கடல் நீரை சுத்தப்படுத்தியேனும் பொத்துவிலுக்கு குடிநீர் தருவேன்; மு.கா. தலைவரின் ஏப்ரல் ஃபூல் தின வாக்குறுதி

🕔 April 1, 2017

– முன்ஸிப் அஹமட் –

டல் நீரை சுத்தப்படுத்தியேனும், பொத்துவில் மக்களுக்கு குடிநீரை வழங்கி, அந்தப் பிரதேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு காணப் போவதாக, ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்தார்.

பொத்துவில் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து  கொண்டு பேசிய போதே, அவர் இந்த வாக்குறுதியை வழங்கினார்.

மு.காங்கிரசின் இந்தக் கூட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி பாரிய எதிர்ப்பினை தெரிவித்ததோடு, கூட்ட மேடைக்கு கல் வீசி தாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அங்கு பேசிய மு.கா. தலைவர் ஹக்கீம்; “பொத்துவிலில் மு.காங்கிரசுக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுவது இதுதான் முதல் தடவையல்ல. மறைந்த தலைவர் அஷ்ரப் காலத்திலும் பொத்துவிலில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன” என்றார்.

அதேவேளை, பிரதியைமச்சர் பைசால் காசிம் மற்றும் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோருக்கு பொத்துவில் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அவர்கள் இருவருக்காகவும் மு.கா. தலைவர் ஹக்கீம், மேடையில் பரிந்து பேசியமையும் குறிப்பிடத்தக்கது.

பொத்துவில் பிரதேசத்துக்கு சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிமின் முயற்சியினால், 03 மாடிக் கட்டடமொன்று அமைத்துத் தருவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், ஆனால் – பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் 04 மாடி கட்டடம் அமையவுள்ளதாக பொத்துவில் மக்களுக்கு பிழையான தகவல்களை வழங்கி வருவதாகவும் ரஊப் ஹக்கீம் இதன்போது சுட்டிக் காட்டினார்.

எவ்வாறாயினும், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்திலும், பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் 04 மாடிக் கட்டடமே அமையவுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழமையாக பொதுக் கூட்ட மேடைகளில் மணித்தியாலக் கணக்கில் பேசும் மு.கா. தலைவர் ஹக்கீம், பொத்துவில் கூட்டத்தில் மிகக் குறுகிய நேரத்தில் பேசி விட்டு, அவசரமாகச் சென்றார்.

பொத்துவிலுக்கு கடலில் நீரை சுத்திகரித்தியேனும் குடிநீரை பெற்றுத் தருவேன் என்று, மு.கா. தலைவர் தெரிவித்தமை தொடர்பாக, அந்த மேடையிலிருந்த மு.கா.வின் பிரமுகர் ஒருவரிடம் நாம் கேட்டபோது; “இன்றைய ஏப்ரல் ஃபூல் தினத்துக்கு பொருத்தமாகத்தான் தலைவர் பேசுகியிருக்கிறார்” என்று, சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

மேற்படி கூட்டம் பாரிய எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. கூட்ட மேடைக்கு அருகிலுள்ள வீதிக்கு இறங்கிய பொதுமக்கள், மு.காங்கிரசின் மேற்படி கூட்டத்துக்கு தமது பலமான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய பேஸ்புக் பக்கம்

மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டபோது – வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்