வேலையில்லா பட்டதாரிகள்: ஒப்பனையற்றவர்களின் கண்ணீர் கதை

🕔 February 26, 2017

‘வேலையில்லாப் பட்டதாரி’ என்று தமிழில் ஒரு திரைப்படம் வந்தது. அதில் கதாநாயகனாக தனுஷ் நடித்திருப்பார். வேலையில்லாத பட்டதாரி சந்திக்கும் பிரச்சினைகளை அந்தத் திரைப்படம் பேசுவதாக இருந்தாலும், திரைப்படம் முழுக்க தனுஷ் காட்டும் வீரமும், அவர் பெறுகின்ற வெற்றிகளுமே நிறைந்திருக்கும்.

படத்தைப் பார்த்த இளசுகள், ‘நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரியாக இருக்கக் கூடாதா’ என்று உள்ளுக்குள் ஆசைப்படும் அளவுக்கு, அந்தப் படத்தில் தனுஷுக்கு ‘எல்லாம்’ அமைந்திருக்கும். அந்த திரைப்படத்துக்குப் பிறகு, தம்மை ‘வேலையில்லாப் பட்டதாரிகள்’ என்று சொல்வதற்கு, கூச்சப்பட்டுக் கொண்டு திரிந்த இளைஞர்களில் கணிசமானோர்; ‘நான் ஒரு விஐபி’ (Velai Illa Paddathaari எனும் வாக்கியத்திலுள்ள சொற்களின், முதல் எழுத்துக்களினுடைய கூட்டு) என்று, ஸ்டைலாகச் சொல்லத் தொடங்கினர். ஆனால், ஒப்பனைகளற்ற நிஜ வாழ்வில், வேலையில்லா பட்டதாரியாக இருப்பதென்பது மிக மோசமான அனுபவமாகும்.

இலங்கையின் கல்வி முறைமை குறித்து பல்வேறு விதமான வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. தொழிற் சந்தைக்கு ஏற்ற வகையில் படிப்பாளிகளை உருவாக்கும் கல்வித் திட்டம் நம்மிடம் இல்லை என்பது பாரிய குறைபாடாகக் கூறப்படுகிறது. இதனால், பல்கலைக்கழங்களுக்குச் சென்று பட்டதாரிகளாக வெளியேறும் பலர், தொழில் சந்தையிலுள்ள வெற்றிரங்களை நிரப்புவதற்கான தகைமைகளை கொண்டவர்களாக இல்லை என்பது, கசப்பான உண்மையாகும்.

உதாரணமாக, தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள், சர்வதேச ரீதியாக பாரியளவில் உள்ளன. இந்தத் துறையில் பணியாற்றுவதற்கான தகைமைகளைக் கொண்டவர்களுக்கு பெரும் கிராக்கி உள்ளது. ஆனால், கலைத்துறையில் பட்டம் பெற்று வெளியேறும் ஒருவரால், தகவல் தொழில்நுட்பத் துறையில் போட்டியிட்டு தொழில் வாய்ப்பொன்றினைப் பெற்றுக் கொள்வதென்பது, கடினமான காரியமாகும்.

இன்னொருபுறம், பட்டதாரிகளாக வெறியேறுகின்றவர்களுக்கு அரச தொழில்களை வழங்கும் நடைமுறையினை, அனைத்து அரசாங்கங்களும் கடைப்பிடித்து வருகின்றன. இதனால், அரச தொழிலொன்றினைப் பெறுவதற்காகவே, பலர் பட்டங்களை நிறைவு செய்கின்றார்கள். ‘பட்டதாரிகளுக்கு அரச தொழிலை வழங்குவதென்பது, அரசாங்கங்களின் கடமையாகும்’ என்று, ஒவ்வொரு பட்டதாரியும் நம்புமளவுக்கு நிலைமை பாரதூரமாகியுள்ளது.

அரசாங்கங்களின் பிழையான கல்வித் திட்டமும், அரச வேலைகளை வழங்குவதற்காகப் பின்பற்றப்படும் தவறான நடைமுறைகளுமே, இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமைக்கான காரணங்களாகும். எனவே, அரச தொழில் வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களையும், உண்ணா விரதப் போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பினை அரசாங்கங்கள் எவ்வகையிலும் தட்டிக் கழிக்க முடியாது.

