்டுபண்ணியிருக்கின்ற அதிர்வை யாராலும் மறைக்க முடியாது.

இவ்வாறிருக்கின்ற நிலையிலேயே மு.கா.வின் செயற்பாட்டாளரான ஒருவரினால் கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவுக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அவ்வறிக்கை இவ்வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் மு.கா.வுக்குள் பெரிய பரபரப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்ற சமகாலத்தில் ஏனைய அரசியல் கட்சிகளின் கவனத்தையும் திசைதிருப்பியிருக்கின்றது.

தவறவிட்ட சந்தர்ப்பங்கள்

முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்கின்ற நிலப்பரப்பில் பொதுவாகவும், கிழக்கில் குறிப்பாகவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தலையிடிகளை மு.கா. தலைவர் றவூப் ஹக்கீம் ஆரம்பத்திலேயே தவிர்ப்பதற்கு பல வாய்ப்புக்கள் கிடைத்தன. அந்த வாய்ப்புக்களை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அல்லது, அவர் சில நேரங்களில் தனது நிலையில் இருந்து இறங்கி வந்து பக்குவமாக சில அணுகுமுறைகளை கையாள முற்பட்ட போதும்,அவரைச் சுற்றியிருக்கின்றவர்கள் அதற்கு விடவில்லை என்றும் கூறலாம்.

இன்று மு.கா. தலைவர் மற்றும் அவருக்கு சார்பானவர்கள் தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களில் அதிகமானவை வழக்கமாக அரசியல்வாதிகள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களே. ஆனால் இங்கிருக்கின்ற அடிப்படை விடயம் என்னவென்றால், மு.கா. என்பது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான கட்சியாகும். எனவே குர்ஆனையும் ஹதீஸையும் அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கட்சி என்பது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போலவோ ஐக்கிய தேசியக் கட்சி போலவோ இருக்க முடியாது என்பதாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பொதுவாக நோக்குகின்ற போது இலங்கை முஸ்லிம் அரசியலில் அவரது வகிபாகம் முக்கியமானது. ‘மனிதர்கள் மறதிக்கும் தவறுக்கும் மத்தியில் பிறந்தவர்கள்’ என்று இஸ்லாமிய மார்க்கம் சொல்கின்றது. இது தலைவர்களுக்கும் பொருந்தும். தலைவர் தவறிழைப்பதும், கட்சிக்குள் முறைகேடுகள் நடப்பதும் வீட்டுக்கு வீடு வாசற்படிதான். அதற்காக தலைவர் ஹக்கீம் எந்தச் சேவையும் செய்யவில்லை என்றோ,மு.கா. கட்சி ஒன்றுக்கும் உதவாது என்றோ யாரும் எடுத்த மாத்திரத்தில் கூறி விடமுடியாது.

ஆனால் இங்கிருக்கின்ற பிரச்சினை என்னவென்றால்,குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது அவற்றிற்கு முறையாக பதிலளிக்க வேண்டும் என்பதாகும். ஏனெனில் இக் குற்றச்சாட்டுக்கள் யாரோ ஒருவரினால் முன்வைக்கப்படவில்லை மாறாக கட்சியின் மூத்த உறுப்பினர்களால் முன்வைக்கப்படுபவை ஆகும். அதேபோன்று உண்மையில் அவ்வாறான தவறுகள் இடம்பெற்றிருந்தால் அதனை திருத்திக் கொள்ளவும் முனைய வேண்டும்.

கடந்தகால மீட்டல்

அந்த வகையில், இன்று பகிரங்கமாக முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு, அல்லது நீதிமன்றத்தில் நீதி கோரப்படுகின்ற விடயங்களுக்கு கட்சியின் தலைவர் இதற்கு முன்னமே பதிலளித்திருக்க முடியும். குறைந்தபட்சம் குற்றச்சாட்டுக்களை முன்வைப்போரையும் விமர்சகர்களையும் தம்பக்கம் வசப்படுத்தும் சாணக்கிய நகர்வையாவது செய்திருக்க வேண்டும். ஆனால்,பசீர் போன்ற தந்திரோபாய அரசியல்வாதியும் ஹசனலி போன்ற அனுபவ முதுசமும் இன்று கட்சிக்குள் இல்லாமல் போனமையால்,அது சாத்தியமாக்கப்படவில்லை.

மு.கா. தலைவர் இதற்கு முன்னர் இதைவிடப் பெரிய பிரளயங்களை எல்லாம் சந்தித்திருக்கின்றார். அப்போது அதிலிருந்து அவரை மீட்பதற்கு இன்று முரண்பட்டிருக்கின்ற தவிசாளர், செயலாளர் உள்ளிட்ட குழுவினர் முன்னின்றார்கள். சரியோ பிழையோ எத்தனையோ வியூகங்களை வகுத்தார்கள். தலைவருடைய இமேஜையும் கட்சியையும் காப்பாற்றினார்கள். ஆனால் இன்று அந்த நிலைமைகள் இல்லை.

