ஆயுசு நூறு

🕔 December 28, 2016

article-mtm-988– முகம்மது தம்பி மரைக்கார் –

கரத்தால் சுற்றிவர நிலத்திலிருந்து அரைவாசியளவு அடைக்கப்பட்டு, கிடுகினால் கூரையிடப்பட்ட அந்தக் கடைக்கு ‘ஆயுசு நூறு’ என்று பெயர். அம்பாறை மாவட்டம் பாலமுனை பிரதேசத்தின் எல்லைப் புறத்தில் அந்தக் கடை அமைந்திருக்கிறது. கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணிக்கும்போது, பாலமுனையில் நெல்வயற் காணிகள் இருக்கும் பக்கமாகவுள்ள வீதியோரத்தில் அந்தக் கடையினை நீங்கள் காணலாம்.

‘ஆயுசு நூறு’ – ஒரு கஞ்சிக் கடை. பாலமுனையைச் சேர்ந்த எஸ்.எல்.ஏ. ஹமீட் அந்தக் கடையின் முதலாளி – தொழிலாளி என்று, எல்லாமே அவர்தான். அந்தக் கடையில் விற்கப்படும் கஞ்சியை வாங்கி, சௌகரியமாக இருந்து குடிக்க கடைக்குள் வசதிகள் இல்லை. ஆனாலும், 25 கிலோமீற்றர் தூரத்திலிருக்கும் மருதமுனைப் பிரதேசத்திலிருந்தும், ஹமீட்டின் கஞ்சிக் கடைக்கு வாடிக்கையாளர் வந்து போகிறார்கள்.

‘ஆயுசு நூறு’ – அந்தப் பிராந்தியத்தில் புகழ்பெற்ற கஞ்சிக் கடையாகும். இங்கு விற்கப்படும் கஞ்சிதான் அந்தக் கடையின் புகழுக்குக் காரணம். ஒவ்வொரு நாளும் வௌ;வேறு வகையான பத்துக்கும் மேற்பட்ட மூலிகைகள், கஞ்சியில் சேர்க்கப்படுவதாக கடையின் உரிமையாளர் ஹமீட் கூறுகிறார். அவற்றில் கணிசமானவை அருகிவரும் மூலிகைகளாகும்.

ஹமீட்டுக்கு இப்போது 61 வயதாகிறது. 05 பிள்ளைகள். பத்து வருடங்களாக கொழும்பில் கஞ்சிக் கடை நடத்தி வந்ததாகக் கூறுகிறார். ஒரு வருடமாகத்தான் பாலமுனையில் ‘ஆறுசு நூறு’ கடையை நடத்துகிறார்.

மொடக்கத்தான், மாம்பாஞ்சான், வல்லாரை, தூதுவளை, குறுஞ்சா, குப்பைமேனி, மல்லியிலை, அகத்தி, முடிதும்பை, அறுகம்புல்லு, கையான்தகரை, கானாந்தி, பொன்னவரை, கருஞ்சீரகம், கீழ்காய்நெல்லி, முசுமுசுக்கை, பொன்னாங்கண்ணி மற்றும் கறிவேப்பிலை என்று ஏகப்பட்ட மூலிகைகள் – இங்கு விற்கப்படும் கஞ்சியில் சேர்க்கப்படுவதாக, கடையின் முன்னால் எழுதித் தொங்க விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 10 தொடக்கம் 12 வகையான வௌ;வேறு மூலிகைகள் தனது கடைக் கஞ்சியில் சேர்க்கப்படுவதாக ஹமீட் கூறுகிறார். ‘ஆயுசு நூறு’ கடைக்கு நாம் சென்றபோது, மறுநாளுக்குத் தேவையான மூலிகை வகைகள், ஈரம் காயாமல் அங்கு கொத்துக் கொத்தாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தமையைக் காணக் கிடைத்தது.

