தனித்து விடப்பட்ட புத்தர்

🕔 November 3, 2016

article-mtm-098– முகம்மது தம்பி மரைக்கார் –

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையோடு அவர்கள் வந்தபோது, அச்சம் சூழ்ந்து கொண்டது. வணங்குவதற்கு யாருமற்ற ஓர் இடத்தில் கடவுளின் சிலையினை வைத்து விட்டுச் செல்வதற்கு பின்னால் வேறு காரணங்கள் இருந்தன. ‘பகைமையை பகைமையால் தணிக்க முடியாது, அன்பினால் மட்டுமே பகைமையைத் தணிக்க முடியும்’ என்று சொன்ன புத்த பெருமானின் சிலையை, பகையை ஏற்படுத்தும்படியாய் பயன்படுத்துவதென்பது மிகப்பெரும் முரண்நகையாகும்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மாணிக்கமடு கிராமம் – இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ளது. அங்கு தமிழ் மக்கள் வாழ்கின்றனர். மாணிக்கமடுவிலிருந்து சற்றே தூரத்திலுள்ளது மாயக்கல்லி மலை.

புத்தர் சிலையோடு கடந்த சனிக்கிழமை மாயக்கல்லி மலைக்கு ஒரு குழுவினர் வந்தனர். அவர்களில் கணிசமானோர் பௌத்த பிக்குகள். மாயக்கல்லி மலையின் உச்சியில், தாம் கொண்டு வந்த புத்தர் சிலையினை நிறுவி விட்டுச் செல்வதற்காகவே அவர்கள் வந்திருந்தனர்.

மாயக்கல்லி மலையைச் சூழவுள்ள எந்த இடத்திலும் பௌத்தர்கள் இல்லை. அதனால், வணக்க வழிபாட்டுக்காக அந்த இடத்தில் ஒரு புத்தர் சிலையை வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. மாயக்கல்லி மலையில், புத்தர் சிலையை நிறுவும் செயற்பாட்டுக்கு வேறு காரணங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்தல், அத்தனை சிரமமானதாக அந்தப் பகுதி மக்களுக்கு இருக்கவில்லை.

கடந்த சனிக்கிழமை காலை, மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையை நிறுவ வந்தவர்களுக்கும், மாணிக்கமடு கிராம மக்களுக்குமிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது. பௌத்தர்கள் யாருமற்ற, தமிழர்கள் மட்டும் வாழும் ஒரு பகுதியில் – புத்தர் சிலையொன்றினை வைப்பதற்கான தேவை குறித்து, மாணிக்கமடு மக்கள் கேள்வியெழுப்பினர். ‘நாங்கள் பௌத்தர்கள். இந்த நாட்டில், எந்தவொரு இடத்திலும் புத்தர் சிலையை வைப்பதற்கு எங்களுக்கு உரிமையுள்ளது’ என்று வந்தவர்கள் விடையளித்தார்கள்.

அதுமட்டுமல்லாமல், அங்கு வந்திருந்தவர்கள் – தாம் பெரும்பான்மையினத்து அமைச்சர் ஒருவரின் ஆட்கள் என்றும், தம்மை அறிமுகப்படுத்தியிருந்தனர்.

ஆட்சி மாற்றத்தின் பிறகு, ஓரளவு ஆசுவாசப்பட்டுக் கொண்டிருந்த சிறுபான்மை மக்களின் சந்தோசங்களில், இப்படிக் கல்லெறியும் காரியங்கள் மீளவும் நடந்து வருகின்றமை கவலைக்குரியதாகும். பித்துப் பிடித்தலைந்த பேரினவாதத்தை அடக்கி வைப்பதென்பது, அத்தனை எளிதான காரியமல்ல என்பதை, ஆங்காங்கே நடக்கும் நிகழ்வுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டிருக்கும் புத்தர் சிலையைக் கொண்டுவந்தவர்கள், அம்பாறை நகரிலிருந்து வந்திருந்தார்கள். மாயக்கல்லி மலையிருந்து கிட்டத்தட்ட 15 கிலோமீற்றர் தூரத்தில் அம்பாறை நகரம் அமைந்துள்ளது. இத்தனை தூரத்திலிருந்து வந்து, பௌத்தர்கள் யாருமற்ற ஒரு பகுதியில், புத்தர் சிலையை வைத்துவிட்டுப் போவதற்கு பின்னால், நியாயமான காரணங்கள் என்று எவையுமில்லை.

மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையை வைப்பதற்கான முடிவு, ஆற அமர இருந்து எடுக்கப்பட்டதாகும். இறக்காமம் பிரதேச செயலாளரை சிறிது காலத்துக்கு முன்னர் சந்தித்தித்த சிலர், குறித்த இடத்தில் சிலையொன்றினை வைப்பதற்கான அனுமதியைக் கோரியிருந்ததாகத் தெரியவருகிறது. ஆயினும், அதற்கான அனுமதியை பிரதேச செயலாளர் வழங்கியிருக்கவில்லை. அதையும் மீறியே அந்த இடத்தில் தற்போது சிலை வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களும், தமிழர்களும் வாழுகின்ற பிரதேசங்களில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவதென்பது புதிதல்ல. சிறுபான்மை மக்களின் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள், அம்பாறை மாவட்டத்தில் அடிக்கடி இடம்பெறுவதுண்டு. இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரச நிறுவனங்களும் துணையாக இருந்து வருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வனப் பாதுகாப்புத் திணைக்களம், வன விலங்குத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் ஆகியவற்றின் மீது, நேரடியாகவே இவ்வாறான குற்றச்சாட்டுகளை மக்கள் சுமத்தி வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். இங்கு முஸ்லிம்கள் வாழும் கணிசமான பகுதிகள் ஆக்கிமிப்புக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, சிங்களப் பகுதிகளை எல்லையாகக் கொண்ட முஸ்லிம் பிரதேசங்கள் கடுமையான நில ஆக்கிரமிப்பினை எதிர்கொண்டு வருகின்றன. பொத்துவில், அட்டாளைச்சேனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் மிக மோசமான நில ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ளன.

சிறுபான்மை மக்களின் பெருமளமளவான காணிகள், ‘புனித பூமி’ எனும் பெயரில், அம்பாறை மாவட்டத்தில் அபகரிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகளுக்கு தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் துணைபோவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, பொதுமக்களின் காணிகளை, தமக்குச் சொந்தமானவை என்று கூறிக் கொள்ளும் – வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர், அவற்றினை ஆக்கிரமிப்புச் செய்த சம்பவங்களும் உள்ளன. இவ்வாறு வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் சொந்தக்காரர்கள், அவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றம் சென்று, தமது காணிகளை மீட்டெடுத்துள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக்கிரமிப்புச் செய்யப்படும் சிறுபான்மை மக்களின் காணிகளில், பின்னர் பெரும்பான்மையினத்தவர்கள் குடியேற்றப்படுவார்கள். காலப்போக்கில், அங்கு பெரும்பான்மையினக் கிராமமொன்றே உருவாகி விடும். பிறகு, அங்கு மீளவும் ஒரு எல்லைப் பிரச்சினை உருவாகத் தொடங்கி விடுகிறது. பிறகு ஆக்கிரமிப்பு என்று, இது – நீளும் தொடர்கதையாகும்.

இவ்வாறு சிறுபான்மை மக்களின் காணிகளை ஆக்கிரமிப்புச் செய்யும் நடவடிக்கையின் ஆரம்ப செயற்பாடுகளில் ஒன்றாகவே, புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. பௌத்தர்கள் யாரும்; வசிக்காத, சிறுபான்மை மக்களின் பிரதேசத்தில், புத்தர் சிலைகளை அடாத்தாகக் கொண்டுவந்து நிறுவுதல், நில ஆக்கிரமிப்பின் ஆரம்ப கட்டமாகும். பின்னர், குறித்த சிலை வைக்கப்பட்ட இடத்தில் பௌத்த விகாரையொன்று நிர்மாணிக்கப்படும். அதன் பிறகு அந்த ஆலயத்தைப் பராமரிக்க ஒரு பிக்குவும், அவருக்கு பணிவிடைகள் செய்வதற்கு சிலரும் வருவார்கள். காலப்போக்கில், விகாரையைச் சுற்றிலும் குடியிருப்புகள் உருவாகும். பிறகு அது ஒரு கிராமமாக மாறிவிடும். இதனால்தான், புத்தர் சிலை வைக்கப்படும் ஆரம்ப செயற்பாடுகளின் போதே, சிறுபான்மை மக்கள் அச்சமடைவதோடு, அதனை எதிர்க்கவும் தொடங்குகின்றனர்.

இன்னொருபுறம், சிறுபான்மை மக்களின் இடங்களை அபகரிக்கும் செயற்பாட்டினை, மத நடவடிக்கை எனும் போர்வையில் நடத்துவதும் மிகவும் திட்டமிட்டதொரு செயற்பாடாகும். சிறுபான்மை மக்களின் நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் பேரினவாதிகள் வந்து, ஒரு எல்லைக் கல்லினை வைத்து விட்டுச் சென்றால், மறுநாள் அதை மக்கள் உடைத்தெறிந்து விடுவார்கள் என்பதை, சம்பந்தப்பட்டோர் அறிவார்கள். அதனால்தான் எல்லைக் கற்களுக்குப் பதிலாக, புத்தரின் சிலைகளை வைக்கின்றார்கள். அவ்வாறு வைக்கப்படும் சிலைகளை யாரும் சேதப்படுத்த மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதையும் மீறி, சிலைக்கு ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்து விட்டால், பிறகு – அதனை பௌத்த மதத்துக்கு எதிரான சம்பவமாக, பேரினவாதிகள் பிரசாரம் செய்யத் தொடங்குவார்கள்.