மு.கா.வுக்குள் இரண்டு பிரதியமைச்சர்கள் இருக்கின்றார்கள். அவர்களையும் சேர்த்து 7 எம்.பி.க்கள் உள்ளனர். மாகாண சபை உறுப்பினர்களும் பலர் இருக்கின்றனர். இந்நிலையில், கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எத்தனைபேர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்? ஆகக் குறைந்தபட்சம், மாற்று அணியினர் முன்வைக்கின்ற விமர்சனங்களுக்கும் தலைவர் மற்றும் கட்சி மீது வைக்கப்படுகின்ற விமர்சனங்களுக்கும் புத்திசாலித்தனமாக பதிலளித்து தலைவரதும் கட்சியினதும் இமேஜை பாதுகாக்க முனைவோரின் எண்ணிக்கையும் குறைந்து விட்டதாகவே தோன்றுகின்றது. ‘மாற்று அணியினருக்கு பதிலளித்து அவர்களை பெரியாளாக்க தேவையில்லை’ என்ற தோரணையில் அவர்கள் செயற்பட்டாலும், ஏன் அவர்கள் அவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதை தலைவர் ஹக்கீம் நன்றாகவே அறிவார்.

பசீரின் கேள்விகள்

மு.கா.வின் சொத்துக்கள் பற்றிய விவகாரங்களை முன்னாள் தவிசாளர் பசீரும்,கட்சி மற்றும் தலைவர் சார்பு அணியினரின் செயற்பாடுகள் பற்றிய விவகாரங்களை முன்னாள் செயலாளர் ஹசனலியும் விமர்சித்து வருகின்றனர் என்பதை நாமறிவோம். அந்த அடிப்படையில் முன்னதாக கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாம் மற்றும் அதனோடிணைந்த சொத்துக்களின் உரிமை தொடர்பில் அப்போது தவிசாளராகவிருந்த பசீர், கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீமுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் பல கேள்விகளை அவர் கேட்டிருந்தார்.

அதற்குப் பதிலளித்து அவ்விடத்திலேயே இவ்விவகாரத்தின் தீவிரத்தன்மையை தணியச் செய்திருக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. அதன் பின்னர் இது பற்றி கட்சியின் உயர்பீடத்தில் பேச முற்பட்ட வேளையிலேயே பசீர் பேச முடியாமலாக்கப்பட்டார். அதனால் தலைவருடன் முரண்பட்டார். இங்கும் ஒரு சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது எனலாம்.

இதன் பிறகு ‘தாறுஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள்’ என்ற ஒரு நூல் வெளியாகி அது நாட்டிலுள்ள முக்கிய தரப்பினரிடையே விநியோகிக்கப்பட்டிருந்தது. கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாம் மற்றும் அதனுடைய சொத்துக்கள் பற்றிய பல கேள்விகளோடு இது வெளியாகியிருந்தது. அத்துடன்,முறைகேடான சொத்து உரிமையாக்கம் தொடர்பானவை எனக் குறிப்பிடப்பட்டு பல ஆவணப் பிரதிகளும் இதில் இணைக்கப்பட்டிருந்தன. இது அரசியல் உயர்மட்டம் வரை ஒருவித பேசு பொருளாக இருந்தது.

இந்த நூல் ஒரு அநாமதேய வெளியீடாகும். உரிமை கோரப்படாத கதைகளுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டிய அவசியம் மு.கா. தேசியத் தலைவருக்கு இல்லை. ஆனால், இதிலுள்ள கேள்விகள் எல்லாம் கிழக்கு மக்களின் வியர்வையிலும் உதிரத்திலும் உருவான மு.கா.வின் சொத்துக்கள் பற்றியதாகும். அத்துடன் இந்த நூலில் கட்சிச் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் எனக் கூறப்பட்டு சில ஆவணப் பிரதிகளும் இணைக்கப்பட்டிருந்தன.இது அசலானவையாகவோ போலியாக சோடிக்கப்பட்டவையாகவோ இருக்கலாம். தலைவர் மீதும் அவருக்கு நெருக்கமான வேறு சிலர் மீதும் அபாண்டத்தை சுமத்துவதற்காக செய்யப்பட்ட ஒரு வேலையாகவும் இருக்கலாம் என்றே வைத்துக் கொள்வோம்.

ஆனால், இதனால் அரச உயர் மட்டங்கள், ஊடகங்கள் மற்றும் வாக்களித்த மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டது. ‘ஏதோ நடந்திருக்கின்றதோ’ என்ற ஐயப்பாடு மு.கா.வை நேசிக்கும் ஒவ்வொரு பொது மகனின் மனதிலும் ஏற்பட்டிருக்கின்றது. எனவே, அநாமேதய புத்தகங்களுக்கும் எதிரணியினரின் கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை என்றாலும்,மக்களின் மனங்களில் எழுந்திருக்கின்ற மேற்படி கேள்விகளுக்கு பதிலளித்து கட்சியின் தூய்மையைவெளிப்படையாக சொல்வதற்கு மு.கா. தலைவர் கடமைப்பட்டிருந்தார்.

