மொழியால் மீறப்படும் நீதி

🕔 November 17, 2016

article-r-098– றிசாத் ஏ காதர் – 

“உன் தாய் மொழி மதிக்கப்படவில்லை என்றால் உன் குரல் வளை நசுக்கப்படுகின்றது” என்கிறது, பிரான்ஸ் நாட்டுப் பழமொழி.
தாய்மொழி என்பது வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமல்ல, தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்படவேண்டியவை என பாடம் நடத்தினார் பாரதி.

மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளமாகும். இலங்கை பல்லின சமூகங்கள் வாழ்கின்ற ஒரு நாடு. பல்வேறு பட்ட மொழிகள் பேசப்பட்டாலும் சிங்களம், தமிழ் ஆகியவை பிரதான அரச கரும மொழியாக காணப்படுகின்றன.

நாட்டில் வாழுகின்ற பிரஜைகளுக்கு நான்கு வகையான மொழி உரிமைகள் அரசியலமைப்பினுடாக வழங்கப்பட்டுள்ளன. அவை கல்வி மொழி, நிருவாக மொழி, நீதி மொழி, சட்டவாக்க மொழி என்பனவாகும்.

விடயம் இவ்வாறிருக்க, தமக்கான நீதி மொழியினை இழந்து, 06 வருடங்களாக அலைச்சலுடனும், அவலங்களுடனும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகின்ற – இறக்காமம் பிரதேச மக்களின் பிரச்சினைகள் குறித்து இந்தக் கட்டுரை பேச முற்படுகிறது.

இறக்காமம் பிரதேசம் அம்பாறை மாவட்டத்திலுள்ள மிகப் பழமையான வரலாற்றினைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். இறக்காமம் பிரதேசத்தில் சுமார் 16ஆயிரம் பேர் வாழ்கின்றனர். இவர்களில் சிங்கள மக்கள் வெறும் ஆயிரத்துக்குட்பட்டவர்கள். தமிழர்கள் 350 பேர். ஏனையோர் அனைவரும் முஸ்லிம்கள்.

இறக்காமம் பிரதேசத்துக்கான நீதி நிருவாக எல்லையானது, அம்பாறை நீதிமன்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இணைக்கப்பட்டு 06 வருடங்களாகின்றன. அம்பாறை நீதிமன்றம் முற்றிலும் சிங்கள மொழியுடன் தொடர்புபட்டது. இறக்காமத்திலுள்ள மக்களில் 95 வீதத்துக்கும் அதிகமானோர் தமிழ் மொழி பேசுவோராக உள்ளனர். இதனால் இங்குள்ள மக்கள் நீதிமன்ற செயற்பாடுகளின் போது, பல்வேறு அசௌகரியங்களையும், பிரச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியுள்ளது.

இறக்காமம் பிரதேசமானது, தமண பொலிஸ் நிலையத்தின் நிருவாக எல்லையின் கீழ் உள்ளது. தமண பொலிஸ் நிலையத்தில் அரச கரும மொழிபெயர்ப்பாளர் இல்லை. முறைப்பாடுகள் எல்லாமே சிங்கள மொழியில் பதியப்படுகின்றன. தமிழ் மொழியில் கேள்வி ஞானம் மட்டும் கொண்ட சிங்கள மொழி பேசும் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் இங்கு இருந்துகொண்டு, தமிழ் பேசும் மக்கள் கூறும் முறைப்பாடுகளை கேட்டு, சிங்களத்தில் எழுதி உரியவர்களிடம் கையொப்பம் பெற்றுக்கொள்கின்றனர். சிங்களத்தில் எழுதப்பட்டுள்ள விடயம் என்ன என்று முறைப்பாட்டாளருக்குத் தெரியாது. இதுவே தமண பொலிஸ் நிலையத்தில் நடைபெறுகிறது.

இது மட்டுமன்றி, தமண பொலிசார் முழுமையாக சிங்கள மொழியிலே வழக்குகளை தாக்கல் செய்கின்றனர். அம்பாறை நீதிமன்றில் தற்போதுள்ள நீதிபதிக்கு தமிழ் தெரியாது. இங்குள்ள ஆவணங்கள் அத்தனையும் சிங்கள மொழியிலே காணப்படுகின்றன. சிங்களம் தெரியாத ஒருவர், சாதாரணமாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இந்நீதிமன்றுக்கு வந்து, தனது காரியங்களை முடித்துவிட்டுச் செல்வதில் ஏராளமான நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுவதாக இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டத்தரணி பாறூக் கூறுகின்றார்.

