ஹசனலியின் பதவியை இல்லாமலாக்க ஹக்கீம் முயற்சி; கட்சிக்குள் விஷ்வரூபம் எடுக்கும் சர்வதிகாரம்

🕔 January 28, 2017

Hakeem - 86– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் செயலாளர் நாயகம் எனும் பதவியை இல்லாமலாக்குவதற்கு கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது. இந்த நிலையில், தனது இந்த முடிவு குறித்து கட்சியின் முக்கியஸ்தர்களை சிறிது சிறிதாக அழைத்து தெரியப்படுத்தி வருகின்றார் எனவும் அறிய முடிகிறது.

முஸ்லிம் காங்கிரசில் தற்போது செயலாளர் நாயகம் பதவியினை எம்.ரி. ஹசனலி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செயலாளர் நாயகமாக கட்சியில் ஹசனலி செயற்பட்டு வந்த நிலையில், உயர் பீட செயலாளர் பதவியொன்றினை கடந்த முறை கட்சியில் உருவாக்கிய ரஊப் ஹக்கீம், பின்னர் – உயர்பீட செயலாளர்தான் கட்சியின் அதிகாரம் மிக்க செயலாளர் என, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவித்திருந்தார்.

இதன் பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து வாசகர்கள் அறிவர்.

எவ்வாறாயினும், ஓர் அரசியல் கட்சிக்குள் இரண்டு செயலாளர்கள் இருக்க முடியாது என, தேர்தல் ஆணையகம் மு.கா. தலைவருக்கு அறிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே, கட்சிக்குள் செயலாளர் நாயகம் எனும் பதவியினை யாப்புத் திருத்தம் மூலம் இல்லாமல் செய்து விட்டு, செயலாளர் பதவியினை மாத்திரம் வைத்துக் கொண்டிருப்பதற்கு ரஊப் ஹக்கீம் தீர்மானித்துள்ளார். ஆயினும், செயலாளர் பதவிக்கு எக்காரணம் கொண்டும் ஹசனலியை நியமிப்பதில்லை எனவும் ஹக்கீம் முடிவு செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.

இந்த நிலையில், உயர்பீட செயலாளராக நியமிக்கப்பட்டு – பின்னர் சூழ்ச்சிகரமாக செயலாளர் என்று தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்ட – தற்போதைய ‘டம்மி’ செயலாளரான மன்சூர் ஏ. காதரையே எதிர்வரும் பேராளர் மாநாட்டின் மூலம் தொடர்ந்தும் செயலாளராக வைத்திருப்பதற்கும் ஹக்கீம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்சியின் மிக முக்கிய மூத்த உறுப்பினரான ஹசனலியை ஓரம் கட்டுவதற்காகவே, ஹக்கீம் இவ்வாறானதொரு தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்த நிலையில், ஹசனலிக்கு இவ்வாறானதொரு அநியாயம் இழைக்கப்படுமாயின், அதற்குப் பலமான எதிர்ப்பினை தாம் வெளியிடுவோம் என்று, மு.கா.வின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த உயர்பீட உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் தெரிவிக்கின்றனர்.

ஹக்கீமுடைய இந்த நடவடிக்கை மூலம், அவர் – தன்னை மேலும் சர்வதிகாரம் கொண்ட தலைவராக்கிக் கொள்வதற்கு முயற்சிக்கின்றார் எனவும், கட்சிக்குள் பேசப்படுகிறது.

இவ்வாறு தான்தோன்றித்தனமாக, அதிகளவு அதிகாரங்களை பெற்றுக் கொள்வதற்கான ஹக்கீமுடைய இந்த முயற்சி, கடைசியில் அவருக்கே படு குழியாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்