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு அரச தொழில்களை உடனடியாக வழங்க வேண்டுமெனக் கோரி, பல்வேறு விதமான கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடந்த செவ்வாய்கிழமையன்று ஆர்ப்பாட்டங்களிலும், உண்ணா விரத நடவடிக்கைகளிலும் வேலையில்லாப் பட்டதாரிகள் ஈடுபட்டனர். இப்போதும் வேலையில்லாப் பட்டதாரிகளின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இலங்கையைப் பொறுத்த வரையில் – ஒருவரின் சமூக அந்தஸ்து என்பது, அவர் செய்கின்ற தொழிலின் ஊடாகவே கணிக்கப்படுகிறது. மேலும், அரச தொழில் என்பது அதிக அந்தஸ்துடையதொன்றாவும் பார்க்கப்படுகிறது. அதனால்தான், ‘அரச முட்டை கல்லை உடைக்கும்’ என்று நம்மவர்கள் கூறுகின்றனர். அரச தொழிலை இவ்வாறு நம்புவதற்குப் பிரதான காரணம் அதிலுள்ள தொழில் பாதுகாப்பும், வசதிகளுமாகும். ஆனால், அபிவிருத்தியடைந்த பல நாடுகளில், ஒருவரின் தொழிலினூடாக அவரின் சமூக அந்தஸ்து மதிப்பிடப்படுவதில்லை. அங்கு தொழில் என்பது, வருமானத்துக்குரிய ஒரு வழியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் தமக்கு அரச தொழிலை வழங்குமாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எத்தனை பேர் இருக்கின்றனர் என்கிற முழுமையான தகவல்கள் கிழக்கு மாகாண அரசாங்கத்தின் கைகளில் இல்லை என்பது வேடிக்கையான விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கில் வேலை வாய்ப்புகளை வழங்கவுள்ளதாக காலத்துக்குக் காலம், அந்த மாகாணத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கூறி வருகின்றார்.

அவ்வாறு கூறுகின்றவர், தனது மாகாணத்தில் ஆகக்குறைந்தது, எத்தனை வேலையற்ற பட்டதாரிகள் உள்ளனர் என்கிற கணகெடுப்பையாவது மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், வேலை கேட்டுச் சென்ற பட்டதாரிகளிடம்தான்ளூ ‘உங்கள் மாவட்டங்களில் வேலையற்ற பட்டதாரிகள் எத்தனை பேர் இருக்கின்றார்கள் என்கிற தவவல்களைத் திரட்டிக் கொண்டு வாருங்கள்’ என, கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறியிருக்கின்றார். இது கோமாளித்தனத்தின் உச்சமாகும்.

எவ்வாறாயினும், தங்களின் மாவட்டங்களிலுள்ள வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பான தகவல்களை திரட்டும் நடவடிக்கைகளில் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தினர் ஈடுபட்டிருந்தனர். இதற்கிணங்க சுமாரானதொரு தகவலினையும் அவர்கள் திரட்டி வைத்துள்ளார்கள்.

அந்த வகையில், அம்பாறை மாவட்டத்தில் 3300 பேரும், மட்டக்களப்பில் 1700 பேரும், திருகோணமலையில் 2000 பேரும் சுமாராக வேலையில்லாப் பட்டதாரிகளாக உள்ளனர் என்று, அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளரும், கிழக்கு மாகாண ஒன்றியத்தின் உப செயலாளருமான ஏ.ஆர்.எச். அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டை, கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சந்தித்து, தமக்கு அரச தொழில் வழங்குமாறு வேண்டிக் கொண்டனர். இதன்போது, தமது கோரிக்கைகள் சிலவற்றினை நிறைவேற்ற வேண்டுமெனவும், அவர்கள் முதலமைச்சரிடம் எழுத்து மூலம் கேட்டுக் கொண்டனர். அந்தக் கோரிக்கைகளாவனள,

01) பட்டதாரிகளுக்கு அரச தொழில்களை வழங்கும் பொருட்டு, போட்டிப் பரீட்சைகளை நடத்தாமல், நேர்முகப் பரீட்சைகளின் மூலம் தொழில் வாய்ப்புக்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

02) முந்திப் பட்டம் பெற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பின்போது முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டும். மேலும், பட்டதாரிகளுக்கு வேலை வழங்கும் வயதெல்லையினை 45 ஆக ஆக்குதல் வேண்டும்.

03) பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்படும் போது, ஏற்கனவே அரச தொழிலில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கக் கூடாது.

04) கடந்த அரசாங்கத்தில் 31.03.2012ஆம் ஆண்டு வரையில், வேலையற்ற பட்டதாரிகளுக்கு, நேர்முகப் பரீட்சை மூலமாகவே அரச சேவையில் தொழில்கள் வழங்கப்பட்டன. அதேபோன்று, எஞ்சியுள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படுதல் வேண்டும்.

05) க.பொத. உயர்தரத்தில் தகைமையுடையவர்களை முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கத்தினால் முடிகிறது. அவ்வாறெனில், பட்டதாரிகளுக்கும், அவர்கள் பட்டம் பெற்ற ஆண்டிலேயே நியமனங்களை வழங்குவதற்கு, மத்திய அரசாங்கம் அல்லது மாகாண அரசாங்கம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

06) அண்மையில் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் நியமன போட்டிப் பரீட்சையில் 40 புள்ளிகள் பெற்று சித்தியடைந்தவர்களைத் தவிர்த்து, மீதமாகக் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, முன்னதாக பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் நேர்முகப் பரீட்சைகள் மூலம் நியமனங்கள் வழங்கப்படுதல் வேண்டும்.