அம்பாறை நீதி நிருவாக எல்லை 07 பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் சாதராணமாக நாளொன்றுக்கு 200 தொடக்கம் 300 வரையிலான வழக்குகள் நீதிமன்றுக்கு வருகின்றன. வழக்குகளுடன் தொடர்புபட்ட நிலையில் இங்கு வருகின்ற சிங்களம் தெரியாத மக்களுக்கு, அங்கு பேசப்படுகின்ற விடயங்கள் என்னவென்றே தெரியாமல் உள்ளனர். தமக்கான அபராதம் எதற்காக விதிக்கப்படுகின்றது எனத் தெரியாமலேயே, பலர் தண்டப் பணம் செலுத்துவிட்டு வந்த கதைகள் ஏராளம் உள்ளன.

ஒரு சந்தேக நபருக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுப் பத்திரம், அவருக்கு தெரிந்த மொழியில் வாசித்துக் காட்டப்படுதல் வேண்டும். அது சந்தேக நபருக்கான உரிமையாகும். இதனை அம்பாறை நீதிமன்றில் துளியளவும் எதிர்பார்க்க முடியாது என்று சட்டத்தரணி பாறூக் கவலையுடன் கூறுகின்றார்.

தங்களுக்காக கிடைக்கப் பெறும் நீதியினை அல்லது அதன் தன்மையினை விளங்கிக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலையிலே, இறக்காமம் பிரதேச மக்கள் வாழ்கின்றனர். அது மாத்திரமன்றி அதனை விளங்கிக்கொள்ள மொழிபெயர்ப்பாளர்களையும் மக்கள் நாட வேண்டியுள்ளது.

அம்பாறை நீதிமன்றுடன் இறக்காமம் பிரதேசம் இணைக்கப்படுவதற்கு முன்னர், அக்கரைப்பற்று நீதி நிருவாக எல்லைக்குள் இருந்தது. அக்கரைப்பற்று நீதிமன்றம் தமிழ் மொழியில் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில்தான் இறக்காமம் பிரதேசம் அம்பாறை நீதிமன்றுடன் இணைக்கப்பட்டது. இறக்காமத்தில் வாழ்கின்ற ஆயிரத்துக்கும் குறைவான சிங்கள மக்களின் நலன் தொடர்பிலே கடந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தினார்கள். பெரும்பான்மையாக வாழ்ந்த முஸ்லிம் மக்கள் அல்லது தமிழ் பேசும் மக்கள் தொடர்பிலோ, அவர்களின் மொழி உரிமை தொடர்பிலோ ஆட்சியாளர்கள் அக்கறை செலுத்தவில்லை என்பது வேதனையான விடயமாகும்.

கல்வி, நீதி, நிருவாகம் மற்றும் சட்டம் என்பன ஒவ்வொரு சமூகமும் பேசுகின்ற மொழிகளிளே பிரயோகிக்கப்படுதல் வேண்டும். இவை சலுகைகள் அல்ல உரிமைகள். எங்கு உரிமை மீறப்படுகின்றதோ அங்கு போராட்டம் வெளிக்கிளம்பும். இலங்கையின் 30 வருட அசாதாரண சூழலுக்கு மிக முக்கிய காரணம் உரிமைகள் மறுக்கப்பட்டதேயாகும்.

மொழி உரிமை – இலங்கையின் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எந்தவொரு பிரசைக்கும், தனது இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் சிந்தனைகள் மற்றும் பிறப்பிடம் என்பவற்றின் அடிப்படையில் சலுகைகளை வழங்கவோ, வேறுபாடுகளை காண்பிக்கவோ முடியாது என்று அரசியலமைப்பின் உறுப்புரை 12(2) தெரிவிக்கின்றது. இது சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்தின் 2ம் உறுப்புரையை ஒத்ததாகும்.