ஹமீட்டுடைய கடையில் ஒரு பெரிய பானையில் குறுணல் கஞ்சி நெருப்பில் வெந்து கொண்டிருக்கிறது. அகலமான வாயைக் கொண்ட போத்தலில் மூலிகைச் சாறு தனியாக உள்ளது. கஞ்சி கேட்டால், ஒரு கிளாஸில் கொஞ்சம் மூலிகைச் சாற்றினை ஹமீட் ஊற்றியெடுக்கின்றார். பிறகு, பானையிலிருக்கும் குருணல் கஞ்சியினை அகப்பையினால் அள்ளி, கிளாஸினுள் விட்டு – ஆற்றி, வாடிக்கையாளரிடம் நீட்டுகின்றார். கஞ்சியைக் குடிக்கும்போது மூலிகை வாசம் – நாசி வழியாக உடல், மனமெல்லாம் பரவுகிறது. தேவையானால், குடிக்கும் கஞ்சியுடன் சேர்த்துக் கடிக்க, நறுக்கப்பட்ட ‘அக்குறு’க் கட்டித் துண்டுகள் ஓரு போத்தலில் இருக்கின்றன.

வயது வேறுபாடுகளின்றி எல்லாத் தரப்பினரும் ‘ஆயுசு நூறு’ கடைக்கு வந்து போகிறார்கள். சிலர் – கஞ்சி குடித்து விட்டு, வீட்டுக்கும் வாங்கிப் போகிறார்கள். காலை 7.00 மணியிலிருந்து 11.00 மணி வரையில்தான் வியாபாரம். அதற்குப் பிறகும் பலர் வந்து – கஞ்சி இல்லாமல் திரும்பிப் போகிறார்கள். ‘நாளொன்றுக்கு 80 கிளாஸ் கஞ்சிதான் விற்கிறேன்’ என்கிறார் ஹமீட். ஒரு கிளாஸ் கஞ்சி 50 ரூபாய்.

கடை உரிமையாளர் ஹமீட்டிடம் பேச்சுக்கொடுத்தோம். ‘இந்த வியாபாரத்துக்காக நாளொன்றுக்கு இரண்டாயிரம் ரூபாய் முதலீடு செய்கிறேன். சுமார் 04 ஆயிரம் ரூபாய்க்கு வியாபாரமாகிறது. அப்படிப் பார்த்தால் 02 ஆயிரம் ரூபாய் நாளொன்றுக்கு லாபமாக எனக்குக் கிடைக்கிறது’ என்று ஹமீட் வெளிப்படையாகப் பேசினார். ஆனாலும், அந்த லாபத்தில்தான் ஹாமீட்டுடைய நாட்கூலியும் அடங்குகிறது.

மூலிகைகளை எங்கிருந்து பெறுகிறீர்கள் என்று கேட்டோம். ”பள்ளக்காட்டிலிருந்து ஒருவர் தினமும் கொண்டு வந்து தருகிறார். அதற்கு ஒரு தொகைப் பணம் கொடுக்கிறேன். வீட்டு வளவில் நானும் சில வகை மூலிகைகளை வளர்த்து வருகிறேன்” என்றார். பள்ளக்காடு என்பது பாலமுனையிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஒரு இடமாகும்.

‘ஆயுசு நூறு’ கஞ்சிக்கடை பார்ப்பதற்கு மிக எளியதாக இருந்தாலும், அங்கு கிடைக்கும் கஞ்சியின் தரம் மிக உயர்வாக உள்ளது. அதற்காக ஹமீட் கடுமையாக உழைக்கின்றார். ”நாளைக்குத் தேவையான மூலிகை வகைகள் இன்றே கிடைத்து விடும். அதிகாலை 2.00 மணிக்கே எழுந்து கஞ்சி தயாரிப்புக்கான முன் ஏற்பாடுகளையும், மூலிகைச் சாறு தயாரிப்பினையும் செய்யத் தொடங்கினால், காலை 6.00 மணிக்கு – அந்த வேலைகள் நிறைவடையும். பிறகு அவற்றினை எடுத்துக் கொண்டு கடைக்கு வந்தால், 7.00 மணியிலிருந்து வியாபாரம் ஆரம்பித்து விடும்” என்று, தனது தொழிலை ஹமீட் விபரித்தார்.

”அடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் குறுணல் கஞ்சியுடன், மூலிகைகளை சேர்த்து வேகவிடக் கூடாது. அப்படிச் செய்தால் மூலிகைகள் வெந்து, அவற்றிலுள்ள சத்துக்கள் இல்லாமல் போய்விடும். அதனால்தான், மூலிகைகளைகளை பச்சையாக துவைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் சாறுகளை வேறாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு, கஞ்சியுடன் கலந்து கொடுக்கிறேன். அப்போதுதான், மூலிகைகளின் முழுமையான பயன், கஞ்சி குடிப்பவருக்குக் கிடைக்கும்” என்று, தொழில் நுணுக்கங்களையும் நம்முடன் ஹமீட் பகிர்ந்து கொண்டார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இரண்டு நாள் தொழிற் பயிற்சியொன்றில் – தான் கலந்து கொண்டதாகவும், அதன்போது, இவ்வாறான செயன்முறைகளை கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஹமீட்டுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு வந்த வாடிக்கையாளரொருவரும் இயல்பாக நமது பேச்சுக்கு இடையில் நுழைந்தார். அந்த வாடிக்கையாளர் நிந்தவூரைச் சேர்ந்தவர். 10 கிலோமீற்றர் தூரத்திலிருந்து தினமும் இங்கு கஞ்சி குடிப்பதற்காக வந்து போகிறார். இந்தக் கஞ்சியைக் குடிப்பதால் தனது ஆரோக்கியத்தில் நல்ல சில மாற்றங்களை – தான் உணர்வதாக, அந்த வாடிக்கையாளர் சொன்னபோது வியப்பாக இருந்தது.

‘சீனி வருத்தம்’ மற்றும் உடலில் அதிக ‘கொலஸ்ரோல்’ உள்ளவர்களுக்கு, தனது கஞ்சியில் சேர்க்கும் மூலிகைகள் மருந்தாகிறது என்றார் ஹமீட். குறுஞ்சா, மாம்பாஞ்சான், கறிவேப்பிலை, மொடக்கொத்தான் போன்றவை உடலில் அதிக சீனி மற்றும் கொலஸ்ரோல் உள்ளவர்களுக்கு நல்ல மருந்தாகும் என்றும் அவர் குறித்துச் சொன்னார். வாதம், உடற் கடுப்பு உள்ளவர்களுக்கு மொடக்கொத்தான் நல்ல மருந்து என்றும் அவர் கூறினார்.

‘ஆயுசு நூறு’ கடைக் கஞ்சியில் சேர்க்கப்படும் மூலிகை வகைகள், ஒரு காலத்தில் குடியிருப்பு வளவுகளிலும், தெருவோரங்களிலும் தேவைக்கதிகமாகவே முளைத்துத் தளைத்துக் கிடந்தன. ஆனால், அவற்றின் பெருமைகள் குறித்து நாம் அலட்டிக் கொள்ளவேயில்லை. அதையும், தாண்டி இந்த வகை மூலிகைத் தாவரங்களை, நமது சமூகம் ஒரு காலத்தில் ஏழைகளின் உணவாகவும், எளிய உணவாகவுமே பார்த்தது. குப்பைமேனி சுண்டலுக்கு மிகவும் ருசியானது. அதில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. ஆனால், அதனை உணவுக்காக எடுத்துச் செல்வதற்கு பலரும் வெட்கப்பட்டார்கள். ‘எளியவர்களின் உணவு’ என்கிற அடையாளம் இவ்வகையான மூலிகைகளுக்கு இருந்ததால், வசதி படைத்தோர் அவற்றினைத் திரும்பிப் பார்ப்பதையே கௌரவக் குறைச்சலாக் கருதினார்கள். இதுவெல்லாம், 15, 20 வருடங்களுக்கு முந்தைய கதைகளாகும். இப்போது நிலைமை தலைகீழாக உள்ளது.

பரபரப்பான வாழ்க்கை முறைமை, ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உடனடி உணவுகள், முறையான சாப்பாட்டுப் பழக்கமின்மை மற்றும் உடல் – உள ஓய்வு இல்லாமை போன்ற – நவீன உலகின் அவலட்சணங்களால், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஏராளமான நோய்கள் உருவாகி விட்டன. குறிப்பாக, டயபடிக்ஸ் (சீனி நோய்) கொலஸ்ரோல் (ரத்தத்தில் அதிக கொழுப்பு) மற்றும் ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் தற்காலத்தில் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இயற்கையினைத் துறந்து, இயற்கைக்கு மாறான வாழ்க்கை முறைமைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டமையினால் வந்த வினைகள்தான் இவையாகும்.