எனவே, கட்சி என்ற அடிப்படையில் உத்தியோகபூர்வமாக இதற்கான விளக்கத்தை மக்களுக்கு அளித்திருந்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றே கருத முடிகின்றது. அதைவிட்டுவிட்டு,இப்புத்தகத்திற்கு பதில் கூறும் தோரணையில்வெளியாகிய புத்தகம் மேற்குறிப்பிட்ட கனதியானகேள்விகளின்; வெற்றிடத்தை நிரப்ப போதுமானதல்ல என்பதே பலரதும் கருத்தாகும்.

இரண்டு வழக்குகள்

மறைக்கப்பட்ட மர்மங்கள் நூலுக்கு மு.கா. தலைவரோ செயலாளரோநேரடியாகவும் உத்தியோகபூர்மாக ஊடகங்கள் ஊடாகவும் பதிலளிக்கவில்லை என்றாலும் அதனது பிரசுரத்திற்கு எதிராக முறைப்பாடு ஒன்றை செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் அதனை அச்சிட்ட அச்சக நிறுவனத்தின் உரிமையாளர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைத்து விசாரிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிலையிலேயே மு.கா. அதிருப்தியாளர் தரப்பிலிருந்து இப்போது இன்னுமொரு வழக்கு நகர்த்தப்பட்டிருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாட்டாளர் என தன்னை அடையாளம் காட்டும் ஒருவர் (ஏ.கே.சி. துவான் நஸீர்) கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவில் சில நாட்களுக்கு முன்னர் ஒரு முறைப்பாட்டை செய்திருந்தார். மு.கா. தலைவரின் ஊடகச் செயலாளராக முன்னர் கடமையாற்றியதுடன் அக்கட்சி சார்பாக மாநகர சபை தேர்தலில் போட்டியிட்டவருமான இவர் இலங்கைப் பிரஜை என்ற அடிப்படையிலும் கட்சியின் மூத்த உறுப்பினர் என்ற அடிப்படையிலுமே இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

மு.கா.விற்கு சொந்தமான காணி ஒன்று மாகாண முதலமைச்சருடன் தொடர்புபட்ட தனியார் நிறுவனம் ஒன்றினால்மோசடியான முறையில் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் முறைப்பாடு செய்திருந்தார். இதனை பரிசீலித்த மோசடி விசாரணைப் பிரிவினர் ஒரு ‘பீ’ அறிக்கையின் மூலம் இந்த முறைப்பாட்டை கொழும்பு கோட்டை நீதிமன்றத்திற்கு நகர்த்தியிருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு கடந்த செவ்வாய்க்கிழமை கோட்டே நீதிமன்ற நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்காளி தரப்பில் சட்டத்தரணிகளான மைத்திரி குணரத்ன, சிராஸ் நூர்தீன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர்.

இது தொடர்பாக விசாணைகளை நடாத்தி வருவதாகவும் மேலும் ஆவணங்கள் மற்றும் வங்கி அறிக்கைகளை பெறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மோசடி விசாரணைப் பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடாத்தி, நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் பின் சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,’முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் 11.2 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட காணி 42 இலட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டதாக காணி உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் முத்திரைக் கட்டணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. உறுதியில் கொள்வனவாளர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. பக்கங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சாட்சியாளர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இது சட்டவிரோதமானது. இதன்மூலம் அரசாங்கத்திற்கும் மு.கா.வுக்கும் மோசடி செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து,முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் களம் மீண்டும் சுறுசுறுப்படைந்துள்ளது. அநாமேதயமாகவும் அரசல்புரசலாகவும் மேடைகளிலும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கப்படாதிருந்த நிலையில், அவ்விடயம் இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருக்கின்றது. மு.கா.வின் பெயரும் கௌரவமும் இதனால் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற மனக்கிலேசம் சாதரண மக்களுக்கு இருந்தாலும்,தமது கட்சியின் சொத்து உண்மையாகவே வேறு தரப்பினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இல்லாமலில்லை.

இந்த வழக்கிற்கான முறைப்பாடு என்ன அடிப்படையில், எத்தகைய ஆவணங்களின் துணை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது நமக்குத் தெரியாது. வாதியின் தரப்பால் சமர்ப்பிக்கப்படக் கூடிய ஆதாரங்களின் சட்டவலுத் தன்மை தொடர்பிலும் நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும். விசாரணையில் உள்ள வழக்குத் தொடர்பில் நாம் கருத்து வெளியிடவும் முடியாது. ஆனால்,இந்த விடயத்தில் யார் தவறு இழைத்திருந்தாலும் அவர்கள் விடயத்தில் நீதிநிலைநாட்டப்பட வேண்டும்.

நீதியும் தர்மமும் வெல்லட்டும்.

நன்றி: வீரகேசரி (07.05.2017)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்