குறிப்பாக அரசியலமைப்பின் 13ஆம் திருத்தமும், சட்டம் மற்றும் நீதிப் பொறிமுறைக்கான 1956ம் ஆண்டின் அரச கருமமொழிகள் சட்டம், விசேட வர்த்தமானி 1620/27 பொது நிர்வாக சுற்றரிக்கைகள் என்பனவும் மொழி உரிமைக்கு மதிப்பளிப்பவையாகும்.

பிணக்குகள் என்பது மனிதம் வாழுமிடமெல்லாம் இருக்கும் ஒரு விடயம். ஆவற்றை தீர்ப்பதற்கான வழிகள் ஒவ்வொருவருடைய ஆற்றலையும் கொண்டு வித்தியாசப்படுபவை. எல்லோராலும் எல்லா பிணக்குகளையும் தீர்த்துவைக்க முடியாது. அதற்கு ஏற்படுத்தப்பட்ட சிறப்பு நடைமுறைதான் நீதிமன்றம்.

நீதிமன்றங்கள் தகராறுகளை தீர்ப்பதில் முக்கிய இடம் வகிக்கின்றன. அனைத்து மக்களும் தமது உரிமைகளுக்காக நீதிமன்றை அனுகமுடியும். குற்றவாளிகளும் நீதிமன்றில் தமது எதிர்வாதத்தினை முன்வைக்கமுடியும். ஆனால் இறக்காமம் பிரதேச மக்களுக்கு இந்த உரிமை இல்லாமல் போய்விட்டது.

அம்பாறை நகரில் அமையப்பெற்றுள்ள நீதிமன்றம் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்கள மக்களை மையப்படுத்தியதாக காணப்படுகின்றது. இங்கு தமிழ் பேசும் மக்களின், மொழி உரிமையை எதிர்பார்க்க முடியாது. துரதிஷ்டவசமாக இறக்காமம் மக்கள் இதற்குள் அகப்பட்டு விட்டனர்.

அம்பாறை நீதிமன்றி;ல் தமிழ் மொழிபேசக் கூடிய சட்டத்தரணிகள் குறைவாகவே உள்ளனர். தமிழ் பேசும் சட்டத்தரணிகள் அம்பாறை நீதிமன்றுக்கு வருவதனை விடவும் தொழில் ரீதியான பலனை எதிர்பார்த்து வேறு இடங்களுக்கு சென்றுவிடுகின்றனர். இதனால் மக்கள் தமது முறைப்பாடுகளை பிரஸ்தாபிக்க அவதிப்படுவதாக, இறக்காமம் பிரதேச சமூக ஆர்வலரும் ஆசிரியருமான யு.எல்.எம். ஜிப்ரி கூறுகிறார்.

2011ம் ஆண்டு இப்பிரதேசத்தின் நீதி நிருவாக எல்லை மாற்றப்பட்டது. ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்த போது, சுற்றுலா நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும், அது இடைநடுவில் கைவிடப்பட்டது என்று ஆசிரியர் ஜிப்ரி கூறினார்.

இந்நாட்டில் அரச கரும மொழிகளை செயற்படுத்த, கண்காணிக்க தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சு என்ற பெயரில் ஒரு அமைச்சும் இயங்குகின்றது. அதற்கும் மேலதிகமாக அரசகரும மொழிகள் திணைக்களம், அரசகரும மொழிகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மொழிகளின் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் என்பனவும் பொறுப்பாகவிருக்கின்றன. ஆனால், இறக்காமம் மக்களுடைய பிரச்சினைகளுக்கு, இவை எதுவும் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கவில்லை.

எனவே, இறக்காமம் பிரதேசத்தின் நீதி நிருவாக எல்லை மாற்றப்பட வேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 2011ம் ஆண்டுக்கு முன்பிருந்தவாறு அக்கரைப்பற்று நீதிமன்றத்துடன் இறக்காமம் பிரதேசம் இணைக்கப்படுதல் வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். இல்லையாயின், சுற்றுலா நீதிமன்றம் ஒன்றினை இறக்காமத்தில் அமைத்துத் தருமாறு அவர்கள் கோருகின்றனர்.

நல்லாட்சி அரசாங்கமாவது கவனிக்குமா.

நன்றி: விடிவெள்ளி (16 நொவம்பர் 2016)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்