மாயக்கல்லி மலை அமைந்திருக்கும் இடம், தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினர் தமக்குத் சொந்தமானது என, எல்லையிட்டிருக்கும் ஒரு பகுதியாகும். தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினரின் பகுதியொன்றுக்குள் நுழைவதும், இவ்வாறானதொரு செயற்பாட்டில் ஈடுபடுவதும் சட்டவிரோதமானதொரு செயற்பாடாகும். அந்த வகையில், மாயக்கல்லி மலையில் சிலை வைத்தவர்களுக்கு எதிராக, தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தினர் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனாலும், இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை (புதக்கிழமை காலை 10.00 மணி), அவ்வாறான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றுதான் அறிய முடிகிறது.

இந்த நிலையில், மாயக்கல்லி மலையில் – புத்தர் சிலை அமைப்பதைத் தடுக்கும் வகையிலான சட்ட நடவடிக்கையொன்று இடம்பெற்றமை குறித்தும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சம்பவம் நடைபெற்ற தினத்தன்று, மாயக்கல்லி மலைக்குச் சென்றிருந்த தமண பொலிஸார், அங்கிருந்த முக்கிய பௌத்த மதகுருமார் மூவரிடம் நீதிமன்ற உத்தரவொன்றினை வழங்கியிருந்தனர். குறித்த இடத்தில், புத்தர் சிலை வைப்பதனைத் தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவே அதுவாகும். அம்பாறை நீதவான் நீதிமன்றம் அந்த உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

மாயக்கல்லி மலையடிவாரத்தில் பொலிஸாரையும், அவர்களின் வாகனங்களையும் சம்பவ தினத்தன்று கண்ட மாணிக்கமடு மக்கள், சிலை வைக்கும் நடவடிக்கைக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகவே பொலிஸார் வந்திருந்ததாக எண்ணிக் கொண்டனர். சில இணைய ஊடகங்களும் அவ்வாறே எழுதியிருந்தன. இந்த நிலையில், தமண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் சந்ரசிறியிடம் நாம் பேசினோம். ‘சட்டத்தை அமுல்படுத்துவதற்காகவே, நாங்கள்; அந்த இடத்துக்குச் சென்றோம். குறித்த இடத்தில் சிலையினை அமைப்பதைத் தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவை, அங்கு சென்று உரியவர்களிடம் கையளித்தோம். சிலை வைக்கப்படுவதற்கு முன்பாகவே, அதனை நாம் செய்தோம். ஆனாலும், நீதிமன்ற உத்தரவினையும் மீறி, அவர்கள் அங்கு சிலை வைத்து விட்டார்கள்’ என்று தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கூறினார்.

நீதிமன்றத்தின் உத்தரவினையும் மீறி, மாயக்கல்லி மலையில் புத்தர் சிலையினை வைத்திருக்கும் செயற்பாடானது சட்டவிரோதமானதாகும். சட்டத்தினை மீறி பௌத்த மதகுருமார் செயற்படும்போது, கடந்த ஆட்சிக் காலத்தில் பொலிஸார் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான், இப்போது நீதிமன்றின் உத்தரவினை மீறும் நிலைக்கு பௌத்த மதகுருமார் வந்துள்ளார்கள். இது ஆபத்தானதொரு நிலைவரமாகும்.

எவ்வாறாயினும், நீதிமன்றின் உத்தரவினை மீறிவர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை விசாரித்தறியும் பொருட்டு, தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை நேற்று புதன்கிழமை காலை தொடர்பு கொண்டு பேசினோம். நீதிமன்ற உத்தரவை மீறி, மாயக்கல்லி மலையில் சிலைவைத்தவர்களை, எதிர்வரும் 11 ஆம் திகதி, அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.

மக்கள் இன்னும் நம்பிக்கை இழக்காமல் இருப்பது நீதித்துறை மீதுதான். சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும் போது, இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற முடியாது. நீதிமன்ற உத்தரவினை மீறி, சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றபோது, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைத்து விடும் நோக்கில், பொலிஸார் தடியடிப் பிரயோகம் நடத்தியதோடு, கண்ண|Pர்புகைக் குண்டுப் பிரயோகங்களையும் மேற்கொண்டமையினை கடந்த காலங்களில் நாம் கண்டிருக்கின்றோம். ஆனால், நீதிமன்ற உத்தரவினையும் மீறி – மாயக்கல்லி மலையில் சிலை வைத்தவர்களிடம், நீதிமன்ற உத்தரவினை கையளித்ததோடு, தமது காரியம் முடிந்து விட்டது போல் பொலிஸார் நடந்து கொண்டமையானது, விநோதமான செயற்பாடாகும்.

மாயக்கல்லி மலையில் சிலையினை வைத்து விட்டுப் போனவர்கள் அதன்பிறகு அங்கு வரவில்லை. அவர்களின் நோக்கம் அத்துடத் முடிந்து போயிற்று.

அன்பினைப் போதித்த புத்தர், அச்சுறுத்தும் ஓர் அடையாளமாக – மாயக்கல்லி மலையின் உச்சியில் தனித்துவிடப்பட்டுள்ளார்.

நன்றி: தமிழ் மிரர் (03 நொவம்பர் 2016) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்