முஸ்லிம் காங்கிரஸ் தவறி விட்டது: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான்

🕔 September 30, 2016

Abdur Rahman - 0136ல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பலனாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை அடைந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில்  தேர்தலுக்குப் பின்னர் – தாம் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு தவறி விட்டது என்று அந்த முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான கூட்டணிகளை,   மு.காங்கிரசுடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது கடுமையாகப் பாதித்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

தொலைக்காட்சியில் இடம் பெற்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அண்மையில் பங்கு பற்றிய சந்தர்ப்பத்திலேயே பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.

“கடந்த பொதுத் தேர்தலின் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கும், மு.கா.வுக்கும் இடையில் மேற் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில், தேர்தலுக்குப் பின்னர் மு.கா.வின் நடவடிக்கைகள் திருப்திகரமாக இருக்கிறதா என  கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அப்துர் ரஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“ஒரு ஜனநாயக அரசியல் சூழலில் அரசியல் கட்சிகளின் கூட்டணிகள், கூட்டு முயற்சிகள் என்பன தவிர்க்க முடியாதவை. ஆனால்,  அவ்வாறான கூட்டணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற ஒரு அடிப்படைப் பார்வை எம்மைப் பொறுத்த வரையில் இருக்கிறது.

அதாவது, அதிகாரங்களையும், பதவிகளையும் மாத்திரம் கட்சிகளுக்கிடையில் பங்கு போடுகின்ற கூட்டணிகளாக அல்லாமல் மக்களின் நலன்களை கூட்டிணைந்த உழைப்பின் மூலமாக வென்றெடுக்கின்ற கூட்டணிகளிகளாகவே அவை இருக்க வேண்டும். இந்த அடிப்படையிலேயே பல்வேறு கட்சிகளுடனும் பலவகையான கூட்டணி ஒப்பந்தங்களை நாம் செய்துள்ளோம். வட மாகாணத்தில் நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்போடு செய்து கொண்ட ஒப்பந்தம் இதற்கு நல்ல உதாரணமாகும்.

வட மாகாணத்தில் நாம் பெரும் அரசியல் ஆதரவுத்தளத்தைக் கொண்டிருக்காவிட்டாலும் கூட, தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கிய போனஸ் ஆசனத்தின் மூலமே, எமது உறுப்பினர் வடமாகாண சபையில் அங்கத்துவம் வகிக்கிறார். ஆனாலும் கூட மக்களின் நலன்களை முதன்மைப்படுத்துவதற்கு அவசியமான  எமது சுயாதீனத்தை நாம் எப்போதும் விட்டுக் கொடுக்கவில்லை.

வட மாகாண சபையில் அரசியல் தீர்வு பற்றிய பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, அதில் எமது மக்களுக்கு பாதகமாகக் காணப்பட்ட அம்சங்களை நாம் மாத்திரமே எதிர்த்தோம். ஏனைய முஸ்லிம் பிரதிநிதிகள் அவ்வாறு எதனையும் செய்யவில்லை. இதிலிருந்து கூட்டணிகளின் ஊடாக சமூக நோக்கத்துக்கு நாம் கொடுக்கின்ற முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். அந்த அடிப்படையிலேயே மு.காங்கிரசுடனான ஒப்பந்தத்தையும் நாம் மேற் கொண்டோம்.

இதன் பிரகாரம் இரண்டு கட்சிகளுக்கும் பல்வேறு கடமைகளும் பொறுப்புக்களும் இருக்கின்றன. தேர்தலுக்கு முந்திய கடமைகள் தேர்தலுக்குப் பிந்திய கடமைகள் என இரண்டு வகையான கடமைகள் இருக்கின்றன. தேர்தலுக்கு முன்னரான எமது கடமைகளை நாம் நூறு வீதம் நிறைவேற்றியுள்ளோம். அதன் பலனாக மு.காங்கிரஸ் உச்சகட்டப் பிரயோசனத்தை அடைந்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனியாக நின்று முழுவீச்சுடன்  போட்டியிட்ட மு.கா.வினால் 23,000 வாக்குகளையே பெறமுடிந்தது. ஆனால், கடந்த பொதுத் தேர்தலில் எம்முடன் கூட்டிணைந்ததன் காரணமாக வரலாற்றில் எப்போதுமே பெற்றிராத அளவுக்கு 38,500 வாக்குகளை பெற முடிந்தது.

கடந்த தேர்தலில் 32000 வாக்குகளைப் பெற்ற ஐ.ம.சு.முன்னணியினால் கூட நாடாளுமன்ற ஆசனம் ஒன்றைப் பெறமுடியவில்லை. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடனான கூட்டணி இல்லாது போயிருந்தால், மு.கா.வினால் ஆசனம் ஒன்றைப் பெற்றிருக்கவே முடியாது என்பதனை பொதுப் புத்தியுள்ள எவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்த ஆசனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெறப்பபட்ட சாதாரண ஒரு ஆசனம் கிடையாது. முழு இலங்கையிலும் மு.கா.வின் சொந்தப் பெயரில் பெறப்பட்ட ஒரேயொரு ஆசனம் இது மாத்திரமேயாகும்.  ‘நாடாளுமன்றத்தில் ஆசனத்தினைக் கொண்டுள்ள கட்சி’ என்கின்ற அந்தஸ்த்தும் கூட இந்த ஆசனத்தின் காரணகவே மு.கா.வுக்குக் கிடைத்துள்ளது.

இப்படியாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியுடனான கூட்டணி மூலமாக உச்சக்கட்டப் பிரயோசனத்தை மு.கா. அடைந்து கொண்டுள்ளது. அப்படியிருந்தும் குறித்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை தேர்தலுக்குப் பின்னர் ஏறத்தாள 100 வீதம்  மு.காங்கிரஸ் மறந்து விட்டது. இது ஒரு ரகசிய ஒப்பந்தம் கிடையாது. மிக பகிரங்கமாகவே இது கைச்சாதிடப்பட்டு தேர்தலுக்கு முன்னரே அனைத்து மக்களோடும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும்.

இது தொடர்பில் பல ஞாபக மூட்டல்களை மு.கா. தலைமைத்துவத்திடம் பல வழிகளில் செய்திருக்கிறோம். ஆனால் அவை பற்றி எதையும் பொருப்படுத்தாது மு.காங்கிரஸ் மிக அசிரத்தையாகவே இதுவரை நடந்து கொண்டு வருகிறது. மொத்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்பில் மு.கா.வுக்கு இருக்கும் கடமைகளை நிறைவேற்றுவதில் அந்தக் கட்சி படுபயங்கரமாக தவறியிருக்கிறது.

எதிர்வரும் காலங்களில் பொது நோக்கங்களுக்கான இது போன்ற  கூட்டணிகளை மு.கா.வுடன் செய்யக்கூடிய நம்பகத் தன்மையினை இது கடுமையாகப் பாதித்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது கடமையினை முழுமையாக நிறைவேற்றியிருக்கும் நிலையில், இந்த ஒப்பந்தம் முறிவடைந்தாலோ அல்லது இது போன்ற பொது உடன்பாடுகளை எதிர்காலங்களில் செய்ய முடியாது போனாலோ அதற்கான முழுப் பொறுப்பையும் மு.காங்கிரஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்