முஸ்லிம்களை கும்பிட வைக்கும் நேத்ரா

🕔 February 21, 2017

– ஆசிரியர் கருத்து –

நேத்ரா தமிழ் தொலைக்காட்சியின் செய்தியறிக்கைகளை வாசிக்கும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள், கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்ல வைக்கப்படுகின்றமை குறித்து, முஸ்லிம்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவாஹினி சேவையின் சகோதர தமிழ் தொலைக்காட்சி அலைவரிசையான நேத்ரா தொலைக்காட்சியின் செய்தியறிக்கை ஆரம்பிக்கும் போது, அதனை வாசிக்கும் அறிவிப்பாளர்கள் கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் சொல்லும் முறைமை மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

கையெடுத்துக் கும்பிடுகின்றமையானது இஸ்லாமிய மதத்துக்கும், முஸ்லிம்களின் கலாசாரத்துக்கும் முரணான விடயமாகும். இருந்தபோதும், நேத்ரா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர்களாகக் கடமையாற்றும் முஸ்லிம்கள், கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் கூறும் வழக்கம், மிக நீண்ட காலமாக உள்ளது.

இது குறித்து நாம் விசாரித்தபோது, கையெடுத்துக் கும்பிடுவதில் தமக்கு உடன்பாடு இல்லையென்ற போதும், தொலைக்காட்சி நிருவாகத்தினரின் வற்புறுத்தல் காரணமாகவே, அதனை தாம் செய்து வருவதாக – செய்தி வாசிப்பாளர்களாகக் கடமையாற்றும் முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமிய மதத்திலும், முஸ்லிம்களின் கலாசாரத்திலும் தடுக்கப்பட்ட ஒரு நடைமுறையினை மேற்கொள்ளுமாறு, தேசிய தொலைக்காட்சி சேவையொன்றின் நிருவாகத்தினர், முஸ்லிம் அறிவிப்பாளர்களிடம் வற்புறுத்துகின்றமை அடிப்படை மற்றும் மனித உரிமை மீறலாகும்.

இதேவேளை, நேத்ரா செய்திச் சேவையின் பணிப்பாளராக சிரேஷ்ட ஊடகவியலாளர் யு.எல். யாக்கூப் கடமையாற்றி வரும் நிலையில், முஸ்லிம் செய்தி வாசிப்பாளர்கள் இவ்வாறு கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் கூறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றமையானது கவலையளிக்கும் விடயமாகவும் உள்ளது.

இன்னொருபுறம், இவ் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தேசியத் தலைவவர்கள் என தம்பட்டம் அடித்துக் கொள்வோர் கூட,  அக்கறையற்றிருப்பது வேதனையான விடயமாகும்.

சில முஸ்லிம் அரசியல் தலைவர்களே கையெடுத்துக் கும்பிட்டு வணக்கம் தெரிவிப்பவர்களாக இருக்கும் போது, நேத்ரா விவகாரத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில் மார்க்க அக்கறையும், சமூகப் பொறுப்பும் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

ஒருவரின் மதத்தில் தடுக்கப்பட்ட விடயமொன்றினை, செய்வதற்கு வற்புறுத்தும் நேத்ரா தொலைக்காட்சி நிருவாகம் மீது, உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகிறது.

இதேவேளை, மற்றுமொரு அரச தமிழ் தொலைக்காட்சி சேவையான வசந்தம் தொலைக்காட்சியின் செய்திகளை வாசிக்கும் முஸ்லிம் அறிவிப்பாளர்கள், கையெடுத்துக் கும்பிடுவதில்லை என்பது இங்கு குறிப்பித்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்