மேற்படி நிலை காரணமாக, தான் தவற விட்ட – இயற்கையின் கொடைகளை மனிதன் இப்போது தேடத் தொடங்கியுள்ளான். ஒரு காலத்தில் ‘எளியவர்களின் உணவு’ என்று ஒதுக்கியவற்றினையெல்லாம், பணம் கொடுத்து வாங்கிப் புசிக்கும் நிலைவரம் உருவாகியுள்ளது. ஆனாலும், முன்பெல்லாம் கால்களுக்குள் கிடந்த இந்த வகை மூலிகைகள், இப்போது நினைத்த மாத்திரத்தில் பெற்றுக்கொள்ள முடியாமல் அருகிப்போய் விட்டன.

இதனால்தான், ஹமீட்டின் ‘ஆயுசு நூறு’ கடைக்கும், அங்கு விற்கப்படும் கஞ்சிக்கும் இத்தனை மவுசாக உள்ளது. 25 கிலோமீற்றர் தொலைவிலிருந்து வந்து – இந்தக் கஞ்சியினை வாங்கிக் குடித்து விட்டுச் செல்வதற்குப் பின்னால், இயற்கையினை நாம் புறக்கணித்த சாபம் மறைந்திருக்கிறது. பாலமுனையில் அமைந்துள்ள அந்த மூலிகைக் கஞ்சிக் கடை, நமது மூதாதையர்களின் உணவுப் பழக்கத்தின் பெருமையினைப் பறைசாற்றும் ஓர் அடையாளமாகத் தெரிகிறது.

இறைச்சியும், மீனும் புசித்துப் பழக்கப்பட்ட நாவுகளுக்கு, ‘ஆயுசு நூறு’ மூலிகைக் கஞ்சி வேறொரு அனுபவத்தைத் தருகிறது. நமது மூத்தம்மாக்களுடைய சமையலின் வாசத்தை, கொஞ்சமாகவேனும் இந்தக் கஞ்சி வழியாக நுகர முடிகிறது. கார்களில் வந்திறங்கி, அந்தக் கிடுகுக் கடையில் கஞ்சி பருகிப் போகின்றவர்களைப் பார்க்கும்போது, நாம் எதையெல்லாம் இழந்து விட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஹமீட்டுடைய மூலிகைக் கஞ்சிக் கடையில் நாம் இருந்தபோது, அங்கு வந்தவர்களில் மிக அதிகமானோர் இள வயதுடையவர்களாக இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாகரீகமாக உடுத்திக் கொண்டு வந்த பல இளைஞர்கள் ‘ஆயுசு நூறு’ கடையில் மூலிகைக் கஞ்சி வாங்கிக் குடித்து விட்டுச் சென்றமையினைக் காணக் கிடைத்தது. இயற்கையின் பெருமையை இளைய தலைமுறையினரும் உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளார்கள் என்பதை, அதனூடாக விளங்க முடிந்தது.

இவற்றுக்கெல்லாம் மறுபுறம், வெறும் இரண்டாயிரம் ரூபாய் முதலீட்டில், 60 வயதைத் தாண்டிய ஒரு மனிதன், நாளாந்தம் இரண்டாயிரம் ரூபாய் லாபம் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பது, தொழிலெதுவும் இல்லை என்பவர்களுக்கும், என்ன தொழில் செய்வது என்று குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் உற்சாகமூட்டும் ஒரு தகவலாகும்.

‘வித்தியாசமாகச் சிந்திப்பவர்களுக்கானது இந்த உலகு’ என்பதற்கு ‘ஆயுசு நூறு’ மூலிகைக் கஞ்சிக் கடையின் முதலாளி ஹமீட் நல்லதொரு உதாரணமாகத் தெரிகிறார்.

நன்றி: தமிழ் மிரர் (22 டிசம்பர் 2016)ayurvedic-06 ayurvedic-01 ayurvedic-02 ayurvedic-03 ayurvedic-05 ayurvedic-07

Comments

புதிது பேஸ்புக் பக்கம்