என, அவர்கள் தமது கோரிக்கைகளைப் பட்டியலிட்டிருந்தனர்.

இந்த கோரிக்கைகளுக்கு இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடாமையினாலேயே, தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையற்ற பட்டதாரிகள், கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் அதிகமானவற்றுக்கு கிழக்கு மாகாண சபையினர், ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ள போதிலும், அதனை நிறைவேற்றுவதில் அந்த மாகாணசபையின் ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் என்று, முதலமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலவேளைகளில் இது உண்மையாகக் கூட இருக்கலாம்.

இருந்தபோதும், கிழக்கு மாகாண ஆளுநருடன் முதலமைச்சர் நஸீர் அஹமட் எப்போதும் முரண்பட்டுக் கொண்டு நிற்பதன் விளைவாகவே – இதனை பலரும் பார்க்கின்றனர். ஆளுநர்களைத் தாண்டி, மாகாண சபைகளில் ஒரு துரும்பினைக் கூட நகர்த்த முடியாது என்று தெரிந்திருந்தும், கிழக்கு மாகாண ஆளுநருடன், முதலமைச்சர் நஸீர் அஹமட் – மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பது, பல நல்ல காரியங்களை நிறைவேற்றுவதற்குத் தடையாக உள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முதலமைச்சராக சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் நஜீப் ஏ மஜீத் ஆகியோர் பதவி வகித்தபோது, அவர்களுக்கும் ஆளுநருக்கும் இடையில் சொல்லிக் கொள்ளத்தக்க வகையில் நல்லுறவு நிலவியது. அந்த நல்லுறவினூடாகவே, அப்போதைய முதலமைச்சர்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டனர்.

ஆனால், ‘பதவி நிலையில் யார் பெரியவர்’ என்கிற, பத்தாம் பசலித்தனமான காரணங்களையெல்லாம் முன்னிறுத்திக் கொண்டு, ஆளுநருடன் முதலமைச்சர் தொடங்கிய ‘அட்டைக் கத்திச் சண்டை’யானது, இப்போது பலரின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நிலைவரத்துக்கு இட்டுச் சென்றுள்ளதாக, மாகாண சபை உறுப்பினர்களே கூறுகின்றனர்.

கிழக்கு மாகாண ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் இப்படித்தான் இருக்கின்றன என்கிறார், அம்பாறை மாவட்ட வேலையில்லாப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் செயலாளரும், கிழக்கு மாகாண ஒன்றியத்தின் உப செயலாளருமான அப்துல் ரகுமான். ‘அண்மையில், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளும் பொருட்டு, போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இதில் வெட்டுப்புள்ளி 40ஆக இருக்கும் என்று வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், குறித்த பரீட்சையில் 40 புள்ளிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் நியமனம் வழங்கப்படவில்லை.

228 பேருக்கே நியமனங்கள் வழங்கப்பட்டன. அதிலும், 2016ஆம் ஆண்டு பட்டங்களைப் பெற்றுக் கொண்டவர்கள் இதன்போது நியமனங்களைப் பெற்றுக் கொள்ள, 05 வருடங்களுக்கு முன்னர் பட்டங்களை முடித்தவர்கள் நியமனங்கள் வழங்கப்படாமல் தட்டி விடப்பட்டார்கள். இது அநீதியான செயற்பாடாகும். இதனால்தான் நேர்முகப் பரீட்சை தேவையில்லை என்றும், முந்திப் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுதல் வேண்டுமெனவும் நாம் வலியுறுத்துகின்றோம்’ என்று அப்துல் ரகுமான் விபரித்தார்.

பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையில் இலவசக் கல்வியை வழங்கும் அரசிடம்ளூ ‘பட்டம் பெற்ற எங்களுக்கு வேலையும் போட்டுக் கொடு’ என்று வாதம் புரிவதில் நியாயங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பட்டம் பெறுகின்றவர்களுக்கு அரச வேலை கிடைக்கும் என்கிற, உத்தரவாத மனநிலையொன்றினை ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் வளர்த்து விட்டுள்ளன. இந்த நிலையில், அதை நம்பிக் கொண்டிருக்கும் வேலையற்ற பட்டதாரிகளை திடீரெனக் கைவிட முடியாது. அப்படி கைவிடுவது தர்மமாகாது.

ஆனாலும், எதிர்காலத்தில் ‘பட்டதாரிகளுக்கு அரச தொழில் நிச்சயம்’ என்கிற மனநிலை தகர்த்தெறியப்படுதல் வேண்டும். அதற்காக அரசாங்கம் திட்டங்களை வகுக்க வேண்டும். ‘பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்கப்படத்தான் வேண்டும் என்கிற கடமைகளெல்லாம் கிடையாது’ என்கிற நிலைவரமானது – ஆயோக்கியமானதாகவும் அமைதல் அவசியமாகும்.

நன்றி: ஆதவன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்